ஒரு கவிஞனின்
வீட்டினுள் சென்று
பார்க்க வேண்டும்…
இந்த கவிஞன்
அத்தியாவசிய யதார்த்த
உரையாடல்களை
எப்படி நிகழ்த்துவான் என்று
தெரிந்து கொள்ள வேண்டும்
பழைய சோற்றை
எவ்வாறு கேட்பான்
நேற்று மிஞ்சிய அமிர்தம் என்றா?
படிக்காத பிள்ளையை
எப்படி திட்டுவான்
ஐந்தறிவு அற்புதமே என்றா?
கால்தடுக்கிவிட்டால்
யாரை கூப்பிடுவான்
துணைக்காலான தமிழே என்றா?
விக்கலுக்கு தண்ணீர்
எப்படி கேட்பான்
உயவு அமிர்தம் என்றா?
உறவினர்க்கு எவ்வாறு
கடிதம் அனுப்புவான்
கடித அகராதி இணைத்தா?
காய்கறிகாரனிடம்
எவ்வாறு பேரம் பேசுவான்
சொல்லிக் கொடு என்றா?
ஒரு கவிஞனின்
வீட்டினுள் சென்று
பார்க்க வேண்டும்…
ம. வினு மணிகண்டன்