கவிதை சாரல்…

0
48

உறங்கும் என் மனமதை கிள்ளிவிட்டு
எண்ணகலடங்கா கவிதைகளை
காதோரம் கிசுகிசுத்துவிட்டு
மறைகிறதொருக் கவிதை சாரல்…

மழையில் நனையும் ஆசையை
குடைக்குள் மறைப்பது போல
என்றோ என்னுள் விதைக்கப்பட்ட
கருக்களுக்கெல்லாம் கால் முளைத்துவிட
மனதைக் கிழித்து முட்டி மோதி வெளிவந்து
சிறு கவியாகத் துளிர்விட்டு
வெளியுலகை எட்டி பார்கிறது…
அதுவரை வறண்டிருந்த என்னிதயமதில்
மெலிதாய் ஈரம் பரவும்…

தூரலில் துவங்கி
சாரலில் தொடரும் மழையெனவே
என்னுள் ஊற்றெடுக்கிறது
உணர்வுகளின் சாயலாய்
உள்ளத்தின் பிரதிபலிப்பாய்
கவிதை சாரல்…
இதோ…
தேன் தொட்டும் தீ தொட்டும்
கிறுக்கல்களில் தொடங்கிய
எனது எழுத்துருக்கள்
வடுக்களாய் தொடர்கிறது
முற்றுப்புள்ளியின்றியே…

ஆம்….
அண்டவெளிதனை ஆக்கிரமிக்க
அவாக்கொண்டே அலைந்து
அகிலமெங்கும் கவிதைக் கருக்களை
தூவிச் செல்ல…
கவிதை சாரலாய் மலர்கிறதிங்கே
புதுக்கவிதைகள்…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here