ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி-10

0
168

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.
உங்களிடமிருந்து அவர்கள் வரவில்லை, உங்கள் வழியில் வந்திருக்கிறார்கள் அவ்வளவுதான். உங்கள் அன்பை அவர்களிடத்தில் செலுத்துங்கள்,
உங்கள் எண்ணத்தை அவர்கள் மீது செலுத்தாதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்தோடு இந்த பூமிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை தனக்காக ஏங்கிய தவிப்பின் வெளிப்பாடுகள்.”

இது “கலீல் ஜிப்ரானின்” குழந்தைகள் உலகம் பற்றிய அழகான கவிதையாகும்.

ஆம்! நண்பர்களே,
உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் போதெல்லாம், கிட்டத்தட்ட நீங்கள் உங்கள் குழந்தையின் உலகத்திலிருந்து வெளியேற்றப்படலாம். நட்பு, காதல், என்று புதிய, புதிய உறவுகள் உங்கள் குழந்தையின் உலகத்திற்குள் பிரவேசிக்கும்போது, அவர்கள் உங்களை விடவும், உங்கள் குழந்தையை பரவசங்களுக்கு உள்ளாக்கும்போது, ஆச்சரியங்களுக்கு ஆட்படுத்தும்போது, உங்கள் குழந்தையின் உலகத்தில் உங்களுக்கு இடமில்லாமல் போகலாம்.

ஆனால் ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ தன் தந்தையாகத்தான் இருக்கமுடியும். ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைப்பதிலிருந்து, நடப்பது, பார்ப்பது, பேசுவது, அமர்வது, சாப்பிடுவது, உடை உடுத்துவது, அலங்காரம் செய்துகொள்வது, என்று.. எல்லாவற்றையும் தந்தையைப் பார்த்து, பார்த்து, “போலசெய்தலை” தான் குழந்தை முதலில் கற்றுக்கொள்கிறது.

குழந்தையை பொறுத்தவரை தன் தந்தை ஒரு ஹீரோ.
அவரால் முடியாததென்று உலகத்தில் எதுவும் கிடையாது.
அப்பாவிடம் சாக்லேட் கேட்டால் உடனே கிடைத்துவிடும். நோட்டு, பேனா கேட்டால் உடனே கிடைத்துவிடும். பொம்மைகள் கேட்டால் உடனே கிடைத்துவிடும்.
வகுப்பு டீச்சரிடம் பயமில்லாமல் வந்து பேசுவார்.
டீச்சரிடம் அடிவாங்கிய விபரத்தை சொன்னால் மறுநாள் வந்து டீச்சரிடம் காரணம் கேட்பார்.
கைகளை விட்டுவிட்டு பைக் ஓட்டுவார்.
மற்றவர்களின் அப்பாக்களை விட அழகாயிருப்பார்.
ஆதலால் என் அப்பாவிற்கு நிகர் இந்த உலகத்தில் எவருமே இல்லை,
என்பது மாதிரியான பிம்பத்தை உருவாக்கி கொண்டுதான் ஒவ்வொரு குழந்தையும் வளர்கிறார்கள்.

ஆனால் அந்த பிம்பம் நீர்குமிழி போல உடைந்து போவதும், உடையாமல் பாதுகாக்கப்படுவதும், அப்பாக்களிடத்தில் தான் இருக்கிறது.

அப்பாவை தாண்டியும் இன்னொரு உலகம் இருக்கிறது,
அந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கின்ற ரகசியம் உங்கள் குழந்தைகளுக்கு தெரிய வரும் வரையில், பிள்ளைகள் உலகத்தின் ஒரே ஹீரோ அப்பாதான்,
அதாவது நீங்கள் தான்.!

ஆனால் நண்பர்களே! அவர்கள் தங்கள் எண்ணத்தோடு இந்த பூமிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயம் ஒன்று இருக்கிறது.
ஒரு குழந்தை தன் சுயத்தை உணர்ந்து கொண்டு “போலசெய்தலை” தவிர்க்கும் தருணங்களில்,
தான் தனித்து செயல் படகூடிய வல்லமை கொண்டவன் என்பதை, அவர்கள் அறிந்துகொண்டு அதில் ஜெயிக்கும் வேளையிலும்,
அப்பா ஹீரோவாகவே குழந்தையின் உலகத்தில் இருக்கிறாரா?
என்பது தான் கேள்வி.

ஏனென்றால் அவர்கள் வாழ்க்கை தனக்காக ஏங்கிய தவிப்பின் வெளிப்பாடுகள்.
தான் யாராக இருக்க வேண்டும் என்பதை ஒரு குழந்தை 16 வயதிலிருந்து, 18 வயதிற்குள் முடிவு செய்து விடுகிறது.
இந்த உலகத்தில்
தான் என்ன அதிகாரத்தில் இருக்கவேண்டும்?
எந்த மாதிரியான வாழ்க்கையை வாழவேண்டும்.? தன்னுடைய அடையாளம் எவ்விதம் இருக்க வேண்டும்? என்பதையெல்லாம் பதினெட்டு வயதிற்க்குள் ஒரு குழந்தை தீர்மானம் செய்து விடுகிறது.
அந்த தீர்மானத்திற்கு உதவக்கூடிய வழிகளை கண்டறிந்து, அதனை சரியாக அமைத்துக் கொடுப்பதில் தான் அப்பாவின் ஹீரோ இமேஜ் காப்பாற்றப்படுகிறது.

அப்பாவால் தனக்கான அதிகாரத்தை பெற்று தர இயலாதோ? என்ற சந்தேகம் எங்கே ஒரு குழந்தைக்கு தொடங்குமோ, அங்கிருந்தே.. ஒவ்வொரு விசயத்திலும் வலுவடைந்து, ஒவ்வொரு கட்டமாய்,
உடைய ஆரம்பிக்கிறது அப்பாவை பற்றிய ஹீரோ இமேஜ்.
பிள்ளையின் உலகத்திலிருந்து அப்பா வெளியேற்றப்படுகிறார்.

அவர்கள் உங்கள் கனவுகளை மீட்டெடுத்து கொடுப்பதற்காக இந்த பூமிக்கு வரவில்லை.
அவர்கள் கனவை நிறைவேற்றி கொள்வதற்காகவும்,
அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்காகவும், இந்த பூமிக்கு வந்திருக்கிறார்கள்.
அதையெல்லாம் நீங்கள் செய்து தருவீர்கள் என்று நம்பி,
உங்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள், என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் அடுத்த தலைமுறையான அவர்கள், இந்த பூமியில் எப்படிபட்ட வாழ்க்கையை வாழவேண்டும்?
என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மட்டும் தான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதனை சிறப்பாக செய்து முடிப்பதில் தான் ஒரு தந்தையின் வெற்றி முழுமை அடைகிறது.

சில மாதங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளிவந்த, என் மனதை மிகவும் வேதனை கொள்ளசெய்த ஒரு செய்தி.
என்னவென்றால்..
தாய், தந்தையை அடுத்தடுத்து பறிகொடுத்த பதினான்கு வயது சிறுவன் ஒருவன்,
தன் சித்தப்பாவின் வீட்டில் தஞ்சமடைகிறான்.
ஆனால் அந்த பிள்ளையின் மனதில் எத்தனை வேதனையோ?, எதிர்காலத்தை பற்றிய என்ன பயமோ?
அடுத்த சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டு தன் வாழ்வையும் முடித்துகொள்கிறான்.

ஆம் நண்பர்களே!
ஒரு குழந்தைக்கு தன் தாய், தந்தை இருப்பு, மற்றும் அருகாமை கொடுக்கும் நம்பிக்கையை,
வேறு எதனாலும், எவராலும் கொடுத்து விடமுடியாது.
என்பதே நிஜம்.

கருவிலிருக்கும் ஒரு குழந்தை இந்த பூமிக்கு வரவேண்டுமா? வாழவேண்டுமா?
என்பதை கூட, தகப்பனின் வருமானம் தான் தீர்மானிக்கிறது.
என்பதாக சென்ற தொடரில் கண்டோம்.

ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளை படிக்கவைத்து, ஆளாக்கி, திருமணத்தை நடத்திவைத்து, நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் வரையில்,
அவர்கள் விரலை பிடித்துக்கொண்டு அவர்களுடனையே பயணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால், ஓகோவென்று செய்து முடிக்காவிட்டாலும், ஓரளவேணும் செய்து முடித்துவிடலாம்.
ஆனால் நாம் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழ்க்கையில் இவையெல்லாம் நடந்தே ஆகவேண்டும்.

தான் கானாத உலகத்தையும், தன் பிள்ளை காணவேண்டும் என்ற ஒரு தந்தையின் ஆசையும்,
தான் தொடமுடியாத சிகரங்களையெல்லாம்,
தன் பிள்ளை தொடவேண்டும், என்ற ஒரு தந்தையின் தவிப்பும்,
தான் வாழாமுடியாத ஒரு வாழ்க்கையை, தன் பிள்ளை வாழவேண்டும், என்ற ஒரு தந்தையின் கனவும்,
தான் அவர்களோடு இல்லாமல் போனாலும் கூட, அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், என்ற நோக்கத்தில் முன்னேற்பாடாக செய்துவைக்கும் செயல்களினால் தான் முழுமையடைகிறது.

தொடரும்…

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here