எனக்கு நீ!…❤
இதயத்தில் அமர்ந்திருக்கும்
உதயகால
பனிபூத்த ரோஜா நீ!
விழித்திரை அமர்ந்து
வசந்த வழிகாட்டும்
ஒளிமிகு தீபம் நீ!
வான்வெளியில்
மேகம் வரையும்
சுதந்திரப் பொன்னோவியம் நீ!
அன்பைச் சுமந்து
ஆனந்தம் கரையேற்றும்
அலைகடல் ஆர்ப்பரிப்பு நீ!
நீர்தெளித்த முற்றத்தில்
பிரம்மனால் வரையப்பட்ட
புத்தம்புதுக் கோலம் நீ!
உள்ளம் நிறைக்கும்
கள்ளமில்லா
முல்லைச் சிரிப்பழகு நீ!
உன் இரு விழிகளால்
என் கவிதைகளை உருவாக்கும்
உள்ளொளி நீ!
சிந்தை நுழைந்தென்
சித்தம் கலங்கடிக்கும்
புத்தம்புது மலர் நீ!
இமைகளின் துடிப்பினில்
மனதை இயங்கவைக்கும்
மாயக்காரி நீ!
எந்தன்
எண்ணங்கள் சூழ்ந்து நிற்கும்
சந்தன வாசம் நீ!
அன்பெனும் ஆகாயவெளியில்
என்னைமட்டும் பறக்க விட்டு
ஆனந்தம் கொள்பவள் நீ!
அமுதமொழி உச்சரிக்கும்
அதரங்கள் கொண்ட
குமுத மலர் நீ!
எனக்கு நீ
எல்லாமும் நீ
தயக்கம் வேண்டாம்
தந்துவிடு இதயத்தை
பிழைத்துக் கொள்கிறேன் நான்!
————————————
பாப்பாக்குடி இரா.செல்வமணி
————————————-