கவிஞர் தங்கேஸ் கவிதைகள் பகுதி – 02

0
132

கவிதை 1

நட்ட நடு நிசி தாண்டியும்
நிற்காமல் நீளும்
உருவமற்றதொரு நாயின் குரைப்பு
இந்தத் தெரு நிறைத்து
சுழலும் சருகாகி
காற்றோடு போகிறது
தனிமையின் வன்மமோ
இணையற்ற துயரமோ
நடனமிடும் நிழல்களென ஊசலாடும்
ஆன்மாக்களின் அதீதமோ
அடிவயிற்றில் கனன்று எழும்
அக்கினியின் உக்கிரமோ
கருணையற்ற காலத்தின் மீது
வீசும் சாபமோ
அல்லது
இந்த தெருவின் விகசிப்பே தானோ
என்னவோ யார் கண்டது ?

கவிதை 2

திட்டமிட்டு தன் பறத்தலை துவக்காத சின்னஞ்சிறிய பறவை ஒன்று
தன் பால்ய சிறகுகளால்
இந்த விண்ணின் மீது விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளை
ஒரு கடைசி மழைத்துளி போல
இப்புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும்
வெளிச்சக்கீற்றை
தன் குட்டியூண்டு அலகால்
கொத்திக்கொண்டு செல்கிறது
சலனமற்று

கவிதை 3

கடைசி படி ஏறி முடித்ததும்
இருளுக்குள் குதித்து விட்டது என் நிழல்
என் ஆகச்சிறந்த எதிரியே
உனக்கு யார் வெளிச்சமென்று பெயரிட்டது?

கவிதை 4

வாஞ்சை
இரண்டு கண்கள் தான் என்றாலும் அத்தனை பிள்ளைகள் மீதும் சமமாக பதித்திருப்பார்
ஒரு வாய் குறைவாக சாப்பிட்டாலும்
உடம்பு என்னத்துக்கு ஆகும்
உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று
கோபித்துக் கொள்வார்
சுடு சோறே மீதியிருந்தாலும்
பழைய கஞ்சி தான்
ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி
நகரத்துக்கு பிழைப்பு இடம் பெயர்ந்தாலும்
மனது இடம் பெயரவில்லை
நத்தை வேகத்தில் ஊர்ந்த காலம்
எப்படி கள்ளப் பருந்தாய் மாறி
தன் கூரிய அலகுகளில் நம்மை கொத்திக் கொண்டு உயர உயரப் பறக்கிறது
இரையாக மறுக்கும் நாட்களில்
திசைக்கொருவராய் தூக்கி எறிந்து விட்டு
வேறு இரை தேடிப் பறக்கிறது
பந்துக்குப் பத்து படுக்கையறையில்
டிவி பெட்டி வரவேற்பறையில்
மடித்த கையே தலையணையாகும்
கையறு நடு ராத்திரியில்
உடம்பு என்னைத்துக்கு ஆகும்
உடம்பு என்னத்துக்கு ஆகும்
என்ற அப்பாவின் குரல் கேட்கும்
மெல்லிய சிலந்தி வலை போன்ற
தொலைபேசி உரையாடல்களின் வழியே
எங்கள் பால்யத்தை மீட்டெடுக்கும்
நாளொன்றில் வந்து சேர்ந்தது
அவசர செய்தி
அத்தனை வயர்களுக்கும் மத்தியில்
செயற்கை சுவாசத்தில் உயிர்த்திருக்கும்
அப்பா எங்களுக்காகவே
உயிரைப் பிடித்து வைத்திருந்தார்
நெடிதுயர்ந்த தென்னையை
அரிக்கும் விஷப்பூச்சியாய்
மரணம் அவரை அரித்திகுந்தது
முற்றிய தேங்காயாக முகம் மாறியிருக்க
கரையோரம் ஒதுங்கிய நுரையாக
தலை பூத்திருந்து
வானமென்று நான் ஏறி குதித்த தோட்கள்
உட்புறம் அம்பாய் குவிந்திருந்தன
கடைசியாக பாக்குறவங்க ஒரு தடவை பார்த்துக்கோங்க
இறுதிப் பறத்தலுக்கு தயாரான பறவை
கடைசியாய் ஒரு முறை சிறகடித்துப் பார்க்கிறது
தூரமான மிகத் தூரமான காலத்திலிருந்து
மனதின் ஆழத்திலிருந்து
மீட்டெடுத்து வரும்
ஒரு மெலிந்த நீனைவு
தஞம்பி நிற்கும் கண்ணீர்
உதிர்ந்து ஒடுகிறது
இரண்டு கண்கள் தான் என்றாலும்
அத்தனை பிள்ளைகள் மீதும்
பார்வை பதித்திருந்தார்
இது எங்கள் முறை
இந்த உடம்பு எதுக்கு ஆகிறது
இந்த உடம்பு எதுக்கு ஆகிறது ?

கவிதை 5

சொற்றொடரிலிருந்து
ஒலிக்குறிப்பாகி
ஒலிக்குறிப்பிலிருந்து
மெளனமாகி
மௌனம் திறக்கும்
மகா சந்நிதானத்தில்
இதயத்தின் துடிப்போசையாகி
துடிப்போசையை தவிர
கேட்பதற்கு வேறு ஏதுமில்லை என்றாகி
முடிகிறது இந்தக் கவிதை

சிவப்பு தீற்றல் கொண்ட விண்வெளியின் பிண்ணனியில்
இருசிறகுகளையும் முற்றாக விரித்த
வெண்பறவையின் காட்சிப் படிமத்தை
நீங்கள் கண்கள் மூடி கண்டு கொண்டால் போதும்
அதன் ஆகப் பெரும் நிழல்
உங்கள் ஆன்மாவின் மீது
அசைய ஆரம்பித்துவிடும்

சலனமற்று பாவி வரும் நதியில்
நனைந்த உங்கள் விரல்களை
கரையோர மணலில் புதைத்து விட்டு
காத்திருந்தால்
விரலிடுக்ககளில் உருளும்
மணந்துகள்களோடு
மேவிப்போகும் நதிநீர்
உங்கள் பெயரை உச்சரித்தபடியே
கடலில் கலந்துவிடும்
ஓர் நாள்

கவிதை 6

ஒரு கவிதை சட்டென இழையறுந்த கணத்தில்
தலைக்கு மேலே சிறகடித்துப் பறந்தது
சாம்பல் புள்ளிகள் வெண்சிறகில் கொண்ட
கொள்ளை அழகுப் புறா ஒன்று
புறாவைப்பார்த்த கணத்திலே
ஏதேச்சையாய் தென்பட்டது
நதியென சுழித்தோடும் மேகம்
நடுவில் அடர்நீலம்
சற்றுத் தள்ளி சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்களிலொன்று
என்னையே வெறித்துக்கிடப்பதைக் கண்டு
திகைப்புற்ற நான்
எத்தனை காலம் தான்
உன் மடியிலமர்த்திக்கொள்ள
என்னை விழுங்கிவிடுவதுபோல்
பார்த்துக்கொண்டிருக்கிறாயோ
என்று அரற்றினேன்
பதிலுக்கு அது
சிட்டுக்குருவியின் விரிந்த சிறகில்
ஓர் இறகாகி பறக்கும் கொடுப்பினை
உனக்கு இல்லையென்றாலும்
இந்த அழகு மைனாக்களின்
கீச்சு மொழி எதுவும் புரியாமல் போனாலும்
காற்றில் இறகுகளால் சுதந்திரக்கொடியேற்றும்
பட்டாம் பூச்சியின் இறகு ஒன்றும்
இது வரை உன் முகத்தருகே
வந்து போனதில்லையென்றாலும்
திக்கற்ற பயணம் போகும்
இந்த மேகங்களின் பின்னால் மட்டுமே
போனால் தான் போதாதோ
என்றது

கவிதை 7

மெளனத்தின் சாற்றை உறிஞ்சி
என் செடியில் பிரத்யேகமாய் பூக்கும் பூக்களெல்லாம்
அசல் உன் சாயல் தான்
நெளிந்தோடும் மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பின்னால்
அசைந்தாடும் திரைக் சீலைக்குள் கதிரவன்
முக்கால்வாசி முகம் மறைத்த பின்பு
மிச்சமிருக்கும் மருதாணிச் சிவப்பு
அப்படியே ஒடி வந்து ஒட்டிக் கொண்டது
எனக்குள்
நீ என்னைப் பார்த்த நொடியில்

கவிதை 8

புலம்பெயர்ந்த பறவையின்
வலி அறியும் சிறகுகள்
நிராகரிக்கும் கருப்பு வானத்தின் மீது கசப்பு முத்தங்களை உமிழ்ந்துவிட்டு தன்வழியே போகின்றன
இறுதி யாத்திரை

கவிதை 9

மரத்திற்கு பெயர் சூட்டுவது
ஒரு முடிவற்ற வாக்குவாதமாக
வளைந்து வளைத்து நீண்டு கொண்டிருந்தது அந்த வீதி
நிலவொளி இராத்திரியில்
இந்தக் கவிதை கூட
ஒரு சிறிய உரையாடலை விட சற்றும்
மேம்பட்ட தல்ல
நீ உன் உலகப் புகழ் பெற்ற மூக்கை
இதில் நுழைக்க வேண்டாம்
என் மேதமையான நண்பனே
(முகமது பஷீர் கோபித்தாலும்கோபித்துக் கொள்ளப் போகிறார்)
நான் எதையும் தேடிக் கொண்டு போகிறவனல்ல என்றாலும்.
போகும் போதே என்னை தொலைத்து விட்டு
பின்பு வந்து தேடிக் கொண்டிருப்பவன்
மனிதர்கள் எவரும் எதிர்ப் படுவாரா என எண்ணியபடி
நான் நடக்க
எதிர்ப் பட்டதெல்லாம் நாய்கள் மட்டும்தான்
தனியாக ஒரு புதிய பாதையில் பயணிக்க நேர்ந்த ஒருவனைப் பார்த்தால்
குரைக்கும் புத்தியை
எப்பொழுது தான் கைவிடப் போகின்றனவோ
இந்த நாய்களெல்லாம்
(குரைக்க வேண்டியவர்களைப்பார்த்து குரைக்காமல் விட்டு விடும் லட்சணம் தான் வேறு)
நடந்து கொண்டிருந்தவன்
ஒரு வீட்டு வாசல் முன்
சற்று கண்ணயர்ந்து கொண்டிருந்த
ஒரு வேப்பமரத்தின் கீழ் தானாக ஈர்க்கப்பட்டேன்
வெள்ளை வெளேர் நிலவொளியை
ஒவ்வொரு கணுவிலும் தாய்ப்பாலாய்
துளிர்த்து நிற்கும்
முற்றிய தழும்பேறிய
கரங்களைப் பிடித்து உன்மத்தமாய் முத்தமிட
என் இதழ்களிலும் துளிர்த்தனஇரண்டு மூன்று சொட்டுகள்
இனி போகுமிடம் ஏதுமில்லை
என்று தானாய் திரும்புமுன்
வேப்ப மரத்தின் காதுகளில்
அந்தப் பெயரை
இரகசியமாய் கிசு கிசுத்தேன்
தழும்பேறிய கரங்களை
வருடிய படியே

கவிதை 10

விழிகளை நோக்கிய கணம்
கால மற்ற பெருவெளிக்குள் இழுத்துச் செல்லும்
என் ஆகர்ஷணமே !
எதுவுமற்றுப் போன பின்பும்
கண் திறக்காத பூனைக்குட்டி
தாயை சுற்றி வந்து
முகத்தால் உரசுவதைப் போல
உன்னைச் சுற்றியே சுற்றியே வட்டமிடுகிறதே
என் மனது.
கீச்சுக்குருவியின் இத்தனை இரைச்சல்களுக்கு மத்தியிலும்
நீ திறக்கும் மகா சன்னிதானத்தில்
லயித்து விடுவதற்கே
ஒலிகளற்ற உலகத்தில்
முகிழ்த்திருக்கிறேன் கடல் பாசியாக
என் வினாக்களுக்கெல்லாம்
பசுந்தளிர் ஒன்றின் நுனியை
கிள்ளித்தரும் மெளனமே
நீ தான் மாசற்ற அமிழ்தமோ!

கவிதைகள் தொடரும்…..

 -கவிஞர் தங்கேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here