ஓணம் ஸ்பெஷல் ! 31.08.2020

0
106

ஓணம் ஸ்பெஷல் ! 31.8.20

கேரளாவின் மிகப்பெரிய பண்டிகை ஓணம்.
சாதி மத பேதமின்றி கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.

கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன.

ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது

10 நாள் திருவிழா

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.

ஓணம் வரலாறு

கேரளாவில் அமைந்த திருக்காட்கரை என்னும் திவ்யதேச ஸ்தலத்தில்தான், ஓணம் பண்டிகையின் வரலாறு தொடங்குகிறது. மகாபலி சக்கரவர்த்தி என்னும் அசுரர் குல மன்னன் பூவுலகத்தை ஆண்டு வந்தார். தனது வீரத்தால், அவர் தேவலோகத்தையும் கைப்பற்றினார். இதனால், பதற்றம் அடைந்த இந்திரன் நாராயணனிடம் முறையிட்டார். அதற்கு க்ஷீராப்திநாதன் “கவலை கொள்ள வேண்டாம் தேவேந்திரா, யாமே பூலோகத்தில் அவதரித்து உனக்கு தேவலோகத்தை மீட்டுத் தருகிறேன்” என்றார். சொன்னபடி, காஷ்யப மகரிஷிக்கும் அதிதிக்கும் வாமனனாகத் தோன்றினார்.

பின்னொருநாளில், மூவுலகையும் தன்னுடைய குடையின் கீழ் ஆளுவதன் பொருட்டு, மகாபலி யாகம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த யாகத்தில், அந்தணர்கள் விரும்புவதை மகாபலி தானமாகக் கொடுத்தார். அப்போது, வாமனனாக அங்கு வந்தார் நாராயணன். தானமாக மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டார். ’வந்திருப்பது மகாவிஷ்ணுதான்’ என்று அசுரகுலகுரு சுக்கிராச்சாரியார் அறிந்திருந்தார். ’தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாம்’ என்று மகாபலியிடம் எடுத்துக்கூறியும், அவர் அதனை சட்டை செய்யவில்லை. தான தர்மங்களிலும், கொடுத்த வாக்கினை தவறாமல் காப்பதிலும் சிறந்தவர் மகாபலி. அதனால், வாமனனின் கோரிக்கையை ஏற்றார்.

உடனே வாமனனாக இருந்த திருமால், திரிவிக்கிரம அவதாரம் எடுத்து, தன்னுடைய ஒரு அடியால் பூவுலகை அளந்தார். இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். ’மூன்றாவது அடியை எங்கே அளப்பேன்’ என்று வினவிய பரமபதநாதனிடம், தன்னுடைய சிரசின் மேல் மூன்றாவது அடியை வைக்குமாறு வேண்டினார் அந்த மாமன்னன். அதன்படி, அவரது சிரசின் மேல் உலகளந்த மாயன் காலைப் பதிக்க, மகாபலி பாதாள உலகத்துக்குச் சென்றார். அவரைப் பாதாள உலகத்தை ஆளுமாறு பணித்தார் மகாவிஷ்ணு.

அதன்பிறகு, “அடியேன் ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை வந்து பார்க்க வேண்டும்” என்று மகாபலி சக்கரவர்த்தி நாராயணனிடம் வேண்டினார். “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார் வாமனப் பெருமாள். அதன்படி, தன் மக்களைக் காண மகாபலி வரும் நாளே திருஓணத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

கேரள மாநிலத்தின் திருக்காட்கரையில், காட்கரையப்பனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் வாமனமூர்த்தி.

ஓணம் விருந்து

அறுவடைத் திருநாளாகவும், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளன்று, கேரளாவில் எல்லா வீடுகளிலும் ஓண சத்ய விருந்து பரிமாறப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். “கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழி ஓண சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது
கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளான எரிசேரி, காளன், ஓலன், அவியல், தோரன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மோர்க்கறி, கூட்டுக்கறி, பருப்புக்கறி, சாம்பார், ரசம், அடை பிரதமன், பாலடை பிரதமன், வாழைப்பழம் ஆகியவை தலைவாழை இலையில் பரிமாறப்படும். இதனுடன் உப்பேரி, பப்படம், காவற்றல் வைத்து உண்டு மகிழ்வர்.

ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர்.பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்
கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.

பெண்களின் ஆடை (கசவு)

கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

தன்னுடைய மக்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வதைக் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மீண்டும் பாதாள உலகத்துக்குச் செல்கிறார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை.

ஒணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here