ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 25

0
237

ஒரு தொடர்கதையை படிக்கும்போது, அல்லது ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது, சில அத்தியாயங்களிலேயே அந்த கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஓரளவேணும் யூகித்துவிடும் திறன் பொதுவாக எல்லோருக்குமே இருக்கும் தானே?

அப்படியென்றால் தற்போது வாழும் வாழ்க்கையில், செய்துகொண்டிருக்கும் செயலை வைத்து அவரவர் வாழ்க்கையின் பிற்பகுதி எப்படி இருக்கும் என்பதையும், ஓரளவிற்கு அவரவரே அனுமானித்துவிட முடியும் தானே?

இருபது வயதில் அறுபதின் வாழ்க்கை புலப்படாமல் இருக்கலாம்,
ஆனால் நாற்பதில் அறுபதின் வாழ்க்கை புலப்பட்டுவிடுமே? புரிந்திவிடுமே.?

ஆனாலும் பலரின் முதுமை கால வாழ்க்கை அப்படியொன்றும் சிறப்பானதாக இல்லையே?

சிலபேர் தள்ளாடும் வயதிலேயும் ஏதேதோ வேலையை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

சில பேர் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்தே கடைசி வரையில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

தங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை ஞானதிருஷ்டியே கிடைத்து முன்பே கண்டுபிடித்துவிட்டாலும் கூட, அதற்கான எந்தவித திட்டமிடலும் இல்லாமல், அதற்கே தயாராக இருந்தது போல ஏற்றுக்கொள்வதும்?
சரணடைந்து விடுவதும் ஏன்?.

எதையாவது நட்டு வைத்து பராமரித்து வளர்த்திருந்தால் காலமெல்லாம் அதன் பலனை அனுபவித்து கவுரவமாக வாழ்ந்து விடலாம்,
ஆனால் வெறும் நிலத்தை கிளறி, கிளரி பார்பதால் என்ன அதிசயம் நிகழ்ந்து விடப்போகிறது.?

பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து ஆளக்கிவிட்டால் பிற்காலத்தில் அதன் பலனை அனுபவித்துக்கொள்ளலாம் என்பதே நிறையப்பேரின் நம்பிக்கையாக இருக்கிறது,
ஆனால் பிள்ளைகள் என்பவர்கள் காலமெல்லாம் உங்களுக்கு பலன் தரக்கூடிய மரங்கள் அல்ல,
வேறு ஒரு இடத்தில் விருட்சமாக வளர்வதற்காக உங்களிடமிருந்து பிரிந்து போன விதைகள் அவர்கள்.

பிள்ளைகளின் மீது உங்களின் அதிகபட்ச உரிமை என்ன தெரியுமா?
உங்கள் தோட்டத்தில் விளைந்த மாங்கனியின் விதையை வேறொருவர் வாங்கி சென்று தன் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கிறார்,
அது மரமாகி பலன் கொடுக்கும் போது அதன் மீதான உரிமை யாருக்கு?

விதை நீங்கள் கொடுத்தது என்ற நன்றிக்காக சந்தோசத்திற்காக அதன் பலனில் கொஞ்சத்தை அல்லது முதல் விளைச்சலை அவர் உங்களுக்கு கொடுக்கலாம்,
அது அவர் உங்களுக்கு செய்யும் மரியாதை.
ஆனால் உங்கள் தேவைக்காக காலம் முழுவதும் அந்த மரத்தின் பலனிலிருந்து பங்கு கேட்டால் அதில் ஏதாவது நியாயம் தர்மம் இருக்குமா?

இதன் நியாயத்தை நீங்கள் புரிந்துகொண்டால்,
ஏற்றுக்கொண்டால்,
பிள்ளைகள் மீதான உரிமையையும் நியாயத்தையும் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் உங்களுக்கு சுலபம் தான்.

வேறொரு தோட்டத்தில் நடப்பட்டு வளர்ந்த மரத்தின் மீது உங்கள் உரிமை என்பது,
‘இது என் தோட்டத்து விதை என்ற பெருமை மட்டும் தான்’.
உங்கள் பிள்ளைகளின் மீதான உரிமையும் அப்படித்தான்.

இந்த இரண்டு விசயத்தையும் உங்களால் ஒரே தராசில் எடைபோட முடியுமென்றால், உங்கள் முதுமை காலம் தெளிந்த நீரோடை போல அமைதியாய் சென்று கடல் சேரும் என்பது தீர்க்கம்.

கடன் பட்டாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்கி விட்டுவிட்டால் பிற்காலத்தில் நம்மை நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு தொழிலாளி அப்பாவின் நம்பிக்கைக்கும்,
ஒரு பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து அவர்களை இயக்கும் ஒரு காட்பாதராக மிச்ச வாழ்க்கையை கழித்து விடலாம் என நம்பும் ஒரு பணக்கார அப்பாவின் நம்பிக்கைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை சென்ற தொடரிலேயே சொல்லியிருந்தேன், அதையேதான் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

ஏனென்றால் நம்பிக்கைகள் எல்லாம் அப்படியே நடந்துவிட்டால் கடவுளையும் மறந்துவிடுவோம், பாடம் கற்றுக்கொள்வதையும் தவற விட்டு விடுவோம்.

உங்கள் பக்கத்து வீடுகளில், உங்கள் தெருவில், அல்லது உங்கள் ஊரில், அல்லது உங்கள் உறவினரில் யாரேனும் வயதானவர்கள் இருந்தால்,
அவர்கள் தங்களது பிள்ளைகளின் வீட்டில் ஒண்டி குடித்தனம் நடத்துபவராக இருந்தால், சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களின் வாழ்க்கை முறையை கொஞ்சம் உற்று கவனித்து பாருங்கள்,
ஏனென்றால் நாளை உங்களுக்கும் அதே வயது வரும்,
இன்றைய அவர்களையும் நாளைய உங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள், எதிர்காலத்திற்காக என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு தெளிவாகிவிடும்.

ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து காட்பாதராக வாழ்ந்து விடலாம் என நினைப்பவர்கள், ரேமண்ட் நிறுவனத்தின் முன்னால் தலைவர் மகேஷ்பத்தின் வாழ்க்கை கதையை தேடி எடுத்து கொஞ்சம் படித்துப் பாருங்கள், அவர் தனது மகன் மீது நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கின் சாராம்சம் என்னவென்றால், ‘நான் வாழ்ந்த வீட்டையும், எனது காரையும், நான் வாழ்வதற்கு கொஞ்சம் பணத்தையும் எனது மகனிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என்பதாகத்தான் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

எல்லா அப்பாக்களுக்கும் இதுவே விதி என்பதாய் நான் சொல்வதற்கு வரவில்லை.
விதிவிலக்குகளும் இருக்கலாம்,
ஆனால் அப்பா பிள்ளை உறவுகளில்,
கால சக்கரம் சுழற்சியில், இப்படியான அபாயங்களுக்கும் ஆட்படலாம்,
அதனுள்ளே சிக்கி உழன்று, உழன்று வேதனைப்படக்கூடிய சூழலும் உருவாகலாம், என்பதனை சுட்டி காட்டி, எச்சரிக்கை செய்யும் நோக்கம் தானே தவிர வேறொன்றும் இல்லை நண்பர்களே.

இந்த தொடரின் இருபத்திரண்டாவது பகுதியில் நாம் சந்தித்த, அந்த இரு பெரும் பின்னலாடை நிறுவனங்களை உருவாக்கி பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, மிச்ச வாழ்க்கையை வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஒரு காட்பாதரை போல வாழ்ந்து விடலாம் என பேராசை கொண்டிருந்த அந்த மனிதர் என்னை அவரின் இல்லத்திற்கு அழைத்து, என்னிடம் வருத்தப்பட்டு சொன்ன விசயம் இதுதான்…

“தம்பி நீங்கள் என்னிடம் இன்சூரன்ஸ் பற்றி பேசியபோதெல்லாம்,
அதுவும் பென்ஷன் என்பதின் அவசியத்தை பற்றி என்னிடம் சொன்னபோதெல்லாம்,
மனதிற்குள் லேசாக சிரித்துக்கொள்வேனே தவிர,
அதை ஒரு பொருட்டாகவே நான் ஒருபோதும் எடுத்துக்கொண்டதேயில்லை.

ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பெரிதாக வற்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் எனது நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு முதலில் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்துகொடுங்கள் என்று உங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு நான் தப்பித்துக்கொண்டேனே தவிர,
எனக்கும் வாழ்க்கையில் அப்படியான ஒரு ஏற்பாடு தேவைப்படும் என்பதை ஒருபோதும் நான் நம்பியதேயில்லை.

ஏனென்றால் அப்போது நான் உருவாக்கி வைத்திருந்த ஒரு சாம்ராஜ்யத்தின் ராஜாவாக நான் இருந்தேன்.
அதிலிருந்த படைபலம் பணபலம் என்று, அத்தனையும் எனக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.

அதன் பிறகு அதனை பிள்ளைகளிடம் ஒப்படைப்பதற்காக இன்னும் பெரிதாக தயார்படுத்தினேன்.
எந்த தொய்வும் இல்லாமல் அவர்கள் அதனை வழிநடத்தி செல்லவேண்டும் என்பதற்காக அதிலிருந்த எல்லா சிக்கல்களையும் சரிசெய்து,
முழுமையாக அதனை அவர்களிடம் ஒப்படைத்து விட்டுத்தான் திருப்தியானேன்.

நான் நிறுவனத்திலிருந்து விடைபெரும் கடைசி கட்டத்தில் கூட நிறுவனத்தை இன்னும் சீர்படுத்தவேண்டும்,
மேம்படுத்தவேண்டும் என்ற ஆவலில் நிர்வாகத்தினுள் நான் எடுத்துப் போட்ட பணத்தின் ஒரு பகுதியை இன்சூரன்சில் முதலீடு செய்திருந்தால், அன்று நீங்கள் சொன்னது போல இன்று மாத, மாதம் எனக்கு சில லட்சங்கள் பென்ஷனாக வந்து கொண்டிருந்திருக்கும்,
ஆனால் அதனை நான் செய்யாமல் எனக்கே நான் துரோகம் செய்து கொண்டதுப்பொல இப்போது உணர்கிறேன்.

இப்போதும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை,
இந்த கணம் நினைத்தால் கூட நிர்வாகத்தை பழையபடி எனது பொறுப்பில் சுலபமாக கொண்டு வந்துவிட முடியும்.
ஆனால் அதனை எப்படி நான் எந்தவித நெருடலும் இல்லாமல் செய்துவிட முடியும்.?

பிள்ளைகள் வளர, வளர பிள்ளைகளுடனேயே நிறுவனத்தையும் படிப்படியாக வளர்த்துக்கொண்டு வந்ததின் நோக்கமே,
பிள்ளைகள் படித்து முடித்து வெளியே வரும்போது, அவர்களுக்கு ஏற்றார் போல நிர்வாகத்தை தயார்படுத்தி வைத்திருந்து அவர்களிடம் நல்லபடியாக ஒப்படைத்துவிட்டு, அவர்கள் ஆளும் திறமையை வெளியிலிருந்து பார்த்து பூரித்து போக வேண்டும் என்பதற்காகத் தானே.!

அதை சிறப்பாகவும் செய்து முடித்து விட்டேன்.
இனி அதற்குள் நான் அதிகாரம் செய்ய நினைப்பது பிள்ளைகளுக்கு சங்கடத்தை தரக்கூடும்.
தவிர என்றைக்காவது ஒரு நாள் இந்த நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமாக கூடியது தானே,
அதற்காகத்தானே அத்தனை பாடுபட்டேன்,
அதை நானே நல்லபடியாக அவர்களுக்கு கொடுப்பதுதானே முறை,
இனிபோய் அதில் எப்படி நான் தலையிட முடியும்.?

அட நீ என்னமோ பண்ணுப்பா
நான் வாக்கு கொடுத்துட்டேன், நீ போயி
ட்ராவல் ஏஜென்சியில பணத்தை கட்டிரு என்று அடுத்த வார்த்தை கொஞ்சம் நான் அதட்டி சொல்லியிருந்தால்,
ஓடிப்போயி பணத்தை கட்டியிருப்பார்கள் தான்.

அதற்கு பிறகு கூட என் மனைவி பிள்ளைகளை கூப்பிட்டு கொஞ்சம் கடிந்துகொண்டவுடன் உடனே பெரியவன் செக் போட்டு ட்ராவல் ஏஜென்சிக்கு அனுப்பிவிட்டான்,
அது முடிந்துவிட்டது.

ஆனால் அப்போது என்னுடைய அதிர்ச்சி என்ன தெரியுமா?
இனி என்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அழுத்தி சொல்லி, கடிந்து சொல்லி, மனைவியை விட்டு கொஞ்சம் பக்குவமாக எடுத்து சொல்லி, கெஞ்சி சொல்லி, நேரம் காலம் பார்த்து சொல்லித்தான் இனி என்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது வருமோ என்று தான் கலங்கி போய்விட்டேன்.

உங்களை வீட்டில் கூப்பிட்டு வைத்து பேசுவதற்கு காரணமே, நீங்கள் என்னை சந்தித்த ஒவ்வொரு தடவையும் இதை எனக்கு புரிய வைக்கத்தான் பெரிய முயற்சி செய்தீர்கள்,
ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே நான் எடுத்துக்கொண்டதில்லை.

பென்ஷன்!
அப்படி இப்படி என்று உங்கள் பாஷையில இல்லையென்றாலும்,
இப்போது எனக்கு தெளிவாக புரிகின்ற ஒரு விசயம் என்னவென்றால்,
ஏதாவது ஒரு விதத்திலாவது தொடர்ந்து அவ்வப்போது பணம் வருகின்ற மாதிரியான ஒரு வருமான ஏற்பாட்டை செய்து வைத்துவிட்டுத்தான் நான் நிர்வாகத்தை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்
அதில் தான் நான் தவறிவிட்டேன்’.
-என்று தனது ஆதங்கம் மொத்தத்தையும் சொல்லி தீர்த்தார் அவர்.
ஆம்!
அவருக்கு புரிந்துவிட்டது,
ஆனால் கொஞ்சம் தாமதமாக புரிந்திருக்கிறது,
அதற்கான பலனை இனி அவர் அறுவடை செய்துதான் தீரவேண்டும்.

வரத்தையும் கொடுத்துவிட்டு உயிர் பிழைக்க ஓடி ஒழிந்த சிவபெருமானின் கதை உலகறிந்தது.

உலகை காக்கும் ஈசனுக்கே அப்படியொரு விதி என்றால்,
சாமானிய மனிதர்கள் நம் கதி?

வரமோ, வாழ்க்கையோ,
உங்களையே நம்பி இருப்பவர்களுக்கு நீங்கள் தான் அதனை செய்துகொடுத்தாகவேண்டும், ஏனென்றால் அது உங்கள் கடமையாகிறது.

ஆனால் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்.
உங்கள் தகுதியையும், தேவையையும் முழுவதுமாக அறிந்து வைத்திருப்பவரும் நீங்கள் மட்டும் தான்.

அதனால் எல்லா காலத்திலேயும் உங்களை பாதுகாக்கும் ஒர் ஏற்பாட்டினை செய்து வைத்துக்கொள்ளாமல், தற்போது நீங்கள் இருக்கும் நிலையிலேயே தொடர்வதற்கான வழிவகைகள் எதையும் செய்துவைக்காமல், கொடுக்க முடியும், அல்லது கொடுத்தாகவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்காலத்தை பற்றிய யோசனை எதுவுமின்றி கொடுத்துவிட்டால், அதற்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் தீரவேண்டும் என்பதை உணர்த்துவதுதான் சிவபெருமான், பஸ்மாசுரன் கதை.

புத்திமானே பலவான்..!

தொடரும்….

கூ, சுரேஷ்வரன்,
இன்சூரன்ஸ் ஆலோசகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here