ஏன்? எதற்கு ? இன்சூரன்ஸ் ? – பகுதி -7

0
211

ஒவ்வொரு மனித பிறப்பிற்கும், இறப்பிற்கும், காரண காரியங்கள் இருக்கிறது.
வெறுமனே உண்டு, உறங்கி, ஒன்றுமில்லாமல் போய்விடுவதற்காக உயர்வானதொரு மனிதப் பிறப்பு நிகழவே முடியாது.

ஒரே ஒரு புலியால் மட்டுமே ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுகளின் வளங்கள் பாதுகாக்கப்படுகிறது எனும்பொழுது,
ஒரு புலியின் பிறப்பிற்கே இத்தனை பெரிய காரணம் இருக்கிறது எனும் போது,
ஒரு மனிதனின் பிறப்பிற்கு மட்டும் காரண காரியங்கள் இல்லாமலா போய்விடும்?

ஒரு மனிதன் தனது தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதன் மூலமாக, தான்சார்ந்த சமுதாயத்தையும் சேர்தே,
அவன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டு போகும் வேலைகளையும் செய்துவிடுகிறான்.
அவ்வாறு செய்யாது போவான் என்றால், அதாவது தன் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடாமல், இன்னும் கீழ் நிலைக்கு போகும்படியான ஒரு நிலமையை ஏற்படுத்தி விடுகிறான் என்றால், அவன் தன் பிறப்பிற்கு எதிரான நிலையை மேற்கொண்டு இந்த பூமிக்கு துரோகத்தை செய்துவிட்டு போயிருக்கிறான் என்பதாகத்தான் கணக்கில் கொள்ளப்படும்.

சென்ற தொடரில் சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த இரண்டு தம்பதிகளின் வாழ்க்கையில்,
அதன் பிறகு என்ன தான் நடந்தது?
என்ற கேள்வியோடு முடித்திருந்தோம்.
ஆம் அவர்கள் வாழ்க்கையில் அதன்பிறகு அப்படி என்னதான் நடந்ததுவிட்டது?

வாழ்க்கை ஒரே நிலையில் ஆனந்தமாகப் போய்க் கொண்டிருக்கும் வரையில்,
ஒரு இழப்பின் துயரமோ,
அதற்காக கொடுக்கப்படும் விலை எத்தனை பெரியது என்பதோ நமக்கு தெரிவதில்லை.

வாழ்க்கை மொத்தத்திற்கும் திட்டம் வகுக்கிறோம்,
ஆனால் அடிப்படை கட்டுமானத்தில் கவனம் செலுத்த தவறிவிடுகிறோம்.
அஸ்திவாரத்தினை பலப்படுத்தாமல், கோபுரத்துக்கு மட்டும் வர்ணம் பூசும் வேலையை செய்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

தீபாவளி முடிந்து சரியாக நான்காவது நாள்,
ஏற்கனவே நண்பர்களோடு திட்டமிட்டிருந்த ஒருநாள் ஊட்டி சுற்றுலாவை முடித்துவிட்டு, சிவராமனும், மணிகண்டனும், தங்கள் நண்பரின் காரில் திருப்பூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நண்பர் கார் ஓட்ட, அவரருகில் சிவராமனும், பின்சீட்டில் மணிகண்டன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்கள் அமர்ந்திருக்க, கார் கோவையை தாண்டி அவினாசி ரோட்டில் விரைந்து வந்து கொண்டிருந்தது.

எப்போதுமே ஒரு சிறிய கவனக்குறைவு தான் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது.

ஆம் அப்படித்தான் இவர்கள் வாழ்க்கையிலிலும் நிகழ்ந்துவிட்டது. ரோட்டின் ஓரத்தில் மர லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்து நெஞ்சில் மோதியதில்,
சம்பவ இடத்திலேயே சிவராமனும், கார் ஓட்டிக் கொண்டிருந்த நண்பரும் பலியாகி விட , பின்சீட்டில் அமர்ந்திருந்த மணிகண்டன் உட்பட 3 பேரும் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர்.

ஒரு மரணம் சம்பந்தப்பட்டவருக்கு ஓரிரு நிமிட வலியோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால் அவரை நம்பி இருப்பவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் வலியாகவே மாறிவிடுகிறது. சிவராமன் இறந்து போன இரண்டாவது நாள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டனும், நினைவு திரும்பாமலேயே மனைவி, பிள்ளைகளிடம் கூட எதுவும் சொல்லாமல் இறந்து போனபோது, சந்திரிகா தன் கனவு வீட்டிற்காக கொஞ்சம், கொஞ்சமாக கட்டி வைத்திருந்த பணம் முழுவதுமாக திருப்பி வாங்கப்பட்டு சுத்தமாக தீர்ந்து போயிருந்தது.

நண்பர்களே இந்த மரணத்தின் வலியையும், அது தரும் துயர்களையும், நாம் விவரித்துக்கொண்டு போவதென்றால், பக்கங்கள் போதாது. ஆனால் இங்கே நாம் ஒரு எதிர்பாராத நிகழ்வு ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும், அதற்காக சம்ந்தப்பட்டவர்கள் கொடுக்க வேண்டிய விலையைப் பற்றியும் தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

சிவராமனை பொறுத்தவரை சில நொடிகள் மரண வலியை மட்டும் அனுபவித்து விட்டு போய்விட்டான். மணிகண்டன் மயக்க நிலைக்குப் போகும் வரையில் மட்டும் அவனது வலியை அனுபவித்து விட்டு, அதன்பிறகு நினைவு திரும்பாமலேயே போய்விட்டான். இப்போது சிவராமனை நம்பியிருந்த ஜீவன்களும், மணிகண்டனை நம்பியிருந்த ஜீவன்களும், அடுத்து என்ன ஆனார்கள்? என்பது மட்டும்தான் நாம் பார்த்து படிக்கவேண்டிய பாடமாய் இங்கே இருக்கிறது.

சந்திரிகாவின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், “எங்களுக்கு அப்படி எந்த பெண்ணும் கிடையாது” என்று துக்கவீட்டிற்கு கூட வராமலேயே ஒதுங்கிக் கொள்ள,
மணிகண்டனின் பெற்றோர், மற்றும் சில உறவினர்கள் மட்டும் வந்து, மணிகண்டனின் இறுதி சடங்கில் அவர்கள் செய்யவேண்டிய சில சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் செய்து முடித்துவிட்டு, எங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் இனி எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று அன்றே போய்விட,
அடுத்து மணிகண்டனையே நம்பி வந்த மூன்று ஜீவன்கள் இனி என்ன செய்வார்கள்?
இந்த உலகத்தில் அவர்கள் எப்படி வாழ்வார்கள்? என்ற கேள்விக்கு விடை சொல்வதற்குத்தான் ஒருவருமில்லை.

சிவராமன், நிர்மலா குடும்பத்தினர் மட்டும், காரியம் முடிந்து சில வாரங்கள் அவர்களோடு தங்கியிருந்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதையெல்லாம் கூடிபேசி முடிவாய் இரண்டு பேரும் தங்களுடனையே வந்துவிடும்படி யோசனை கூறியபோது,
நிர்மலாவோ சந்திரிகாவின் பரிதாப நிலையையும் மனதில் கொண்டு, இப்போதைக்கு என்னால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது,
கொஞ்ச நாட்கள் போகட்டும், அவகாசம் கொடுங்கள் என்று, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அங்கேயே இருந்தது, சந்திரிகாவுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது.

நிர்மலாவிற்காவது துணையாய் சில ஆட்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய கனவுகளையும், வாழ்க்கையையும் யாராலும் மீட்டுக் கொடுத்து விட முடியாது என்றாலும் கூட, அடைக்கலமும், ஆறுதலும் அளிப்பதற்காகவாது சில உறவுகள் இருக்கிறது.
ஆனால் சந்திரிகாவின் நிலைமை?

நான் சென்ற தொடரிலையே தெளிவாய் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறேன்,
அதாவது ஒரு மனிதருக்கு இன்சூரன்ஸ் அவசியமே இல்லை, அவர் ஈட்டிகொண்டிருந்த வருமானத்திற்கு தான் இன்சுரன்ஸ் அவசிய தேவை என்பதை.

இந்த நிலமையில் நிர்மலாவிடம் அவள் வீட்டிற்காக கட்டி வைத்திருந்த பணமாவது மிச்சம் இருக்கிறது.
ஆனால் சந்திரிகாவிடமோ அவள் கணவன் கொடுத்துவிட்டுப் போன இரண்டு பெண் செல்வங்கள் தவிர,
வேறெதுவும் இப்பொழுது அவளிடம் இல்லை.
இப்போது அவள் என்ன முடிவுக்கு வரவேண்டும்.?
அன்றாட வீட்டுச் செலவு, அடுத்த மாத வீட்டு வாடகை, இதற்கெல்லாம் இனி அவள் என்ன செய்ய வேண்டும்?
கணவன் பிள்ளைகள் என, நான்கு சுவற்றிக்குள்ளே தான் தன் உலகம் இருக்கிறது என்று,
இதுநாள் வரையில் நம்பி இருந்தவள்,
இனி வெளியுலகம் காண வேண்டும்.
வெளியுலகம் பழகவேண்டும்.
இனி அந்த வீட்டு குழந்தைகள் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

இரண்டு பெண்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரி பாதிக்கப்பட்டிருக்கும் போது, நாம் ஏன் சந்திரிகாவை பற்றி மட்டும் பெரிதாக கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்?
ஆமாம் உண்மையிலேயே அவள்தான் பரிதாபத்துக்குறிய ஜீவன்.

தன் தலைமுறையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி கொண்டு போகும் பணியினை செய்துகொண்டிருப்பவர்கள், எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் தீவிரமாக கவனத்தில் கொள்தல் வேண்டும்.
அதாவது நம் அன்புக்குறியவர்களோடு நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்கள் அன்றாட வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தே ஆகவேண்டும்.
அதேசமயம் அவர்கள் வாழ்க்கை
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தே தீர வேண்டும்.

அதனை மனதினில் வைத்து நாம் சில பொருளாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவைக்க வேண்டும்.
அந்த ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்றால்..
அதாவது நாம் இருந்து அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டியதை செய்தால் எப்படி செய்து கொடுப்போமோ?
அதைவிட ஒரு படி மேலாக,
எப்படியிருக்கவேண்டும்? அதைவிட ஒரு படி மேலானதாக இருக்கவேண்டும்.

ஆம் அதைத்தான் சிவராமன் செய்துவைத்திருந்தான்.

எப்படி?
காத்திருங்கள் பார்க்கலாம் நிர்மலா, சந்திரிகா, என்ற இரண்டு பெண்களின் வாழ்க்கை அடுத்து எப்படி மாறிப்போனது என்பதை! தொடரும் …

-கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்
9787323994

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here