ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? -பகுதி – 20

0
76

சொந்தமாக
கிளிகள் வளர்பது சுகமான ஆனந்தம்!
உரிமையாக கொண்டாடலாம், உயிரையே அதன் மீது வைத்து வாழலாம்!

குளிக்கவைத்து,
அலங்கரித்து,
உச்சி முகர்ந்து,
கெஞ்சி, கெஞ்சி
பால், பழம், ஊட்டி விட்டு,
அடம்பிடித்தால்
கோமாளி வேஷம் போட்டு,
குரங்கு வித்தை காட்டி,
மடியில் வைத்து கொஞ்சி,
ஊர் பார்க்க ஊர்வலம் போய்,
தலை தடவி உறங்க வைத்து,
உறங்கும் அழகில் மனதை பறிகொடுத்து,
பேசும் அழகில் கிறங்கி,
விளையாடும் அழகில்
பரவசம் கொண்டு,
இது என் கிளி,
இது என் கிளி, என்று.
ஊருக்கு உரக்க சொல்லி..

கிளிகள் வளர்பது
பரமானந்தமான விசயம் தான்!

கிளி வளர்ப்பவன் அந்த கிளிகளுக்கே அடிமையாகிவிடுகிறான்.
ஆனால் கிளிகள் ஒருபோதும் அடிமையாவதில்லை!
அவை சுதந்திரம் தேடும்.

இதயத்தில் பூட்டிவைத்து,
ஒவ்வொரு கனமும்
பார்த்து ரசித்து,
கொஞ்சி, விளையாடி,
காதல் கொண்டு,
உயிர்தானோ இது! – என
நினைத்து பாதுகாத்த கிளியின் கூண்டை திறந்து விடும் ஒரு நாள் வரும்?

வளர்தவனுக்கு வலிக்கும்.
வளர்த்தேனே,
வளர்த்தேனே, என்று
வளர்த்த கதையை சொல்லி சொல்லி மனசு புலம்பும்.

ஆனால்
சிறகிழந்த நாட்களை
எந்த கிளியும் ஞாபகங்களுக்குள் பாதுகாப்பதில்லை!

அதெல்லாம்…
அதற்கு தானும் ஒரு கிளி வளர்த்து தவிக்க,
கற்றுக்கொண்ட பாடமும், பயிற்சியும் மட்டும் தான்!

பொதுவாக எல்லா காலத்திலும்
அப்பா கிளிகள் தான் பாவம்!
அது தன் பிள்ளை கிளிகளை நேசிப்பதை போல,
பொத்தி, பொத்தி
பாதுகாப்பதை போல,
தன்னை பொத்தி, பொத்தி
பாதுகாத்து வளர்த்த கிளிகளை,
நேசிக்கவும் முடிவதில்லை,
பாதுகாக்கவும் முடிவதில்லை!

வாங்கிய இடத்தில்
கடனை வைத்து விட்டு,
திருப்பி பெற்றுவிடவே முடியாத இடத்தில்
அன்பை அள்ளி, அள்ளி கொடுத்துவிட்டு தவிப்பது தான்
அப்பாக்களின் மரபு!

வளர்த்த கதையை நினைத்து, நினைத்து வாழ்ந்து முடிப்பதுதான்
அப்பாக்களின் சாபம்!

இந்த வலியை நீங்கள் வளர்க்கும் உங்கள் செல்ல கிளியும் ஒரு நாள் உங்களுக்கு தரலாம்?

இது தண்டனை அல்ல
இதுவே தர்மம்!

காரணம்!
இதுகாலச்சக்கரம்.
இதை கடவுளால் கூட
மாற்றி சுழலவைத்திட முடியாது.

‘என்ன? இன்சூரன்ஸ் பற்றிய கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் கவிதையை போல,
ஏதோ ஒன்று இடையில் வருகிறதே என்று குழப்பம் அடை கிறீர்களா?
எந்த குழப்பம் வேண்டாம்.
மேலே நீங்கள் படித்ததுதான்,
நம் வாழ்க்கையின் சாராம்சம்.

இது தான் வாழ்க்கையின் சாராம்சம் என்றால்…
இதை பற்றி நம் தர்மத்திலோ,
அல்லது நம் வேத நூல்களிலோ இது சொல்லப்பட்டிருக்கிறதா? என்றால், இல்லவே இல்லை.
இந்த சாராம்சம் நாமே விரும்பி வகுத்துகொண்டது.

இது!
வாழ்க்கையை நம் குழந்தைகளுக்கு,
நாம் எப்படி சொல்லிக்கொடுக்கிறோம் என்பதின் சுருக்கம்,
இந்த தொடரில் அடுத்து நான் எழுதப்போகும் இன்சூரன்சின் மூலம்.

இன்சூரன்ஸ் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரை தொடக்கம் முதல் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெளிவாக ஒரு விசயம் புரிந்திருக்கும்.
இந்தக் கட்டுரைத் தொடரில் நான் மூன்று விதமான இன்சூரன் பற்றி தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1)வருமான காப்பீடு,

2)குழந்தைகள் கல்விக்கான காப்பீடு,

3)ஓய்வுகாலத்தில் தேவைப்படும் பென்ஷன் காப்பீடு,

ஆம்! இந்த மூன்றின் அவசியத்தைப் பற்றி தான் இந்த கட்டுரை நெடுக நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்,
அதனையே எனது பரிந்துரையாகவும் செய்கிறேன்.

அன்றாட செலவுகளிலிருந்து அடுத்து உங்கள் வீட்டில் வரப்போகும் அத்தனை செலவுகளையும், உங்கள் வருமானத்தை கொண்டு தான் நீங்கள் செய்து முடிக்கப் போகிறீர்கள் என்றால், அத்தனைக்கும் உங்கள் வருமானம் மட்டும் தான் ஆதாரம் என்றால்,
உங்கள் வருமானத்தை இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவருவதின் அவசியத்தைப் பற்றி வருமான காப்பீட்டில் எழுதியிருந்தேன்.

கல்வியின் மூலமாகத்தான் உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம் கட்டமைக்கப்படப் போகிறது என்பதை நீங்கள் நம்பினால், உங்கள் குழந்தைக்கான உயர்கல்வி செலவுகளை எல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவருவதின் அவசியத்தைப் பற்றி கல்விக்கான காப்பீட்டில் எழுதியிருந்தேன்

அதைப்போலத்தான் ஓய்வு காலத்தில் தேவைப்படும் பென்ஷன் பாலிஸியும்.

“ஏன் ஒரு மனிதனுக்கு பென்ஷன் என்பது அத்தனை கட்டாயம் என்று சொல்கிறீர்கள்”?
என்ற கேள்வி இருந்தால்,
இதன் கீழே சொல்லப்பட்டிருப்பதை அதற்கான விடையாக எண்ணிக்கொண்டு வாசியுங்கள்.

‘இந்த உலகம் இயற்கையின் சிருஷ்டி என்றாலும் கூட,
இந்த உலகத்தின் உள்கட்டமைப்புகள் அத்தனையும் பணத்தின் மூலமாகதான் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது என்கின்ற உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டால்’,

‘நீங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது, என்கின்ற உண்மையை நீங்கள் ஒப்புக் கொண்டால்’,

‘அந்தப் பொருள்களின் விலைகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் மாற்றி அமைக்கப்படுகிறது என்கின்ற உண்மையையும் நீங்கள் ஒப்புக்கொண்டால்’,

‘அப்படியான பொருள்களையெல்லாம் உங்கள் உழைப்பின் மூலமாக தான், இதுவரை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள், என்கின்ற உண்மையையும் நீங்கள் ஒப்புக்கொண்டால்’,

‘உங்கள் உடல் உழைக்கும் திறன் அற்றுப்போய் ஓய்வு கேட்கும் ஒரு நாள் வருமே,
அப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்’?

“நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு மனிதனுக்கு வருமானம் நின்று போன பிறகு பென்ஷன் இல்லையென்றால் உலகில் உயிர் வாழவே முடியாதுன்னு சொல்ல வருகிறீர்களா?
அப்படியென்றால்
இங்கே அறுபது வயது தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேரும் பென்ஷன் பெற்றுக்கொண்டு, அதை வைத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்குவதே பிற்காலத்தில் நம்மை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தானே!
என்ற கருத்தை நீங்கள் வலுவாக முன்னிருத்தினால்,
நான் சொல்கிறேன் மீண்டும் ஒரு முறை “சொந்தமாக கிளி வளர்ப்பது” என்ற அந்த கவிதையை படித்துவிட்டு வாருங்கள்
தொடர்ந்து பேசலாம்.

‘சொந்தமாக கிளிகள் வள்ர்ப்பது சுகமான ஆனந்தம்’
இந்த கவிதையின் உட்பொருள் என்னவென்றால்,
‘நாம் பிள்ளைகளை வளர்க்கும் பாடத்தை மட்டும்தான் கற்றுக்கொண்டோம்,
அதையே நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்தோம்,
அம்மா, அப்பாவை வளர்க்கும் பாடத்தை நாமும் கற்றுக்கொள்ளவில்லை,
அதனால், அதை நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியவில்லை.

இப்போது இங்கே என்ன பிரச்சினை என்றால்..
நாம் கற்றுக்கொடுக்காமலே, நம் பிள்ளைகள் அந்த பாடத்தை தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்ற பேராசை கொள்வதுதான்.

இங்கே கற்றுக்கொடுப்பது என்பது வாழ்ந்து காட்டுவதான் தவிர வேறொன்றும் இல்லை.

நமது தேசத்தில் 42, சதவீத மக்கள் தங்களது வயதான காலத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் என்று வயதானவர்கள் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட ஒரு சர்வே சொல்கிறது,
எதனால் இப்படி நடக்கிறது?

ஆம் நண்பர்களே! உங்கள் உழைப்பின் பெரும்பகுதியை குழந்தைகளின் வாழ்க்கையை கட்டமைப்பதற்காகவே செலவிடுகிறீர்கள்.
ஆனால்…
அது முதலீடு அல்ல,
உங்கள் கட்டாய கடமைகளில் ஒன்று மட்டுமே!

உங்கள் கடமைகள் எல்லாம்
முடிந்த பின்னர் தான்
உங்களுக்கான வாழ்க்கையே தொடங்குகிறது.
அதுவும் உங்களால்
அழகானதாகவும்,
கவுரவமானதாகவும்,
கட்டமைக்கப்பட்டிருந்தால்
முதுமை என்பது ஒரு வரமே!

காத்திருங்கள் சந்திக்கலாம் சில மனிதர்களை,
வரும் வாரங்களில்

ஒருவேளை அவர்கள் உங்களுக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கப்போகும் ஆசானாக கூட இருக்கலாம்.!

 – கூ, சுரேஷ்வரன்
 இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here