ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்?

0
305

“முன்னுரைக்கு முன் ஒரு சின்ன எச்சரிக்கை என்னவெனில்…
இன்சூரன்ஸ் எடுப்பது என்பது நீங்கள் கொண்ட கொள்கைக்கு விரோதம் என நீங்கள் கருதினால்.
இந்த இந்த கட்டுரையை படிப்பதை தவிர்த்து விடுங்கள்.
எதற்காக சொல்கிறேன் என்றால்..
இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் இன்சூரன்ஸ் எடுப்பதை உங்களாலும் தடுக்க இயலாது என்றாகிவிடும்”

முன்னுரை..

“உலகளவில் இன்சூரன்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்திருக்கும் போது.
நானும் இன்சூரன்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு ஒரு பலமான காரணம் இருக்கவேண்டும் அல்லவா?

ஆமங்க!
நிஜந்தாங்க.
அப்படின்னு சொல்ற அளவுக்கெல்லாம் ஒரு காரணமும் கிடையாது.

எத்தனையோ கட்டுரைகள் வந்திருக்கலாம் உண்மைதான்.
ஆனா அதையெல்லாம் நீங்கள் படிச்சிருக்கீங்களா?
ஒருவேளை நான் எழுதும்போது அடடா நமக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் எழுதுறானே..
அப்படி என்னதான் எழுதுறான்னு கொஞ்சம் படிச்சுதான் பார்போமே என்று ஒருவேளை நீங்கள் படித்துவிடலாம் அல்லவா..
அவ்வளவுதான்.
வேற ஒரு காரணமும் கிடையாது.

தவிர உலகளவில் இன்சூரன்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்..
அவையெல்லாம் பெரும் அறிஞர் பெருமக்களால், பொருளாதார நிபுணர்களால் புள்ளி விபரங்களால் புட்டு, புட்டு வைக்கப்பட்டு
முதலீடுகளை பற்றிய கணக்கியலை உள்ளடக்கி அறிவு சார்ந்து எழுதப்பட்டதாகவே இருக்கும்.

ஆனால் உணர்வு சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் எதையும் படிக்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைத்ததில்லை.
அப்படியொரு கட்டுரை இருந்தால் நல்லாயிருக்குமே என தேடியபோது அது எனக்குள்ளேயே இருந்தது.
அதனை மட்டும்தான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

ஆமா!
அப்படி எதற்காக இன்சூரன்ஸை உணர்வுபூர்வமாக அனுகவேண்டும்?

இன்சூரன்ஸ் என்பது செல்வந்தர்களின் பார்வையில்..
அது ஒரு பாதுகாப்பான முதலீடு.
எல் ஐ சி யின் சின்னம் அவர்களுக்கெல்லாம் உத்திரவாதமான முதலீட்டின் ஒரு பாதுகாப்பு குறியீடு.

ஆனால் சாமானிய மக்களுக்கு அது ஒரு இருண்ட வீட்டில் ஏற்றிவைக்கப்படும் அகல் விளக்கு.

அதெல்லாம் சரிதான்.
அதுக்காக இன்சூரன்ஸ் எடுத்துக்காம ஒரு மனுஷனால வாழவே முடியாதுன்னு சொல்றீங்களா?

இன்சூரன்ஸ் எடுத்துக்கலைன்னா ஒரு மனுஷன் தன்னை பாதுகக்கபட்டவனா உணரவே முடியாதுன்னு நம்பவைக்க முயற்சி பண்ணுறிங்களா?

இன்சூரன்ஸ் என்பது ஒரு மனுஷனுக்கு அத்தனை கட்டாயமா?

யார் அப்படி சொன்னது?
உங்கள் எதிர்கால செலவுகளையும்,
எதிர்பாராமல் வரும் செலவுகளையும்
எத்தகைய சூழ்நிலையிலேயும் எந்த வடிவத்தில் வந்தாலும்..
அதனை அனாயசயமாக எதிர்கொள்ளக்கூடிய பொருளாதார வல்லமையை நீங்களும், உங்களின் குடும்பத்தாரும்.. பெற்றிருந்தீர்கள் என்றால்..
அப்படிப்பட்ட செலவுகளையெல்லாம் எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளை சிறப்பாகவே செய்துவைத்திருக்கிறீர்கள் என்றால்..
அதனை நீங்களே தீவிரமாக சுய மதிப்பீடு செய்து உங்கள் மனசாட்சியும் அதனை ஆம். உண்மைதான் என ஒப்புக்கொண்டுவிட்டால்..
நான் நூறு சதவீதம் சொல்கிறேன்.
வாழ்த்துகள், பாராட்டுகள், தைரியமாக சொல்லுங்கள். உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவையே இல்லை.!

ஆனால் அதில் கடுகளவேணும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் நான் சொல்கிறேன் நீங்கள் இன்சூரன்ஸ் எடுப்பதை பற்றி கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும்.

நான் எப்போதுமே சொல்லக்கூடியது தான்.
“ஒரு மனிதருக்கு இன்சூரன்ஸ் அவசியமே இல்லை.
அவர் ஈட்டக்கூடிய வருமானத்திற்கு தான் இன்சூரன்ஸ் அவசியம்”

நீங்கள் ஒரு தனி மனிதர் என்றால்..
உங்கள் கனவுகளும், உங்கள் இலக்குகளும் உங்களுடனையே முடிந்து போகும் என்றால்..
நிச்சயமாக உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவையே இல்லை.

ஆனால் அதன் மீது யாராவது ஆதாரப்பட்டு இருந்தால்..
அதாவது உங்கள் கனவுகளும், இலக்குகளும் உங்கள் குழந்தைகளுக்கு தகுதியான உயர்கல்வியினை கொடுத்து அதன்மூலம் அவர்களுக்கு வளமானதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதாகயிருந்தால்?

ஊரே வியந்து பார்க்குமளவுக்கு அவர்களுக்கு திருமணத்தை நடத்திவைத்து எந்த குறையுமில்லாதொரு வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்துவிட வேண்டும். என்பதாகயிருந்தால்..

வாழ்வதற்காக நல்லதொரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தால்..

எல்லாவித கடமைகளையும் முடித்துவிட்டு முதுமை காலத்தில் துணையுடன் யாரிடமும் எதையும் எதிர்பாராமல் ஒரு கவுரவமான வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்பதாகயிருந்தால்…

இதனையெல்லாம் இனிமேல் நீங்கள் ஈட்டப்போகும் உங்கள் வருமானத்தை வைத்துதான் செய்து முடிக்கவேண்டும் என்பதாகயிருந்தால்.
அந்த வருமானத்தை இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவருவது அவசியமாகும், கட்டாயமாகும் என்றுதான் சொல்கிறேன்.

ஏனென்றால்..
நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களை நம்பியிருந்த உங்கள் குடும்பத்தினர் இந்த உலகத்தில் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துதான்
ஆகவேண்டும்.
அந்த வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும் என்றால்..
நீங்கள் இருந்து அவர்களுக்கு செய்தால் எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துகொடுப்பீர்களோ..
அதைவிட ஒருபடி மேலானதாக…

எப்படியிருக்கவேண்டும்?
அதைவிட ஒருபடி மேலானதாக இருக்கவேண்டும்.

ஏன் இதை அழுத்தி சொல்கிறேன் என்றால்.. எல்லா தாய், தந்தையருக்கும் தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்கி நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் வரையில் அவர்கள் விரலை பிடித்துகொண்டு அவர்களுடனையே பயணிக்கும் வாய்ப்பும், பாக்கியமும் கிடைத்துவிடுவதில்லை.
அப்படியொரு வாய்ப்பும், பாக்கியமும் கிடைத்துவிட்டால் எத்தனையோ அற்புதங்களை அவர்கள் வாழ்க்கையில் செய்துகாட்டிவிடலாம்.

ஆனால் நான் இல்லாவிட்டாலும் என் பிள்ளைகளுக்கு எந்தவித குறையுமில்லாமல் எல்லாமே கிடைக்கவேண்டும் என்று யோசிக்கும் ஒரு தகப்பனின் மனசு.

அப்பா இல்லை என்கின்ற குறையை தவிர..
அப்பா இருந்திருந்தால் எங்களுக்கு இப்படியொரு நிலமை வந்திருக்காதே என்று குடும்பத்தினர் வருந்தாத அளவிற்கு ஒரு மாற்று ஏற்பாட்டினை செய்துவைக்க வேண்டும் என்கின்ற ஒரு தகப்பனின் மனசு இருந்தாலே போதும்.
இன்னொருத்தர் சொல்லாலே இதெல்லாம் தானாக நடந்துவிடும்.

அதற்கு இதையெல்லாம் சிறப்பாக செய்துமுடிக்கவேண்டிய தின் ஆதாரமாய் விளங்கும் உங்கள் வருமானத்தை இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்தாலே போதும்.
அவ்வளவுதாங்க இன்சூரன்ஸ்.

சரி கட்டுரைக்குள் நுழைவோம்.
நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர்தானா?

கேள்வி புரிகின்றதா?
சரி கொஞ்சம் தெளிவாக மாற்றி கேட்கிறேன்.
“நீங்கள் உங்கள் குடும்பத்தினர் சந்தோசத்திற்காக வாழ்பவரா?”
அல்லது..
“உங்கள் சந்தோசத்திற்காக மட்டுமே உங்கள் குடும்பத்தை பயன்படுத்தி கொள்பவரா?”

தர்மசங்கடமான கேள்விதான்.
இருந்தாலும் இதில் ஏதோ ஒன்று தானே உண்மையாக இருக்கமுடியும்.?
இதில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அதற்கு கீழே உள்ள இரண்டு பதில்களில் ஏதேனும் ஒன்றை நேர்மையாக தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மதிப்பீடு செய்து பார்த்துவிடலாம்.

1,) நான் என் குடும்பத்தினருக்கு சகலவசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறேன்.
இல்லையென்று சொல்லாமல் அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்துவிடுவேன்.
எனக்கென்று நான் எதையும் செய்துகொண்டதுமில்லை, சேர்த்து வச்சதுமில்லை.
என் வருமானம் மொத்தத்தையும் அவர்களின் சந்தோசத்திற்காகவே செலவிடுகிறேன்.

2,) நான் என் குடும்பத்தினருக்கு எது அவசியமோ அதை மட்டுமே செய்துகொடுத்திருக்கிறேன்.
அவர்களை மகிழ்சியாகவே வைத்திருக்கிறேன்.
அதே சமயம் எனது வருமானத்தின் ஒரு பகுதியை எனது பெயரில் சில வழிகளில் சேமித்தும் வைக்கிறேன்.

இவையிரண்டில் எந்த பதிலை நீங்கள் நேர்மையாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?

இதில் இரண்டாவது பதிலை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால் உங்களை பற்றிய மதிப்பீடு என்னவெனில்.. உண்மையாகவே நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மீது அன்பும், அக்கரையும் கொண்டுள்ளீர்கள்.
அவர்கள் சந்தோசத்திற்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்குறீர்கள்.

ஒருவேளை நீங்கள் முதல் பதிலை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால்..
உங்களை பற்றிய மதிப்பீடு என்னவெனில்..
நீங்கள் உங்கள் சந்தோசத்திற்காக மட்டுமே உங்கள் குடும்பத்தினரை பயன்படுத்திகொண்டிருக்கிறீர்கள்.

என்ன அதிர்சியாக இருக்கிறதா?
நீங்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை உண்மை அதுதான்.!

எப்படி என்பதற்கான விளக்கம் வேண்டுமானால்?
அடுத்த கட்டுரையில் பார்த்துவிடலாம் காத்திருங்கள் ….தொடரும் …

                                                   – உங்கள் சுரேஷ்வரன்.
                                                   இன்சூரன்ஸ் ஆலோசகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here