ஏவுகணை

0
52

ஏவுகணை – விவரங்கள்

அடிப்படையில், ஓர் இலக்கை நோக்கி அதைத் தாக்கும் நோக்கத்துடன் வீசும் எந்தவொரு பொருளும் (Object) ஏவுகணை (Missile) என்று அழைக்கப்படும்.

உதாரணம்: பறவையின் மீது எறியப்டும் ஒரு சிறு கல் கூட ஒரு ஏவுகணை ஆகும்.

Case :1

இவ்வாறு, ஒரு பறவை அதன் மீது வீசப்பட்ட ஏவுகணையை (கல்), பறவை தனது பகுத்தறிவை/ அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் இடது, வலது, மேல் அல்லது கீழ் நோக்கி பறந்து ஏவுகணையின் விமானப் பாதையைத் (பாதை) தவிர்க்கலாம். அதாவது ஏவுகணை தன் மீது படுவதை தவிர்க்கலாம்

ஆக, இந்த ஏவுகணை(Missile), பறவையை (இலக்கு) தாக்கும் நோக்கத்தில் பயனற்றதாக உள்ளது. எனவே இது வெறும் ஏவுகணையே ஆகும்

Case :2

இப்போது, ஏவுகணைக்கு (கல்லுக்கு) சில புத்திசாலித்தனத்தையும், இலக்கு பிழைகள் மற்றும் பறவையின் தப்பிக்கும் செயல்களைக் கடந்து அதை துல்லியமாகத் தாக்கும் திறன் வழங்கப்பட்டால், அதனை வழிகாட்டப்பட்ட ஏவுகணை(Guided Missiles) என்கிறோம். ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை (Guided Missiles) அதன் இயக்கத்திற்கு தேவையான,

உந்துவிசை (Propulsion)

சரியான திசையில் செல்ல வழிகாட்டுதல் (Guidance)

பயனுள்ள சூழ்ச்சி/கட்டுப்பாடு (Control)

ஆகியவை இந்த வகையான ஏவுகணைகளின் முக்கியத் தொழில்நுட்பங்கள் ஆகும்.

ஏவுகணையின் வரலாறு:

ராக்கெட்டுகள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, ​​கி.பி 1000 இல் சீனாவிலும் இந்தியாவிலும் ராக்கெட்டுகள் பட்டாசுக்காகவும், போர் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் போது, ​​வழிகாட்டப்படாத ராக்கெட் செலுத்தப்பட்ட ஏவுகணைகளை ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினர்.

1799 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையிடப்பட்ட, நான்காவது மைசூர் போரின்போது திப்புவின் படைகளைச் சேர்ந்த இரண்டு ராக்கெட்டுகள் வங்காள மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் கைப்பற்றப்பட்டதாக குறிப்புகளும் உள்ளது.

ஏவுகணைகளின் வரலாற்றில் தற்போதைய கட்டம் முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் வி 1 மற்றும் வி 2 ஏவுகணைகளைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து தொடங்கியது.

அப்போதிருந்து இந்தத் துறையில் மிகப்பெரிய மற்றும் விரைவான உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது உலோகஅறிவியல், ஏரோநாட்டிக்ஸ், தகவல் தொடர்பு, ரேடார்கள் மற்றும் கணினிகள் போன்ற துறைகளில் பல புதிய தொழில்நுட்பங்களின் எல்லைகளை விரிவாக்கியது. அதிநவீன ஏவுகணைகளை உருவாக்குவதிலும், அதை பரிசோதித்துப் பார்ப்பதிலும் அனைத்து நாடுகளும் எந்த அளவிற்கு மும்மரமாக உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் வகைகள்:

தற்போது, ​​பல வகையான வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் உள்ளன. ஏவுகணைகளானது அதன் வகை, ஏவப்படும் முறை, இலக்கை அடையும் தொலைவு, உந்துவிசை, போர்முனை/வெடிமுனை, இலக்கு குறிபார்த்தல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து பலவாறு வகைப்படுத்தப்படலாம்.

(A) வகை:

(i)எறிவிசை (பாலிஸ்டிக்) ஏவுகணைகள்

(ii)சீர்வேக (க்ரூஸ்) ஏவுகணைகள்

(B) ஏவப்படும் முறை:

(i) தரையிலிருந்து தரை ஏவுகணைகள்

(ii) தரையிலிருந்து வான் வெளி ஏவுகணைகள்

(iii) தரையிலிருந்து கடல் வெளி ஏவுகணைகள்

(iv) வான்வெளியிலிருந்து வான் ஏவுகணைகள்

(v) வான்வெளியிலிருந்து தரை ஏவுகணைகள்

(vi) கடல்வெளியிலிருந்து கடல் ஏவுகணைகள்

(vii) கடல்வெளியிலிருந்து தரை ஏவுகணைகள்

(viii) டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்

(C) தொலைவைப் பொறுத்து:

(i) குறுகிய தூர ஏவுகணைகள் (Short-range ballistic missiles – SRBMs)

(ii) நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகள் (Medium-range ballistic missiles – MRBMs),

(iii) இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள் (Intermediate-range ballistic missiles – IRBMs),

(iv) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental ballistic missile -ICBM)

இதைத்தவிர உந்தப்படும் முறை, போர்முனை, வழிகாட்டும் அமைப்பை பொறுத்தும் பலவாறு பிரிக்கப்படுகிறது.

இங்கே எறிவிசை ஏவுகணைகள்(Ballistic Missile), சீர்வேக ஏவுகணை (cruise missile) பற்றி மட்டும் விளக்குகிறேன்.

எறிவிசை ஏவுகணைகள்(Ballistic Missile):

பாலிஸ்டிக் ஏவுகணை, ராக்கெட் மூலம் இயக்கப்படும் சுய வழிகாட்டுதல் மூலோபாய-ஆயுத அமைப்பு, அதன் ஏவுதளத்திலிருந்து ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்குக்கு ஒரு பேலோடை வழங்க ஒரு எறி பாதையை பின்பற்றுகிறது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் வழக்கமான உயர் வெடிபொருட்களையும், ரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும். நிலம் சார்ந்த குழிகள் மற்றும் மொபைல் தளங்களுக்கு கூடுதலாக விமானம், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து அவை ஏவப்படலாம்.

உதாரணம்:

பிருத்வி-1, பிருத்வி-2, அக்னி-1 ,அக்னி-2, தனுஷ்

சீர்வேக ஏவுகணை (cruise missile):

சீர்வேக ஏவுகணை (cruise missile) என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல வழிகாட்டப்பட்ட ஏவுகணை. இதனை “குரூஸ்” ஏவுகணை என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சீர்வேக ஏவுகணை சிறியதொரு ஆளில்லா விமானத்தைப் போன்று இயங்கும் இவ்வகை ஏவுகணைக்குத் தாரைஇயந்திரம் ஒன்றின்மூலம் உந்துசக்தி வழங்கப்படுவதுடன், இவை தன்னியக்க வழிச் செலுத்தி மூலம் இலக்கை நோக்கி வழிநடத்தப்பட்டு மிகவும் துல்லியமாக இலக்கினைத் தாக்கவல்லன.

மிகவும் தாழ்வான உயரத்தில் ஒரு விமானத்தைப் போன்று பறந்து செல்லவல்ல இவ்வகை ஏவுகணைகள் எதிரிகளின் தொலைக் கண்டுணர்வித் திரைகளில் படாது, தன்னியக்கமாக வழிநடத்தப்பட்டு இலக்கைநோக்கிப் பயணிக்கவல்லன. அத்துடன் தாரை இயந்திரங்களால் இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை ஏவுகணைகள் இலக்கை அடைவதற்காக வளிமண்டலத்தைத் தாண்டிச்செல்ல வேண்டிய தேவை இல்லை.

சீர்வேக ஏவுகணைகள் (cruise missile) மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது

(i) சப்ஸோனிக் குரூஸ் ஏவுகணை:

ஒளியின் வேகத்தை விடக் குறைந்த அதாவது 0.8 மேக் வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணைகளை சப்ஸோனிக் குரூஸ் ஏவுகணை என்கிறோம்.

உதாரணம்: அமெரிக்காவின் டோமஹாவ்க், ஹார் பூன், பிரான்சின் எக்ஸ்சோசெட்

(ii) சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை:

2-3 மேக்(Mach 2-3) வேகத்தில் பயணிக்க வல்ல ஏவுகணைகளை சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்கிறோம். ஒருவினாடிக்கு ஒருகிலோமீட்டர் தூரத்தை தாண்டி செல்ல வல்லது. இது நீர்மூழ்கி கப்பல், கப்பல், போர்விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. மிகப்பெரும் அழிவை உண்டாக்க வல்லது.

உதாரணம்: ப்ரம்மோஸ் ஏவுகணை

(iii) ஹைபர்சோனிக் குரூஸ் ஏவுகணை: மேக் 5 (Mach 5) வேகத்தில் பயணிக்க வல்ல ஏவுகணைகளை ஹைபர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்கிறோம். உதாரணம்: ப்ரம்மோஸ்-II ஏவுகணை.

இந்திய ஏவுகணை தயாரிப்பில் சுயசார்பு:

இந்தியா வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைத் தயாரிக்கும் துறையில், தொழில்நுட்பத்தில் சுயசார்பை அடையும் பொருட்டு டாக்டர். A.P.J அப்துல்கலாம் ஐயா அவர்களின் தலைமையில் DRDO, தரைப்படை விமானப்படை, கப்பற்படை மற்றும் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றை, கூட்டாக மெம்பர்களாகக் கொண்டு ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டம் (Integrated Guided Missile Develeopment Program-IGDMP) ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த IGMDP 1983 இல் மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற்று வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.

அப்போது தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளில் அக்னி மற்றும் ப்ரித்வி ஏவுகணைகள் ஐயா டாக்டர். A.P.J அப்துல்கலாம் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாக்கப்பட்டவை. அதனால் தான், நாம் அவரை ஏவுகணை நாயகன் என்று அழைக்கிறோம்.

ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின்(IGMDP) கீழ் இந்திய தயாரித்த சில ஏவுகணைகள்:

குறைந்த தூர தரைவழி எறிவிசை ஏவுகணை – ப்ரித்வி
இடைப்பட்ட தூரம் பாயும் தரைவழி எறிவிசை ஏவுகணை- அக்னி

குறைந்த தூர தரையிலிருந்து வான் வெளி ஏவுகணை- திரிஷூல்

நடுத்தர தூர தரையிலிருந்து வான் வெளி ஏவுகணை -ஆகாஷ்

மூன்றாம் தலைமுறை தாங்கி எதிர்ப்பு ஏவுகணை – நாக்

இன்று, இந்தியா ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே வளர்ச்சி கண்டு, நட்பு நாடுகளுக்கு ஏவுகணையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறி அதில் பீறுநடை போட்டுக்கொண்டு வருகிறது.

1. http://www.brahmos.com/content.php?id=10&sid=9

2. https://bdl-india.in/aakash-weapon-system

3. Guided missiles/drdo.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here