ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி- 9

1
224

இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து இதுவரை “வருமான காப்பீடு” ஒரு குடும்பத்திற்கு ஏன் அவசியம்? என்பதை பற்றிதான் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களின் நிலையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவருமே அவரவரின் சூழ்நிலைகளில் இருந்துதான் வாழ்க்கையினை பார்க்கிறோம். நிகழ்கால வாழ்க்கையில் சில, சில சமரசங்களை செய்துகொண்டு எப்படியோ அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறோம்.
ஆனால் எதிர்கால வாழ்க்கை என்பது சரியான திட்டமிடலின் வாயிலாகவே அமைய வேண்டியதாகும்.
எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் நீங்கள் எதிர்காலத்திற்குள் நுழைவது பாதுகாப்பற்றதாகும்.

ஒவ்வொரு அடுத்த நாளும், முந்தைய நாள் போலவே இருப்பதில்லை. சிறியதொரு மாற்றத்துடன்தான், ஒவ்வொரு நாளுமே தொடங்குகிறது. மகிழ்ச்சியோ, துக்கமோ, இன்றைய நாளின் நிலையே நாளையும் தொடரும் என்பதற்கான சாசனம் எதுவும் எழுதி கொடுக்கப்படுவதில்லை.

இன்று ஒட்டுமொத்த உலகத்திலேயும், ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.
பல நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து தவிக்கிறது.
தொழில், போக்குவரத்து, என எல்லாமே முடங்கிபோய் கிடக்கிறது. வேலையிழப்பு, வருமான இழப்பு, என்று கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி, பல குடும்பங்கள் வறுமையின் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

பாதி ஊதியத்துக்கு பணிபுரிய சம்மதிக்கும் பணியாட்களை மட்டும் வைத்து கொண்டு, நிறைய நிறுவனங்கள் இயங்கிகொண்டிருக்கின்றன.
2020 ல், நீங்கள், உங்கள் உயிரை தக்கவைத்துக் கொள்ளுவது ஒன்று மட்டும்தான், இந்த வருடத்தில் நீங்கள் அடையப்போகும் அதிகப்படியான லாபம் என்பதாகத்தான் சூழ்நிலைகள் சொல்கின்றன.

ஆனால் மார்ச் 23 க்கு முன்பு இப்படி ஒரு நிலமையை, நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்வோம் என்று, யாராவது சொல்லியிருந்தால் சத்தியமாக நம்பியிருக்க மாட்டோம்.
சில மாதங்கள் நீங்கள் வெளியில் போகமுடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு நிலைமை வரும் என்று, யாராவது சொல்லியிருந்தால் “அட போப்பா” என்று சிரித்துவிட்டு கடந்திருப்போம்.

ஆனால் யாரும் கற்பனையில் கூட சிந்திக்காத இந்த நிலமையை, நம் தலைமுறையில் நாம் பார்த்து,
நம் சொந்த வாழ்க்கையிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போதும் கூட, சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், உயிர் வாழ முடியும் என்கின்ற சூழ்நிலையில் தான் சிக்கிகொண்டிருக்கிறோம்.

கோடிகளில் சம்பளம் வாங்கிகொண்டிருந்தவர்கள் கூட, இன்று வேலை இழந்து, உயிர் பிழைத்தால் போதும், என்பதற்காக வீட்டிற்குள் முடங்கி போய்கிடக்கிறார்கள்.
எந்தகைய இடர்பாடுகள் வந்தாலும், தொடர் வருமானம் என்பது அவசியம் என்பதை, இந்த சூழ்நிலை நிறைய பேருக்கு ஒரு பாடமாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறது.

ஒட்டு மொத்த உலகிற்கும் உண்டான இந்த இடர்காலம், சில தனி மனிதர்களுக்கும், அவர் சார்ந்த குடும்பத்திற்கும், எல்லா காலத்திலும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அப்படி ஒரு நிலைமையை ஈடு கட்டுவதற்காக தான் “வருமான காப்பீடு” ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஒரு கிணற்றுக்கு ஊற்றுக்கண் எப்படியோ? அப்படித்தான் ஒரு வீட்டிற்கு வருமானமும். ஒரு கிணற்றின் ஊற்றுக் கண் அடைபட்டு போனால், தேங்கியிருக்கும் நீரானது, எத்தனை நாட்கள் தாங்கும்?
அந்த நீரை வாழ்வாதாரமாய் நம்பியிருக்கும் தவளை, மீன் போன்ற சின்ன, சின்ன உயிர்களும், கிணற்று நீரை நம்பி இருக்கும் விவசாயமும், அதன் பின் என்னவாகும்?

ஒரு வீட்டினுடைய நிலைமையும் அப்படித்தான்.
ஒரு வீட்டில் வாழ்வாதாரத்திற்கு காரணமான வருமானம் நின்று போனால், அந்த வீட்டு ஜீவன்களின் அன்றாட வாழ்க்கையும், எதிர்காலமும் என்னவாகும்?

சில வருடங்களுக்கு முன்பு, எனக்கு நன்கு பழக்கமான ஒரு இருபத்தி ஏழு வயதுடைய பையன், எதிர்பாராத ஒரு தீ விபத்தில் இறந்து போன போது, அவன் மனைவி ஐந்து மாத சிசுவிவினை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.
அந்த இருபது வயது பெண்ணின் நிலமையையும், எதிர்காலத்தையும், மனதில் வைத்து அவள் வீட்டினர் யோசித்தபோது, வெறும் ஐந்து மாதம் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்காக, மொத்த வாழ்க்கையையும் பணயம் வைப்பதும், பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்ப்பதும், சரியான முடிவாக இருக்காது, என்ற அவர்களின் கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்தபோது,
அந்தப் பெண் தன் கணவன் மீது இருந்த அன்பினால் பிடிவாதம் பிடித்தாள்.
இந்தக் குழந்தைதான் இனி என் எதிர்காலம் என்று சொன்னாள்.
நல்லபடியாக பெற்றெடுத்து, என் கணவன் ஆசைபட்டது போல வளர்த்து ஆளாக்குவேன். என்று கண்களில் கனவுகள் ததும்ப பேசினாள்.
( உயிர் கொடுத்து, உதிரத்தை கொடுத்து, தன்னுள் வளர்த்த, தன் உடம்பில் ஒரு அங்கமான, தன் பிள்ளையை அழிப்பதற்கு ஒரு தாய்க்கு எப்படி மனசு துணியும்? )

ஆனால் அந்தப் பையனின் வீட்டாரோ, அந்தப் பெண்ணின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கெஞ்சினார்கள். “எங்கள் பிள்ளையின் மீது நீ வைத்திருக்கும் அன்பு அத்தனையும் சத்தியம் தாயே. ஆனால் எங்களால் இத்தனை பெரிய சுமையை தூக்கி சுமக்க முடியாதும்மா, உங்கள் வீட்டு ஆளுங்க சொல்றது தான் எதார்த்தம்,
அவங்க சொல்ற மாதிரி கேட்டுகிட்டு, அவங்க கூட நீ போறதுதான் எல்லோருக்குமே நல்லதும்மா,” என்று கைகூப்பி அந்த ஏழை ஜீவன்கள் கெஞ்சிய போது, அந்தப் பெண்ணிற்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.
அந்த வீட்டில் இறந்து போனது அந்த இருபத்தி ஏழு வயது பையன் மட்டுமல்ல.
அவன் குழந்தையும் தான்.

இதே ஊரில் இன்னொரு செல்வந்தர் வீட்டின் ஒரே மகன், ஒரு கார்விபத்தில் இறந்து போன போது,
அந்தப் பெண்ணின் வயதையும், எதிர்காலத்தையும், மனதினில் வைத்து, அந்தப் பெண்ணின் வீட்டார் ஒரு முடிவுக்கு வந்தபோது,
இதே சூழ்நிலை அந்தப் பெண்ணிற்கும் நேர்ந்தபோது,
அந்தப் பையனின் வீட்டார், அந்தப் பெண்ணிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டது என்னவென்றால்..
“உன் வயிற்றில் இருப்பது எங்கள் குலத்தின் வாரிசு தாயே.
அதை எங்களுக்கு நல்லபடியா பெத்து கொடுத்துடும்மா.
இத்தனை பெரிய சொத்துக்கும் பிறக்கப்போகும் அந்த குழந்தைதான் ஒரே வாரிசு.
எங்கள் குலத்திற்கு வாரிசு இல்லாமல் செஞ்சிறாத தாயே. இவ்வளவு சொத்தையும் இப்பவே உனது பெயர் எழுதி வைத்து விடுகிறோம், உன்னை இந்த வீட்டில் மகாராணி போல நடத்துறோம்,
இந்த வீட்டின் அதிகாரம், நிறுவனங்களின் அத்தனை அதிகாரங்களையும் உன்னிடமே ஒப்படைக்கிறோம்.
நீ இந்த வீட்டிலேயே எங்களுக்கு பெண்ணா இருந்துரும்மா.”
என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டபோது அந்தப் பெண்ணிற்கும் வேறு வழி தெரியாமல் போனது.

ஒரு குழந்தை பிறக்கும் போதே தங்கத்தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்கப்படுகிறது. இன்னொரு குழந்தை உலகத்தை பார்க்கும் முன்பே கருவிலேயே அழிக்கப்படுகிறது.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை பணம்.

ஒரு குடும்பத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் இல்லாமல் போவதினால் ஏற்பாடும் பொருளாதார இழப்பு. கருவில் இருக்கும் குழந்தை வரையில் பாதிக்கிறது.
கருவில் இருக்கும் ஒரு குழந்தை இந்த பூமிக்கு வரவேண்டுமா?
வாழ வேண்டுமா? என்பதினை கூட அந்த வீட்டின் தொடர் வருமானம் தான் முடிவு செய்கிறது.

நண்பர்களே சொல்லுங்கள்!
ஒரு குழந்தையை தங்கதட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்றதை சரியென்றும்,
ஒரு குழந்தைக்கு பூமியில் வந்து வாழும் தகுதில்லை, என்று மறுக்கப்பட்டதை தவறென்றும் விவாதிக்க முடியுமா?

இரண்டுமே சரி தான்.
ஒரு குழந்தை வாழவைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இரண்டு விசயங்களின் முடிவுமே சரியானதுதான் நாண்பர்களே.

காத்திருங்கள் அடுத்த தொடரில் பார்க்கலாம்.
தொடரும்…

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்
*9787323994*

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here