கர்வம் பிடித்த கவிஞன்… !

0
11

கர்வம் பிடித்த கவிஞன்

எந்தவொரு கவிஞனுக்கும்
ஓர் கர்வமுண்டு….
அது தன் எழுத்துக்களின் மீதுள்ள
போதையே தவிர
அகந்தை அல்ல….

தன் எழுத்துக்களின் மீதுள்ள
அதீத பிரியம்….
யார் ரசிக்கிறார்களோ இல்லையோ
ஓர் கவிஞன் ரசித்துதான் எழுதுவான்…

சிந்தனைகளை சிதற விடாமல்
சிப்பிக்குள் முத்தைப் போல
சிக்கென பொருத்திவிடுவதில் வல்லவன்…

தன் பேனாமுள் கூர்வாளாய் மாறி
ஏதோவொரு மாற்றத்தை
சமுதாயத்தில் ஏற்படுத்திவிடாதா
என்றவொரு ஏக்கம், ஆதங்கம்…
ஒவ்வொரு கவிஞனுக்கும் உண்டு…

எழுத்தென்பதே போதை தானே..
சிலருக்கு காதல் கசிந்துருகும்
சிலருக்கு பக்தி பரவசமடையும்
சிலருக்கு அரசியலை அலச பிடிக்கும்
சிலருக்கு ரௌத்திரம் பழக பிடிக்கும்
சிலருக்கு இயல்பாய் இயற்றிட வரும்
சிலருக்கு கிராமத்து மணம் கமழும்
சிலருக்கு உரைநடையில் உறைந்திட பிடிக்கும்
சிலருக்கோ அத்துனையும்
அத்துப்படியாய் இருக்கும்…

எழுத்தென்பது அவ்வளவு எளிதல்ல
ஒரு தாய் பிள்ளையை பிரசவிப்பதுப் போல…
மரத்திலிருந்து மலர் உதிர்வதுப் போல
ரோஜா மொட்டவிழ்வதுப் போல
முட்டையிலிருந்து முட்டி மோதி
ஓர் உயிர் வெளிவருவதுப் போல
மிகவும் நேர்த்தியானது…..

ஒரு படைப்பை பிரசவிக்கும்
கவிஞனுக்கே தெரியும்
அதன் உயிர் வலி….
பின்னோட்டமே அக்கவிஞனின்
உயிரோட்டம்…
விமர்சனங்களை முள்கிரீடமென
சுமந்து திரிவதால்
கவிஞனுக்கு கர்வமென்பது
இயல்பு தானே….

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here