ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-11

1
213

அதே அளவு உலகம்தான்!
அதே அளவு மூளைதான்!
அதே அளவு வாய்ப்புகள் தான்!
ஆனால் உங்கள் குழந்தை உலகத்தில் ஒருவனா?
உலகமே திரும்பி பார்க்கும் ஒருவனா? தீர்மானம் மட்டும் உங்கள் கைகளில்.

ஒரே பள்ளியில்,
ஒரே வகுப்பறையில் கல்வி பயின்ற நான்கு நண்பர்கள், பின்னொரு நாளில் சந்திக்க நேரும்போது,
அவர்கள் நால்வரின் தகுதியும் ஒரே நேர்கோட்டில் இருக்குமானால், பொருளாதார நிலைமை ஒரே சமன்பாட்டில் இருக்குமானால், அவர்களுக்கு பள்ளியில் கிடைத்த கல்வி அறிவிலோ, அதன் தரத்திலோ, எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதே பொருளாகும்.

ஆனால் அவர்களிடையே தகுதி மற்றும் பொருளாதார நிலமையில் சமன்பாடின்றி இருக்குமானால், அந்தந்த குழந்தைகளின் பெற்றோர்களின் கல்விக்கான திட்டமிடலில் கோளாறு இருக்கிறது என்று தானே பொருளாகும்?

ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பள்ளிக் கல்வி என்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தின் அடிப்படையில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகவோ, அல்லது தனியார் பள்ளிகளில், சில ஆயிரங்கள் கட்டணங்களிலோ, கிடைத்துவிடுகிறது. ஆனால் பள்ளி கல்வி என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு திசையினை காட்டும் அடிப்படை கல்வி மட்டுமே ஆகும்.

ஆனால் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் உயர்கல்வி என்பது, பெற்றோர்களின் முறையான திட்டமிடல் மூலமாகவே நிகழ்வதாகும்.

இங்கே ஒவ்வொரு பட்டப்படிப்பிற்க்கும், ஒவ்வொரு விலை இருக்கிறது என்பது மட்டுமில்லாமல்,
ஒரே பட்டப்படிப்பை பயிற்றுவிக்கும் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஒரு பட்டப்படிப்பினை உங்கள் குழந்தை மாவட்ட தரத்தை கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில் பயில்வதற்கும்,
மாநில தரத்தை கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில் பயில்வதற்கும், நேஷனல் தரத்தை கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில் பயில்வதற்கும், யுனிவர்சல் தரத்தை கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில் பயில்வதற்கும்,
அதை பெறுவதற்காக கொடுக்க வேண்டிய விலையிலும்,
அதன் வாயிலாக கிடைக்கும் கல்வித் தரத்திலும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு பட்டப்படிப்பினை மாவட்ட அளவிலான கல்லூரியிலோ,
மாநில அளவிலான கல்லூரியிலோ,
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பெற்றுதரும்போது ஓரிரு லட்சங்களில் கிடைத்துவிடும். அதேபோல அந்த படிப்பிற்காக கிடைக்கும் சம்பளமும் சில ஆயிரங்களில் தான் இருக்கும்.

ஆனால் அதே பட்டப்படிப்பை நேஷனல் தரத்தை கொண்ட கல்லூரியிலோ, யுனிவர்சல் தரத்தை கொண்ட கல்லூரியிலோ,
உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெற்று தரும்போது, அதன் விலை பல லட்சங்களில் இருக்கலாம். அதேபோல கிடைக்கும் சம்பளமும் லட்சங்களில் தான் இருக்கும்.

குழந்தைகள் ஆசைப்படும் கல்வி, குழந்தைகளுக்கு தகுதியான கல்வி, குழந்தைகள் வாழ்க்கையை வளமாக்கும் கல்வி, இங்கே சில குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு அது ஒரு கனவாகவே முடிந்து விடுகிறது. காரணம் என்ன? பெற்றோர்களின் முறையான திட்டமிடல் இல்லாததுதான்.

வசதியான வீட்டுப் பிள்ளைகள், வாரிசு என்கின்ற அடிப்படையிலேயே தகுதியான கல்வியையும், வளமானதொரு வாழ்க்கையையும் அடைந்து விடுகிறார்கள்.
ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் மனதில் வைராக்கியத்தோடு, குழந்தை பிறந்த நாளிலிருந்தே முறையாகத் திட்டமிட்டால் மட்டும்தான், தரமான கல்வியையும் அதன் மூலம் அவர்களுக்கு வளமானதொரு வாழ்க்கையையும் அமைத்து கொடுக்க முடியும்.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய மிகப்பெரிய கனவு,
தெளிவான திட்டமிடல், அதை நோக்கிய முறையான சேமிப்பு, இவற்றை எல்லாம் சரியாக செய்து கொண்டிருக்கும் பெற்றோர்கள்தான், தங்களின் குழந்தைகளுக்கு வளமானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இங்கே எல்லா குழந்தைகளுமே உலகையே ஆளும் தகுதியோடுதான் பிறக்கிறார்கள். ஆனால் நினைத்த வாழ்க்கையை அடைய முடியாமல்,
கிடைத்த வாழ்க்கைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு நிலமை, பெற்றோர்களின் முறையான திட்டமிடல் இல்லாததால்தான் நடக்கிறது.

நிறைய ஊர்களில், ஒரு பள்ளியில் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு என்ற நிகழ்வு நடந்ததாய் நீங்கள் கேள்விபடிருக்கலாம்,
செய்தி தாள்களில் படித்திருக்கலாம்,
ஆனால் அந்த நிகழ்வுக்கு முன் அதில் கலந்துகொள்பவர்களின்,
எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும், அவர்கள் விடைபெற்ற தருணங்களில் இருந்ததா?
என்பதை கேட்டுப்பாருங்கள்.
நிச்சயமாக இருந்திருக்காது.

காரணம் மாணவர்களாக பிரிந்துபோனவர்களில்,
சிலர் பெரும் தொழில் அதிபர்களாக வந்திருக்கலாம்.
சிலர் டாக்டர்களாக வந்திருக்கலாம்.
சிலர் அரசாங்க அதிகாரிகளாக வந்திருக்கலாம்.
சிலர் சாதாரண தொழிலாளியாக வந்திருக்கலாம்.

ஆனால் அந்த பள்ளிக்கூடம்
அங்கே வந்திருந்த அத்தனை மாணவர்களுக்கும் சமமான கல்வியை கொடுத்துதானே அனுப்பிவைத்தது?
அல்லது
நீ டாக்டர்!
நீ தொழிலதிபர்!
நீ கலெக்டர்!
நீ தொழிலாளி!
என்று யாரையாவது அடையாளப்படுத்தி அனுப்பி வைத்ததா?

இல்லை!
அந்த அடையாளத்தை அவர்களுக்கு பெற்று கொடுத்தது, அவர்களின் பெற்றோர்கள் ஆவார்கள்.

தன் வகுப்பறையில் தன் பக்கத்தில் அமர்ந்து படித்த தன் உயிர் நண்பனை கலெக்டராகவோ,
டாக்டராகவோ,
தொழில் அதிபராகவோ,
மீண்டும் சந்தித்த அந்த தொழிலாளி நண்பனின் மனம் சந்திப்புக்கு முன்பு கொண்டிருந்த மகிழ்ச்சியுடன் தான் திரும்பியிருக்குமா?

நண்பர்களே எல்லா குழந்தைகளுமே ஒரு கட்டத்தில் தாங்கள் இந்த சமுதாயத்தில் என்ன அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதையும்,
எப்படிபட்ட வாழ்க்கையினை வாழவேண்டும் என்பதையும் தீர்மானித்து விடுகிறார்கள்.
அதை பெற்று தருவது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது,
உங்கள் கடமையிலிருந்து தவறிவிடாதீர்கள்.

ஏனென்றால் அவர்கள் உங்கள் கனவுகளை மீட்டெடுத்து கொடுப்பதற்காக இந்த பூமிக்கு வரவில்லை. அவர்கள் தங்கள் கனவுகளை சுமந்துகொண்டு இந்த பூமிக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கை தனக்காக ஏங்கிய தவிப்பின் வெளிப்பாடுகள்.

சரியான திட்டமிடல் மூலமாக உங்கள் குழந்தைகளின் கனவை நினைவாக்குவது எவ்வளவு எளிதானது! என்பதை வரும் வாரங்களில் திட்டமிடலாம்.
காத்திருங்கள். தொடரும் …

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here