#கலைத்துறை_என்றும்_கவலைத்துறையா?
கலையார்வம் காரணமாக மற்ற தொழில்களை அறியாமல் போனவர்களுக்கு கொரோனா தொற்றுக் காலகட்டம் எண்ணற்ற பிரச்சனைகளை தினம் தினம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
சினிமா தயாரிப்பு நிறுவனங்கள்,அச்சு இதழ்கள்,வானொலி,தொலைக்காட்சி சேனல்கள் எங்கும் எதிலும் சம்பளக்குறைப்பு,பணியாளர்கள் வேலை நீக்கம் என வாழ்வாதாரம் சீர்குலைந்து போய்விட்டது.
சட்டதிட்டங்கள் எதையும் மதிக்காமல்,மனிதாபிமானம் கிஞ்சித்தும் இல்லாமல் தம் ஊழியர்களை கஞ்சிக்கு அலைய வைத்த கோடிஸ்வர நிறுவனங்களை பார்த்தாலே வயிறு எரிகிறது.
பல பேர் மனப்போராட்டத்தில் உடல் நலத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்.
உணவு,உடை,உறைவிடம் எல்லாவற்றுக்கும் சிக்கல் என்றால் இந்த உயிர் எதற்கு என்று அலர வைக்கிறது அல்லல் நிறைந்த வாழ்க்கை.
மேடைக் கலைஞர்களின் வாழ்வோ சொல்வே வேண்டாம்,முற்றிலுமாக கையறு நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
இந்த ஊடகம் மற்றும் கலைத்துறை மக்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப் போகிறது.
இளமையையும்,இரத்ததையும் உறிஞ்சிக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு எதிராக போராடக் கூட வாய்ப்பில்லாத சூழலில் அந்த பணியாளர்களின் குடும்பங்கள் எத்தனைப் பாடுபடும்?
தினத்தந்தி, விகடன்,இண்டியன் எக்ஸ்பிரஸ்,புதிய தலைமுறை என பல நிறுவனங்களின் மனிதாபிமானம் பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றுவிட்டது.
தினத்தந்தி குழுமத்தின் வானொலியான ஹலோ FM இந்தியாவின் நம்பர் ஒன் தனியார் வானொலி என்று தன் நாளிதழில் ஒரு பக்க கலர் விளம்பரத்தைப் போட்டுவிட்டு பின் வந்த ஒரே வாரத்தில் 70 சதவீத ஆட்களிடம் சகட்டு மேனிக்கு கையெழுத்து வாங்கிக்கொண்டு மூன்று மாத ஊதியத்தைக் கூட இழப்பீடாக வழங்காமல் தன் கதவை சாத்திக் கொண்டது.
விகடன் 33% இட ஒதுக்கீடு என்பது போல இட ஒழிப்பீடு நடத்தி தன் நிறுவனத்தை மட்டுமே வாழ்வென கருதிய கர்ம வீரர்களை டாடா காட்டி அனுப்பிவிட்டது.
கொரோனா கொடுமையிலும் அவர்கள் வீதியிலிறங்கி போராடியதற்கு எந்த விடையும் கிடைக்கவில்லை.
கலைஞர்கள் வேலையிழந்த ஊடகத் துறையினர் வாழ்வதற்கு எங்கே போவது?
மத்திய மாநில அரசுகள் இந்த ஊடகத்துறை மக்களைக் காக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது?
முன்னதாக அறிவிக்கப்பட்ட வீட்டுக்கு ஒருகிலோ கொண்டைக் கடலை கூட வந்துசேராத போது எந்த திட்டங்கள் எம்மவர்கள் வாழ்வை மீட்கப் போகிறது?
– காரைக்கால் கே.பிரபாகரன்