ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-5

1
303

அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் இன்சூரன்ஸ் முதன்மையான இடத்தில் இருத்தல் வேண்டும் என்பதாக பொருளாதார வல்லுனர்களின் பரிந்துரைகள் இருந்தாலும் கூட..
மக்கள் விரும்பி வாங்கக்கூடிய பொருள்களின் பட்டியலில் இன்சூரன்ஸ் இதுவரை இடம்பெறவில்லை. தேடிபோய் விற்கக்கூடிய பொருள்களின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறது.!

ஆசைப்பட்டு ஒரு தங்கம் வாங்குவதை போல.. நிலம், வீடு, வாங்குவது போல.
ஒரு கார், பைக் வாங்குவதைப் போல,
இன்சூரன்சும் விருப்பப்பட்டு வாங்கக்கூடிய பட்டியலில் இடம்பெறவே இல்லை.
அது ஒரு இன்சூரன்ஸ் முகவரால் தேடிப்போய் மக்களிடம் விற்கப்படும் பொருளாகத் தான் இன்னமும் கூட இருக்கிறது.

ஆனால் அதில் உளவியல் ரீதியான சில காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு தங்கத்தை ஆபரணமாக வாங்கி அணிந்து மகிழ்வதில் இருக்கும் சந்தோசம்.
ஒரு வீட்டையும், நிலத்தையும், கண்களால் பார்த்து இதெல்லாம் எனக்கு சொந்தமானது என்று பெருமை அடைவதில் இருக்கும் சந்தோஷம். ஒரு கார், பைக், வாங்கி ஓட்டி மகிழ்வதில் இருக்கும் சந்தோஷம். ஒரு இன்சூரன்ஸ் பாலிசியில் கிடைக்காது தான்.

காரணம் அது கண்களால் பார்த்து தொட்டு அனுபவித்து மகிழ முடியாத ஒரு பொருள்.
அதனைப்பற்றி அதன் முக்கியதுவத்தை பற்றி இன்சூரன்ஸ் தொழிலில் இருக்கும் நாங்கள் மட்டும் தான் சொல்கிறோம்.

இன்சூரன்ஸ் என்ற இந்த பொருள் உங்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் உறுதுணையாக இருக்கும்.
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களையும், வளங்களையும், கரைந்து போகாமல் இப்படியெல்லாம் பாதுகாத்து கொடுக்கும்.

உங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்கு இந்த, இந்த விதத்தில் எல்லாம் உதவியாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் திருமணம் மற்றும் அவர்களின் அடுத்தடுத்த கட்ட வாழ்க்கைக்கு இப்படி, இப்படியெல்லாம் உதவியாக இருக்கும்.

உங்கள் ஓய்வு காலத்தில் உங்களுக்கு துணையாக நின்று உங்களை இப்படியெல்லாம் பாதுகாக்கும். இடர்பாடுகள் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் அந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் என்பது ஒரு காவலனாக துணை நிற்கும்.
என இன்சூரன்ஸ் தொழிலில் இருக்கும் நாங்கள் தான் அந்த இன்சூரன்ஸ் என்ற மாய பொருளின் வடிவத்தை பற்றி அதன் செயல்பாடுகளை பற்றி பக்கம் பக்கமாய் விளக்கம் சொல்கிறோம்.

ஆனாலும் அதிலிருக்கும் உண்மைதன்மையை நீங்கள் உணராத வரையில்..
உங்களுள் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதில்லை.
ஒரு தங்கத்தைப் போல, நிலம், வீடு, கார், பைக், போல உங்கள் கண்களுக்கு அது கவர்ச்சியாக தெரிவதில்லை.
காரணம் தற்காலிகமாக அந்தந்த நிமிஷங்களில் நீங்கள் அடையும் சந்தோஷம் அதில் இல்லை.
அது ஒரு நெடுங்கால திட்டம்.
பதினைந்து இருபது வருடங்கள் கழித்து நடக்கப்போகும் ஒரு விஷயம்.
இப்போது அது எனக்கு எந்த ஒரு பரவசத்தையும் கொடுக்கப்போவதில்லை.
இப்போது எனக்கு அதைவிட முக்கியமான தேவைகள் நிறைய இருக்கிறது.

இப்படியான நிலைபாடுதான் மக்களிடத்தில் இன்சூரன்சை பற்றிய அளவீடாக இருக்கிறது.

ஆனால் நண்பர்களே கார், பைக், பார்க்காத எத்தனையோ தலைமுறைகள் நமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள். வீடு, நிலம், இல்லாத.. தங்கத்தை தொட்டுக் கூட பார்க்காத விளிம்புநிலை மனிதர்கள் எத்தனையோ பேர் இன்னமும் வீதிகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் உணவு, நீர் இல்லாமல் ஒரு தலைமுறை வாழ்ந்தது என்பதற்கான ஆதாரம் எதையும் இதுவரை எங்கேயும் கண்டெடுக்கபடவில்லை.

வாழ்வதற்கு எது முக்கியம் என்ற பட்டியலில் எதனை நீங்கள் முதன்மையாக வைத்திருக்கிறீர்களோ
அதன் அடிப்படையிலேயே உங்கள் எதிர்காலமும் உங்களை நம்பி இருப்பவர்களின் வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது.

பாதுகாப்புடன் கூடிய சேமிப்பு என்பது ஏதோ நாங்கள் புதிதாக கண்டுபிடித்து சொல்லும் விசயம் அல்ல.
அது நமது பாரம்பரியம்.
ஊரில் ஒருவன் தேவையில்லாத செலவுகளை செய்து கொண்டு திரிந்தான் என்றால் அவனை ஊதாரி என்று சொல்வார்கள்.
கடன் வாங்காமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்.. சமுதாயத்தில் அவன் கவுரவமான மனிதனாக பார்க்கப்படுவான்.

ஆனால் இன்று கடன் வாங்கிவிட்டு அதனை அவன் திருப்பி செலுத்தும் திறனை வைத்துத்தான் ஒருவன் கவுரவம் அளவிடப்படுகிறது. ( சிபில் ஸ்கோர் ) என்ற அடிப்படையில்.

ஒரு இன்சூரன்ஸ் என்பது உங்களை கோடீஸ்வரராக மாற்றிவிடும் என்றோ..
உங்கள் வாழ்கையின் தரத்தையே மாற்றி அமைத்துவிடும் என்றோ..
நாங்கள் சொல்லவில்லை.
அது உங்கள் கடமைகளை செய்துமுடிக்க துணை நிற்கும் என்றும்,
இடர்பாடுகள் ஏதாவது ஏற்படுமாயின் உங்களை நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்தை பாதுகாத்து நிற்கும் என்பதை மட்டும் தான் சொல்கிறோம்.

ஆமா!
நண்பர்களே இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைதான் என்ன? கலெக்டர், டாக்டர், வக்கீல், பிசினஸ்மேன், என்பது மாதிரி பதில்களுக்கான கேள்வி அல்ல நான் கேட்பது.
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நான் அதைபற்றியெல்லாம் கேட்கவில்லை.
நீங்கள் இப்போது என்ன வேலையை தினமும் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.?
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

எப்போது உங்களுக்கு திருமணம் நடந்ததோ, எப்போது உங்கள் வாழ்க்கையில் குழந்தைகள் வந்தார்களோ.. அதன் பிறகு நீங்கள் செய்துகொண்டிருக்கும் ஒரே வேலை என்னவென்றால்.. குழந்தைகளை படிக்க வைத்து, ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு.
அதன் பிறகு உங்கள் ஓய்வு காலத்தில் உங்கள் துணையோடு நிம்மதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.
அதற்கான வேலையைத்தான் நீங்கள் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அதையே தான் நாங்களும் உங்களுக்கு சுட்டிகாட்டுகிறோம். வலியுறுத்துகிறோம். ஏனென்றால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வாழ்நாள் பணி என்பது உங்களுக்கானது மட்டுமல்ல. உங்களையே நம்பி இருப்பவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியது.

இந்த இடத்தில் தான் நாங்கள் அழுத்தமாக ஒரு கருத்தினை உங்களிடத்தில் பதிவு செய்துவிட முயற்சிக்கிறோம்.
எப்படியாவது புரிய வைத்திடவும் முயர்சிக்கிறோம்.
அது என்னவென்றால்..
நண்பரே! நீங்கள் முன்னெடுத்து செய்து கொண்டிருக்கும் இந்தப் பணி என்பது மிகவும் முக்கியமானது.
நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பணி நடந்து முடிந்தே தீர வேண்டும்.
ஆதலால் உங்களின் கட்டாய கடமைகளான இநத பணிகளை மட்டுமாவது இன்சூரன்ஸ் பாதுகாப்புக்கு வளையத்திற்குள் கொண்டுவந்துவிடலாம்.

ஏனென்றால் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும்,
சர்கஸில் சாகசம் செய்யும் போது கீழே ஒரு வலையை கட்டி வைத்துகொண்டுதான் சாகசத்தில் ஈடுபடுகிறார்கள் அல்லவா?
அதனை போலதான் தன் வாழ்நாள் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதருக்கு இன்சூரன்ஸ் என்பதும்.

அதனால் இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பொறுப்பை எங்களிடமும் பகிர்ந்து கொடுங்கள்.
நாங்களும் உங்களுக்கு துணை நிற்கின்றோம் என்று தான்.

அதாவது நீங்கள் ஒரு கடை வைத்திருந்தாலோ..
ஒரு அலுவலகம் வைத்து நடத்திக் கொண்டிருந்தாலோ.. நீங்கள் இல்லாத நேரத்தில் அதனை பூட்டி வைக்க மாட்டீர்கள் தானே.?
நீங்கள் அங்கே இல்லாத நேரத்தில் உங்கள் இடத்திலிருந்து உங்கள் பணிகளை கவனிக்க இன்னொரு ஆளை நியமிப்பீர்கள் தானே?
நான் இல்லாத சமயத்தில் நீ பத்திரமா பார்த்துக்கப்பா என்று ஒரு ஆளை நியமித்து வைப்பீர்கள் தானே? அதைப்போலத்தான் இன்சூரன்சும்.

கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்கள்.
எதிர்பாராமல் நடந்த ஒரு மரணச் செய்தியை எங்காவது கேட்க நேர்ந்தால் அது சம்பந்தமாக அங்கே கேட்கப்படும் முதல் கேள்வி.
“அவருக்கு என்ன வயது இருக்கும்?”
இரண்டாவது கேள்வி “இன்சுரன்ஸ் ஏதாவது எடுத்து வைத்திருந்தாரா?” என்பதாகத்தான் இருக்கும்.
வயதை கேட்பது அவர் அந்த வீட்டில் என்ன பொறுப்பின் நிலையில் இருந்தார் என்பதை அனுமானித்துக் கொள்ள.
இரண்டாவது கேள்வி அவரை நம்பி இருந்த குடும்பத்திற்கு எதையாவது செய்து வைத்திருக்கிறாரா? என்பதை அறிந்துகொள்ள.

ஆக இன்சுரன்ஸின் அவசியம் எல்லோருக்குமே ஓரளவுக்கு தெரிந்தே இருக்கிறது.
ஆனால் அந்த இடத்தை கடக்கும் போதே அந்த செய்தியை போலவே
அந்த சம்பவத்தையும் கடந்து போய் விடுகிறோம் என்பது தான் உண்மை.

ஏனென்றால் அது யாருக்கோ நடந்தது. நமக்கு அதனால் எந்த பாதிப்புமில்லை.
ஆமாம்.! உண்மைதான் அதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை தான்.
ஆனால் அதில் நமக்கான பாடமுமா இல்லாமல் போய்விட்டது.?

ஒரு வீட்டில் எதிர்பாராத ஒரு மரணம் நிகழும்போது அதனால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த வீட்டின் பெண்களாகத்தான் இருப்பார்கள்.
அந்த வீட்டின் குழந்தைகளுக்கு அந்த இழப்பின் வலி புரியாத வயதாக கூட இருக்கலாம்.
அந்த சூழ்நிலையில் அந்த குடும்பத்தின் மொத்த பொருளாதார சுமையையும் அந்த வீட்டுப் பெண்களின் தலை மேல்தான் விழுகிறது.
அதேசமயம் நிறைய வீடுகளில் அந்த நிலைக்கு காரணமாகவும் அந்த வீட்டின் பெண்கள்தான் இருக்கிறார்கள்.

ஏனென்றால் இன்சூரன்ஸ் மாதிரியான நீண்ட கால சேமிப்புக்கு முட்டுக்கட்டை போடுவதில் பெரும்பாலும் அந்தந்த வீட்டின் பெண்கள்தான் இருக்கிறார்கள்.
அதற்கும் முக்கியமானதொரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.
பார்க்கலாம் அந்த காரணங்கள் எதனால் என்று..
அடுத்த தொடரில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் கதையோடு.
தொடரும்…

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்.
9787323994

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here