ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி – 03

1
340

சென்ற தொடரில் என்னை மிகவும் பாதித்த ஒரு குடும்பத்தின் கதையை சொல்வதாக தொடரை முடித்திருந்தேன். இப்போது அங்கிருந்தே தொடர்கிறேன்.

நான் சொல்லபோவது சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரமாம் ஆண்டில் நடந்தது.

அப்போது கோயம்புத்தூரில் நான் வேலை செய்துகொண்டிருந்த கம்பெனியில் என்னை விட ஆரேழு வயது இளையவன் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.

துளி கூட அனுபவமில்லாத முதல் நாள் வேலையிலிருந்து அங்கிருந்த வேலைகளை அவன் கற்றுக்கொண்ட சில மாதங்கள் வரையில் அவன் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், கடுஞ்சொற்கள். ஏராளம்.
காரணம் அவன் மென்மையானவன்.
அங்கேயிருந்த கடுமையான வேலைகளுக்கு சற்றும் பொறுத்தமில்லாதவன்.
ஆனாலும் அவன் தாக்குபிடித்தான்.
மனதாலும், உடலாலும், காயங்கள் பட்டு சில வேலைகளை தெளிவாக செய்யும் அளவுக்கு படிப்படியாக கற்றுக்கொண்டான்.

ஒருநாள் அவன் கதையை கேட்க நேர்ந்தது.
அவன் பெயர் விஜய்.
கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவன்.

விஜயின் தந்தை ஒரு பிரபலமான கார் விற்பனை செய்யும் ஷோருமில் மேனேஜர்.
மாதம் இருபத்தைந்து ஆயிரம் சம்பளம்.
“RS புரத்தில்” ஐந்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு பங்களாவில் சந்தோசமாக வசித்துவந்தார்கள்.
விஜய் ஒரு பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டும்,
தங்கை ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பும்,
தாய் வீட்டை கவனித்துகொள்ளவும்
வாழ்க்கை சாந்தோசமாக போய்கொண்டிருந்தது.

சந்தோசமாக போய்கொண்டிருந்தது என்று சொல்வதைவிட
உலகத்தின் மொத்த சந்தோசமும் அந்த வீட்டில் தான் இருந்தது என்றே சொல்லாம்.

விஜய்கு அப்பாவை பற்றி சொல்லவேண்டும் என்றால்..
அவர்களிடையே அப்பா, பிள்ளை உறவையெல்லாம் தாண்டி ஒரு நல்ல நண்பனை போலதான்
அவனுக்கு அந்த அப்பா இருந்தார்.

குடும்பத்துடனோ..
அல்லது அப்பா, பிள்ளை இருவர் மட்டுமோ எங்காவது வெளியில் சென்றார்கள் என்றால் அப்பா அவன் தோளை அணைத்து பிடித்து கொண்டேதான் நடப்பார்.
வீட்டிற்கு வந்து சேரும்வரையில் அப்பாவின் கை அவன் தோளை பிரியாது.
அந்த ஸ்பரிசம் அப்பாவின் அளவில்லாத அன்பை மட்டுமல்ல..
வாழ்க்கையில் மிகப் பெரியதொரு நம்பிக்கையையும் ஒவ்வொரு கனமும் அவனுக்கு தந்துகொண்டே இருந்தது.

அவருக்கு கம்பெனி கொடுத்த கார் இருக்க. பிள்ளைக்கு பல்சர் பைக் வாங்கி கொடுத்திருந்தார்.
தினமும் அவர் தன் காரை துடைக்கின்றாரோ இல்லையோ..
பிள்ளையின் பைக்கை பாலீஸ் போட்டு துடைத்து விடுவார்.
பெட்ரோல் பங்குக்கு போய் பெட்ரோல் நிரப்பும் வேலையை கூட அவர் பிள்ளைக்கு கொடுத்ததில்லை.

தினமும் பெட்ரோல் அளவை பார்த்து
தீர, தீர அவரே பெட்ரோல் நிரப்பி கொண்டுவந்து நிறுத்திவிடுவார்.

செலவுக்கு பணம் வேண்டுமென்று ஒருபோதும் அவன் அப்பாவிடம் கேட்டதேயில்லை.
அவன் அன்று போடவேண்டிய சட்டை பையில் அவன் தேவைக்கு அதிகமாகவே பணம் வைக்கப்பட்டிருக்கும்.

விடுமுறை நாட்களில் கட்டாயம் பக்கத்திலிருக்கும் ஏதாவது சுற்றுலா தளத்தில் தான் அவர்கள் சந்தோசமாக பொழுதை கழிப்பார்கள்.
இரவில் தான் வீடு திரும்புவார்கள்.

மனைவி, மகன், மகள், என்று.. தன் உலகத்தையே அவர்களோடு சுருக்கிக்கொண்டு ஒரு சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் அந்த குடும்பத்தின் தலைவர்.

அவர்கள் சந்தோசத்தை விவரிப்பதென்றால்..
அதற்கு பொருத்தமான வார்த்தைகளும் கிடையாது.
அத்தனையையும் விவரித்துவிட பக்கங்களும் பத்தாது.

அந்த தந்தை அந்த குடும்பத்தினருக்கு கடவுள் கொடுத்த ஒரு வரமாகவே இருந்தார்.

வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் ?
ஆம். அந்த கார் விபத்து அந்த குடும்பத்தின் வரத்தை பிடுங்கிகொண்டு சாபத்தை கொடுத்துவிட்டு போனது.

மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கிய அந்த தந்தை அத்தனை பணத்தையும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும். குடும்பத்தின் சந்தோசத்திற்காக மட்டுமே செலவு செய்துவிட்டிருந்தார்.

வங்கியிலிருந்த சில ஆயிரம் பணத்தை தவிர அவரது பெயரில் வேறெந்த சேமிப்போ, இன்சூரன்சோ கிடையாது.

உலகத்தையே ஒரு கூட்டுக்குள் சுருக்கிகொண்டு
உலகத்தின் அத்தனை சந்தோசங்களும் எங்கள் வாழ்க்கைக்கு ஈடில்லை என பெருமையோடும், நம்பிக்கையோடும் வாழ்ந்துகொண்டிருந்த அந்த அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கை அதன்பின் தலைகீழாக மாறிபோனது தான் கொடுமை.

நரகம்,
நரகம் என்று தமிழில் ஒரு வார்தை சொல்லுவார்கள்.
அது எப்படியிருக்கும் என்று யாராவது பார்த்திருக்கிறீர்களா?
யாராவது பார்க்கவேண்டும் என விரும்புகிறீர்களா?

ஒரு வீட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தன் தலையில் சுமந்துகொண்டு ஒரு மனிதர் வாழ்ந்துகொண்டிருந்திருப்பார்.
எதிர்பாராதொரு விபத்தினாலோ, அல்லது உடல் சம்பந்தமான பிரச்சனையினாலோ திடீரென்று ஒருநாள் இறந்துபோயிருப்பார்.
ஒரு மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர் குடும்பத்தினர் இருக்கும் வீட்டை போய் பாருங்கள்.
நரகம் அங்கே இருக்கும்.

விஜய் குடும்பத்தினரும் அந்த நரகத்திற்குள்தான் தள்ளப்பட்டார்கள்.
வங்கியிலிருந்த சில ஆயிரங்கள் அப்பாவின் இறுதி சடங்கு செலவு உட்பட சில செலவுகளிலேயே கரைந்துபோக
ஆடம்பர வீட்டை துறந்து
பத்து வீடுகளை கொண்ட ஒரு காம்பவுண்டுக்குள் குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

ஆளுக்கு ஒரு பாத்ரூம் என்ற வசதியை விட்டு மூன்று வீட்டுக்கு ஒரு பாத்ரூம் என்ற நிலையில் கையில் வாளியோடும், மனதில் வலியோடும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.
கூனி குறுகி போய் அந்த விதிக்கு வாழ பழகினார்கள்.

அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அம்மா வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்.
பைக்கை விற்று சில மாதங்கள் சமாளித்தாலும் விஜய்யும் படிப்பை உதறிவிட்டு வேலைக்கு போனால்தான் தங்கையை மட்டுமாவது படிக்கவைத்து சாப்பாட்டிற்கு சிரமமில்லாமல் வாழ்கையை ஓட்டமுடியும் என்ற நிலமை அவனை ஒரு கம்பெனியில் எடுபுடியாக கொண்டுவந்து சேர்த்தது.

இப்போது சொல்லுங்கள் விஜயின் தந்தை தன்னை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த குடும்பத்தினர் சந்தோசத்திற்காக வாழ்ந்தாரா?
அல்லது தனது சந்தோசத்திற்காக தன்னை மட்டுமே நம்பிகொண்டிருந்த தன் அன்பான குடும்பத்தை பயன்படுத்திகொண்டிருந்தாரா?

இரண்டாயிரம் ஆண்டு காலகட்டத்தில் இருபத்தைந்து ஆயிரம் சம்பளம் என்பது மிகப்பெரிய தொகை.
அத்தனையும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு என்றும்…
அவர்களின் சந்தோசத்திற்காக என்றும் செலவு செய்து தீர்த்தது.
அவரை மட்டுமே நம்பியிருந்த அந்த அப்பாவி ஜீவன்களுக்கு அவர் செய்துவிட்டு போன துரோகம்.

மாதம் ஐந்தாயிரம் என்ற அளவில் அவர் தனது பெயரில் ஒரு இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்திருப்பார் என்றால்..
குறைந்த பட்சம் பத்து லட்சம் ரூபாய்க்கு அவருக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைத்திருக்கும்.
அவர் விபத்தில் இறந்ததினால் இரண்டு மடங்கு இன்சூரன்ஸ் தொகையான இருபது லட்சமும்..
அதனுடன் போனஸ் தொகையும் சேர்த்து அவரை நம்பியிருந்தவர்களுக்கு கிடைத்திருக்கும்.

அந்த தொகையை அப்படியே எல் ஐ சி யிலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தால் அன்றைய கால வட்டி விகிதத்தின்படி (12.68℅)
இருபதாயிரத்துக்கு மேல் அந்த குடும்ப தலைவியின் வாழ்நாள் முழுவதும் உத்திரவாதமான பென்ஷனாகவே மாத மாதம் தவறாமல் கிடைத்து கொண்டிருந்திருக்கும்.
அந்த தொகை நிச்சயமாக அந்த குடும்பம் அதே வாழ்க்கையை தொடர்வதற்கு போதுமானதாகவே இருந்திருக்கும்.

ஆனால் ஏன் அப்படி அமையாமல் போனது?

இந்த இடத்தில் நான் எப்போதும் சொல்வதையும்,
இந்த தொடரின் ஆரம்பத்தில் நான் குறிபிட்டு சொன்னதையும் மீண்டும் ஒரு முறை அழுத்தமாகவே பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

ஒரு மனிதருக்கு இன்சூரன்ஸ் தேவையே இல்லை.
அவர் ஈட்ட கூடிய வருமானத்திற்கு தான் இன்சூரன்ஸ் தேவை.
ஏனென்றால் குடும்பத்தில் ஒருவர் இல்லாமல் போய்விட்டால்
அவரை நினைத்து கவலைபட்டு தினமும் அழுது புலம்பியாவது நாட்களை நகர்த்தி விடலாம்.
ஆனால் வருமானம் நின்று போய் அந்த குடும்பத்திலிருந்து இன்னொருவர் வருமானம் ஈட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தால் இப்போது அந்த குடும்பத்தின் முன் இரண்டு விதமான வாய்ப்புகள் தான் இருக்கும்.
ஒன்று பசியால் வாடி துடித்து இறக்க வேண்டும்.
அல்லது அதற்கு முன் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு வகையில் வேதனையில், வலியில் துடித்து இறந்து போகவேண்டும்.

அந்த பிள்ளைக்கு ஒரு ஐந்து வருட காலம் அவகாசம் கிடைத்திருந்தால் கூட போதும்.
தனக்கு கிடைக்கும் கல்வியின் மூலம் ஒரு தகுதியை பெற்றுகொண்டு தலையெடுத்து வந்து அந்த குடும்பத்தை தாங்கி பிடித்திருப்பான்.

ஆனால் அந்த ஒரு அவகாசம் கூட அவனுக்கு கொடுக்கப்படாமல் அப்பாவை இழந்த ரணம் ஆறுவதற்குள் ஒரு எடுபுடி வேலைகாரனாக போகவேண்டுமென அவன் வாழ்க்கையையின் விதியை மாற்றி எழுதியது யார்?

ஏன் இப்படியொரு நிலமையை தன்னையே உலகமென நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் தன் அன்புகுறியவர்களுக்கு ஏற்படுத்திவிட்டு போகிறார்கள்?
காரணம் தான் என்ன?
காத்திருங்கள்.
அடுத்த தொடரில் காரணங்களை ஆராய்ந்து பார்ப்போம். தொடரும் …

-கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

9787323994

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here