ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? – பகுதி-6

0
243

குடும்பத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான பெண்களிடத்தில் இன்சூரன்ஸ் பற்றிய பார்வை என்பது விசாலமானதாக இல்லை.
அதேசமயம் சற்றே வித்தியாசமானதாகவும் இருக்கிறது.

பெரும்பாலான குடும்பங்களில் இன்சூரன்ஸ் மாதிரியான நீண்டகால சேமிப்பு திட்டங்களுக்கு இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாக சென்ற தொடரில் முடித்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாகவே இந்த கட்டுரையைத் தொடர்வோம். காரணங்களையும் ஆராய்வோம்.

நிர்மலாவும், சந்திரிகாவும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் நல்ல தோழிகள்.
நிர்மலாவின் கணவர் சிவராமனும், சந்திரிகாவின் கணவர் மணிகண்டனும், பள்ளிக் காலத்திலிருந்தே தோழர்கள்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சநதிரிகாவும், திண்டுக்கல்லை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டனும், காதல் திருமணம் செய்து கொண்டதை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிவராமன் நிர்மலா தம்பதிகள் அவர்களுக்கு ஆதரவாக தங்கள் வீட்டு அருகிலேயே வீடு பார்த்து குடியிருக்க பெரிதும் உதவினார்கள்.

இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து பள்ளிக்குப் போகும் வயது வந்தும் கூட , வருடங்கள் பல கடந்தும் கூட, மணிகண்டன், சந்திரிகா வீட்டாரின் கோபம் கொஞ்சமும் குறையவில்லை போலும்.
கிட்டத்தட்ட இரண்டு பேருக்குமே பிறந்த வீட்டாரின் தொடர்பு முற்றிலும் முறிந்து போனது போலதான்.
ஆனால் அந்த குறையே தெரியாமல் சிவராமன், நிர்மலாவின் குடும்பம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது.
சாதாரண நாட்களை தவிர ஏதாவது பண்டிகை நாட்கள் என்றால் இரண்டு குடும்பமும் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடும் அளவிற்கு இரண்டு குடும்பத்தின் உறவும் அத்தனை நெருக்கமாக இருந்தது.

மணிகண்டன், சந்திரிகா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகளைகள் என்றால்.
சிவராமன், நிர்மலா தம்பதிகளுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டும் தான்.
சிவராமன் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் கணக்காளராகவும், அதே நிறுவனத்தில் மணிகண்டன் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்க.
நிர்மலாவும், சந்திரிகாவும் இல்லத்தை நிர்வகித்துக்கொள்ள. வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது.

ஆனால் எல்லா காலகட்டத்திலும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியான நிலையிலேயே தொடர்வதுமில்லை. அமைவதுமில்லை. மாற்றங்களுக்கு உட்பட்டது தான் வாழ்க்கை எனும்பொழுது,
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மாற்றங்களினால் வீழ்ச்சியடைந்து விடாத குறைந்தபட்ச திட்டத்தினையும், வகுத்துக்கொண்டு செயல்பட்டாலே போதும்.
வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்துவிடலாம்.

இங்கே யாரை நம்பியும், யாரும் இல்லை என்றால், ஒவ்வொருவருமே தனி, தனி மனிதர் தான் என்றால்,
எந்தவித திட்டமிடலும் தேவையே இல்லை.
உண்ண உணவும், உடுத்த உடையும், தலையில் வைரகிரீடம் வைத்து, தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒரு நாட்டிற்கு ராஜாவாக வேண்டும் என்ற ஒரு கனவும் போதும்.
ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம்.
ஒருவேளை நீங்கள் ராஜாவாக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே போய்விட்டாலும் கூட, அதனால் யாரும் பாதிக்கப்பட போவதில்லையே.

ஆனால் உங்களை நம்பி யாராவது இருந்தால்,
அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, ஒரு சிறிய திட்டத்தையாவது செயல் நிலையில் வைத்திருப்பதுதான், இடர்பாடுகளில் வீழ்ந்துவிடாமல் நம்மை நம்பி இருப்பவர்கள் மீண்டு வருவதற்கான ஒரே வழி.

நிர்மலாவிற்கும், சந்திரிக்காவிற்கும் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்றால்,
எப்படியாவது சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் உட்கார்ந்து விட வேண்டும் என்பதுதான். சொந்தமாக ஒரு வீடு என்பது ஒவ்வொரு மிடில்கிளாஸ் குடும்பத்தின் கனவும் கூடதான்.
அதுதான் சமுதாயத்தில் அவர்களுக்கான ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகவும், தங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்கு தங்கள் மூலமாக சொல்லப்படும் ஒரு பதிலாகவும், அடையாளப்படுத்தப்படுகிறது.

நிர்மலாவும், சந்திரிகாவும் நிறைய தேவைகளை குறைத்துக் கொண்டு வாராந்திர சீட்டு, மாதாந்திர சீட்டு, சிறுசேமிப்பு பண்டு, என்று, அவர்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் பணத்தை சேமித்து தவணைத் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்களிடம் பணத்தைக் கட்டி கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் சிவராமனும், மணிகண்டனும் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அலுவலக பணியாளர்கள் மட்டத்தில் இன்சூரன்சின் அவசியத்தைப் பற்றி எடுத்து சொல்வதற்காக நிறுவனத் தலைவரின் அறிவுறுத்தலின் பெயரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்சூரன்ஸ் எத்தனை முக்கியம் என்பதை அந்த நிறுவனத்தின் தலைவராலும் பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது பெயரில் கட்டாயம் இன்சூரன்ஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த நிறுவனத் தலைவரின் அன்புக்கட்டளையாகவே இருந்தது.
அதற்காக சிறிய அளவில் நிறுவனமும் உதவி செய்யும் என்பதாகவும் அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஆனால் மாதாமாதம் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்டத் தொகை பிடித்தம் செய்து கொள்ளப்படும் என்பதில் நிர்மலாவிற்கும், சந்திரிகாவிற்கும், துளியும் உடன்பாடு இல்லை.
மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டால் அவர்கள் வீடு கட்டும் கனவு தள்ளிப்போகும் என்பதால் அவர்கள் இன்சூரன்சிற்கு தடை போட்டார்கள்.
வீடு கட்டிய பிறகு இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என பிடிவாதமாய் இருந்தார்கள்.

நிறுவனத் தலைவரின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்த முடியாமலும்,
இல்லத் தலைவிகளின் பிடிவாதத்தை மாற்ற முடியாமலும், சில வாரங்கள் நகர்ந்தன. மணிகண்டனுக்கு சந்திரிகாவின் பிடிவாதத்தினால் தயக்கம் இருந்ததால், இந்த விசயத்தை கொஞ்சம் தள்ளிப் போடலாம் என நண்பனிடம் பேசினான். ஆனால் சிவராமனுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்ததால் இன்சூரன்ஸ் எடுப்பதில் உறுதியாக இருந்தான். நிறுவனத் தலைவரால் முக்கியத்துவம் கருதி பரிந்துரைக்கப்பட்டதே தவிர, கட்டாயப்படுத்தவில்லை.

இன்சூரன்ஸ் ஆலோசகரின் அறிவுரையின் பெயரில், சிவராமனால் மாத, மாதம் பிரிமியம் கட்டும் வசதியில் பத்து லட்சம் ரூபாய் கவரேஜ் கொடுக்கக்கூடிய ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசியும்,
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பிரிமியம் கட்டக்கூடிய வசதியில், ஐம்பது லட்சம் ரூபாய்கு கவரேஜ் கொடுக்கக்கூடிய ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியும்,
மற்றும் குடும்பத்தினர் மூன்று பேருக்கும் சேர்த்து கவரேஜ் கொடுக்க கூடிய வகையில், ஒரு மெடிக்கல் பாலிசியும், என மூன்று விதத்திலான பாலிஸிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இப்போது இந்த பிரச்சனையில் சந்திரிகா ஜெயித்து விட்டாள்.
நிர்மலா தோற்று விட்டாள்.
அப்படித்தான் இந்த விஷயம் தோழிகள் இருவர் மத்தியிலும் பார்க்கப்பட்டது.
பேசிகொள்ளப்பட்டது.
சொல்லப்போனால் சந்திரிகா தனது வெற்றியின் சந்தோசத்தை தோழியின் முன் ஆனந்த நடனமாடியே கொண்டாடி விட்டாள்.
“உனக்கு புருஷன கைக்குள்ள வச்சுக்கிற சாமர்த்தியமே போதாதுடி குழந்தை.”
என்று கிண்டலடித்தாள்.
“எப்படியாவது அண்ணனை கட்டுன பணத்தை திரும்ப வாங்க வச்சிடு” என்றெல்லாம் அறிவுறுத்தினாள்.

ஆனால் சிவராமன் உறுதியாக இருந்துவிட்ட காரணத்தினால், நிர்மலா தோற்றுவிட்ட சோகத்தில் முகம் வாடி கிடந்தாள்.
ஆனாலும் தோழிதான் தேற்றினாள்.
“சரி விடு அண்ணன் பிடிவாதம் தான் தெரிஞ்ச விசயம் ஆச்சே.
கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக்கலாம்.”
என்று தோழியை சமாதானப்படுத்தினாள்.

ஆனால் எல்லாக் காலகட்டங்களிலும் வாழ்க்கை நாம் திட்டமிட்டது போலவே தொடர்வது இல்லையே.? ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை சுற்றி சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதானே இருக்கிறது.
அந்த மாற்றங்களுடனையே நம் வாழ்க்கையிலும் சிறியதொரு மாற்றத்தை செய்துகொண்டு, மாற்றத்தின் திசையிலேயே பயணிக்க வேண்டியது இருக்கிறதே.!

அடுத்த நாள் வாழ்க்கை எப்படி இருக்கும்.?
அது ஒரு பிரபஞ்ச ரகசியம். வாழ்க்கையின் ரகசியங்களை எல்லோருமே முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டால், எல்லோருமே, எல்லாவற்றையுமே, சரியாக செய்து வைத்து விடலாம்.
அப்படித் தெரிந்து கொள்வதற்கு எல்லோருக்கும் ஞானதிருஷ்டியா இருக்கிறது.?
ஆனால் பட்டு தெரிந்துகொள்ளாமல், பார்த்தே தெரிந்து கொள்ளும்படியான பாடங்கள், உலகமெங்கிலும் வியாபித்து கிடக்கிறது.

உலகத்தைப் படிப்பவன் வினைகளிலிருந்தும்,
விளைவுகளிலிருந்தும், தன்னையும், தன்னை நம்பி இருப்பவர்களையும் பாதுகாப்பான்.

மாதங்கள் சில கடந்தன.
மறுபடியும் இரண்டு குடும்பங்களும் இயல்பு நிலைக்கு திரும்பின. எப்பொழுதும் போல் வாழ்க்கை அவர்களுக்கு சந்தோஷமாகவே போய்க் கொண்டிருந்தது. இதற்கிடையில் ஒரு தீபாவளி பண்டிகையும் அவர்களை கடந்து போனது.
அந்த பண்டிகை இரண்டு விட்டாராலும் இணைந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

எல்லாம் சரி அதன்பிறகு அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன தான் நடந்தது? பார்க்கலாம் அடுத்த பகுதியில்.
காத்திருங்கள்! தொடரும் …

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்
9787323994

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here