ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி -19.

0
202

நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு வேளையில் எனது அலுவலகத்திற்கு ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை வந்தாள். ஓரிரு நாட்கள் போட்டு கசங்கிய அழுக்கு கவுனுடனும்,
கலைந்த கேசத்துடனும் இருந்தாலும் கூட,
அந்த நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாத, ஏதோ பக்கத்து வீட்டு குழந்தையை போல, நிராகரிக்கவே முடியாத
ஒரு குட்டி தேவதையை போல அத்தனை அழகா இருந்தாள்.

எனது அலுவலகத்தை நிர்வகிக்கும் பெண்ணை பார்த்து “காசு எடுத்துக் கொடுக்கா”
என்று உரிமையான தோரணையில் கேட்டாள்.
‘சரி இவள் அவருக்கு தெரிந்த பெண்ணாக இருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டேன்.

அவர் காசு எடுப்பதற்குள் மேசை மீதிருந்த அலுவலக தொலைபேசியை எடுத்து கடகடவென்று சில எண்களை அழுத்திவிட்டு, சில நொடிகள் காத்திருப்பிற்குப் பிறகு அவள் தந்தையிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.

எனக்கு இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வேகமாக ஒரு குழந்தையால் தொலைபேசி எண்களை அழுத்தி இணைப்பு பெற்றுவிட முடியுமா என்று!

எனது அலுவலக நிர்வாக பெண் “போன வை” என்று அதட்டியபோது
“அக்கா! அப்பா போன் பண்ண சொன்னாருக்கா, என்ன விசயம்னு மட்டும் கேட்டுக்குறேன்” என்று கெஞ்சும் தொனியில் சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தாள்.
சிறிது நேரம் அப்பாவிடம் பேசிவிட்டு, போனை அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி சிறிது நேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
அதன்பிறகு போனை மாமாவிடம் கொடுக்கச் சொல்லி மாமாவிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாள்.
எனது அலுவலக நிர்வாக பெண் “போனை வை” என்று அதட்டிய போதெல்லாம் “அக்கா அக்கா ப்ளீஸ்க்கா” என்று கெஞ்சினாள்.
போனை பிடுங்கிவைக்க முயற்சித்தபோதெல்லாம் கையை தட்டி, தட்டிவிட்டாள். அது எனக்கென்னமோ ஒரு செல்ல விளையாட்டாக தோன்றியது.

அவரிடம் “யார் இந்த குழந்தை” என்று கேட்டபோது “தெரியலைங்க சார் ஒரு பாட்டியோட அப்பப்ப இந்தப்பக்கம் கடைகள்ல காசு வாங்கிட்டுப் போக வரும்” என்றபோது பகிரென்று இருந்தது எனக்கு.
‘இந்த குட்டிதேவதை யாசகம் பெறுபவளா? ஈஸ்வரா இவளுக்கு ஏன் இத்தனை பெரிய சாபம்?’
என்று மனசு பதைத்தது.

“அம்மா அப்பான்னு பேசிக்கிட்டு இருக்காளே, அவங்க இருந்தும் இவளுக்கு ஏன் இந்த நிலைமை?” என்று கேட்டபோது, “அப்படி யாரும் இல்லைங்க சார், பாட்டி மட்டும்தான்” என்றார்.
“அப்போ போன்ல யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கா?” என்ற போது ..
“அம்மா அப்பாகிட்ட பேசுறதா நினைச்சுக்கிட்டு பேசுதுங்க சார்.
எப்ப வந்தாலும் இப்படித்தான் சார் பண்ணுது” என்றார்.

போனில் பொய்யாகவா பேசிக்கொண்டிருக்கிறாள்! கிடையவே கிடையாது.
எத்தனை தத்துரூபமாக பேசிக்கொண்டிருக்கிறாள்?
எத்தனை யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்? மறுமுனையின் கேள்விகளுக்கு நிதானித்து பதில் சொல்லி, மறுமுனையின் பேச்சுக்களுக்கு முக ஆர்வம் காட்டி, அன்பில் கொஞ்சி, அன்பில் கெஞ்சி, எத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருக்கிறாள்!
சத்தியமாக மறுமுனையில் பதில் இல்லாத ஒரு போனில் இத்தனை யதார்த்தமாக எவராலும் பேசவே முடியாது.
ஆம்! அந்த குழந்தை பாட்டியுடன் இருந்தாலும் அம்மா, அப்பாவுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அதற்குள்.. “மறுபடியும் போன் எடுத்துப் பேச ஆரம்பிச்சிட்டியா” என்றபடியே அவள் பாட்டியும் வந்துவிட “பாட்டி நான் மாமாகிட்ட பேசிகிட்டு இருக்கேன், நீ சத்தம் போடாதே” என்று பாட்டியை அதட்டிவிட்டு பேசிகொண்டிருந்தவளை, “போதும் போதும் அப்புறம் பேசிக்கலாம்” என்று படாதபாடுபட்டு போனை பிடுங்கி வைத்தார்கள்.
“போங்க நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான் பண்றீங்க” என்று கடுமையான கோபத்தோடு வெளியேறினாள். அந்த குட்டிப்பெண்
“போகாதடி நானும் வந்துற்றேன்” என்றபடியே அந்தப் பாட்டி எனது அலுவலக நிர்வாக பெண்ணை பார்த்த போது, அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்து போல, “காசு பாப்பாகிட்ட கொடுத்துட்டேன் பாட்டி” என்றார்.
“சரிம்மா நான் வரேன்” என்றபடி அவரும் நகர்ந்துவிட, அந்த சூழ்நிலை மட்டும் நகர மறுத்தது.

யாசகம் கேட்பவர்கள் யாராவது வந்தால் சிறிது நேர கவனச் சிதறலுக்கு பிறகு, மீண்டும் திரும்பிவிடும் இயல்பான அலுவலக சூழ்நிலைக்கு திரும்ப முடியவில்லை.
ஒரு கனத்த சூழ்நிலை தான் அங்கே நிலவியது.
அதனை கலைப்பது போல அந்தப் பாட்டி மீண்டும் வந்தார் “எம்மா அவ காசு எதுவும் வாங்கலைன்னு சொல்றா” என்றபடியே..
“பாப்பாகிட்ட கொடுத்திட்டேன் பாட்டி” என்று எனது அலுவலக நிர்வாக பெண் சொல்லி முடிப்பதற்குள்,
“பொய்யி பொய்யி இந்த அக்கா காசு கொடுக்கவே இல்லை” என்றபடி மறுபடியும் உள்ளே ஓடி வந்து இடுப்பில் கை வைத்தபடி முறைத்துக்கொண்டு நின்றாள் அந்த குட்டிப்பெண்.

பாவம் அவள்!
இந்த மாதிரி அலுவலகங்கள், மற்றும் கடைகளில் யாசகம் பெற வருபவர்கள் நிற்கக்கூடிய எல்லை என்று ஒன்று இருக்கும்,
அதனை கூட அறிந்து வைத்திருக்காத அத்தனை அப்பாவி பெண்ணாக இருந்தாள் அவள்.
தினமும் நன்கு பழகிய பக்கத்து வீட்டுக்குள் உரிமையுடன் ஓடிவரும் ஒரு பக்கத்து வீட்டு குழந்தையை போல தான், அவள் செய்கை இருந்தது.

“கையை பாருங்க காசு எதுவும் இல்லை” என்று அந்த பிஞ்சு விரல்களை விரித்து காட்டினாள். “வாய்க்குள்ள கூட செக் பண்ணுங்க, காசு இருக்கான்னு” என்று வாயை விரல்களால் கிழித்துவிடுவதை போல செய்து காட்டினாள்.
மண்ணைத் தின்றுவிட்டு யசோதையிடம் வாயை திறந்து காட்டி வாதாடிய குட்டி கண்ணனைப் போல அவள் செய்கை இருந்து.
“மாமா நீங்க பார்த்தீங்கல்ல, நீங்களே சொல்லுங்க இந்த அக்க காசு கொடுக்கலைன்னு”
என்று என்னையும் சாட்சிக்கு அழைத்தாள்.
“சார் நான் காசு கொடுத்தேன் நீங்களும் பார்த்தீங்களே?” என்றார் எனது அலுவலக நிர்வாக பெண்.

சரி அவள் எங்கே காசை வாங்கும் அக்கரையில் இருந்தாள்!
அவள் அம்மா, அப்பாவிடம் பேசும் ஆர்வத்தில் வாங்கிய காசை தவற விட்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
“சரி பரவாயில்லை இப்ப நான் உனக்கு காசு தரேன்” என்றபடி பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு “உன் பெயரென்ன?” என்று கேட்டேன். “அம்பிகா” என்று சொல்லிவிட்டு சற்று கோபத்துடன் தான் வெளியேறினாள். நான் கொடுத்த பத்து ரூபாய் அவளுக்கு எந்தவித சந்தோசத்தையும் கொடுத்து விடவில்லை. பேசவிடாமல் போனை பிடுங்கி வைத்துவிட்ட கோபமும், கொடுக்காமல் காசு கொடுத்து விட்டதாக சொல்லி விட்டார்களே என்பது மாதிரியான கோவமும் தான் அவள் முகத்தில் இருந்தது. “தப்பா நினைச்சுக்காதம்மா” என்றபடி அவள் பாட்டியும் அங்கிருந்து நகர்ந்து விட,
அந்த இறுக்கமான சூழ்நிலை தான் இன்னமும் நகர மறுத்தது.

கைநீட்டி காசு கேட்கும் விளிம்பு நிலை மனிதர்களை, நாம் அன்றாடம் சாதாரணமாக கடந்து போய் விடுவதைப் போல, அந்த குட்டி பெண்ணை என்னால் கடந்து போய்விட முடியவில்லை.
என் சொந்த சோகத்தை போல, அவள் எனக்கு ஒரு சோகத்தை தந்து விட்டு போனதாக தான் எனது மனசு கனத்தது.

“இந்தக் குழந்தையை பற்றி உனக்கு ஏதாவது தெரியுமாம்மா” என்று எனது அலுவலக நிர்வாக பெண்ணிடம் கேட்டேன்.

“அம்மா அப்பா இல்லைன்னு அவ பாட்டி சொல்லியிருக்காங்க சார், வேறெதுவும் தெரியல” என்றார்.

மாமான்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருந்தாளே?”

“அப்படியே யாரும் இருக்கிற மாதிரி தெரியலைங்க சார்”

“எங்க தங்கியிருக்காங்கன்னு ஏதாவது தெரியுமா” என்றேன்.

“தெரியலைங்க சார்” என்றார்.

“எப்ப வந்தாலும் இப்படித்தான் போன எடுத்துட்டு பேசுவாளா?” என்று கேட்டேன்.

“ஆமாங்க சார் எப்ப வந்தாலும் போனை எடுத்து இதே மாதிரி பேசிகிட்டே இருப்பா, போனை வாங்கி வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்” என்றார்.

“அப்போ இந்த பாட்டி மட்டும்தான் அந்த குழந்தைக்கு இருக்காங்களா?”

“எனக்கு தெரிஞ்சு பாட்டி மட்டும்தான் இருக்கான்னு நினைக்கிறேன் சார்” என்றார்.

“பாட்டிக்கு பிறகு?”
என்றேன்

“தெரியலைங்க சார், கஷ்டம் தான்” என்றார்.

நமது தேசத்தைப் பொறுத்தவரை குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் ஒரு வாரமாக பார்க்கப்படுகிறது. சாமானியர்கள் முதல் கனவான்கள் வரை, கோடிக்கணக்கான மக்கள் ஒரு குழந்தை வரத்திற்காக தவமாய் தவம் கிடக்கும்போது, இவள் யாரின் வரம்? இப்படி தெருவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறாள்!

முற்பிறவியில் செய்த பாவங்களுக்கெல்லாம் இப்பிறவியில் பாவ பலன்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பது நமது தேசத்தின் ஒரு நம்பிக்கை.
ஒருவேளை அது நிஜமே என்றாலும் கூட, தனக்கான உணவை தானே பிச்சை எடுத்து உண்டு, உலகில் உயிர் வாழும் அளவிற்கு இந்த ஜீவன்
அப்படி என்ன ஒரு மாபெரும் பாதகத்தை முற்ப்பிறவியில் செய்திருக்கும்.?
அப்படியென்றால் இப்படியொரு கொடுமையான பாவத்தை தண்டனையை கொடுத்து வேடிக்கை பார்க்கும் அந்த கடவுளை எந்த கடவுள் தண்டிக்கும்?

“ஒரு நொடி அவள் இடத்தில் என் குழந்தைகளை கற்பனை செய்து பார்த்தால் உடம்பு நடுங்குகிறது.
பாவம் இவள், இந்த வாழ்க்கை முழுவதையும் இப்படித்தான் வாழ்ந்து முடிக்க விதிக்கப்பட்டிருக்கிறதா?

மனசு கனத்துவிட்டது,
அலுவலக பணியில் ஈடுபடும் மனோநிலையை அந்த குட்டிப்பெண் உடைத்துவிட்டு போய்விட்டாள்.
அவளுக்கு ஏதாவது உதவ முடியுமா என்ற ஆதங்கம் தொற்றிக்கொண்டது. அலுவலகத்தை விட்டு வெளியேறி
பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
ஆனால் தெருவெல்லாம் இப்படிபட்ட குழந்தைகளை ஆங்காங்கே கண்டு, கண்டு மனசு கனத்தது தான் மிச்சம்.

இப்படியான பரிதாபத்துக்குறிய குழந்தைகள் உலகெங்கிலும் தான் வியாபித்து கிடக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் யாரால் தீர்வு தேடி கொடுத்து விடமுடியும்?
என்பதைவிட, இவர்களின் நிலைக்கெல்லாம் யார் காரணம் என்பது தான் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

நண்பர்களே!
நான் எப்போதுமே சொல்லக்கூடியது தான்.
நாம் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தை அடுத்த, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதென்றாலும், அல்லது இன்னமும் கீழ்நிலைக்கு இழுத்து செல்வதென்றாலும் அதில் உலகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பங்கும் அடங்கி இருக்கிறது.

ஆம்!
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டுமென்றால், அதற்கான உங்களின் பங்காக தனிப்பட்ட முறையில் நீங்கள் இந்த உலகிற்கு எதையும் செய்ய தேவையில்லை.
உங்கள் கடமைகளை நீங்கள் சரியாக செய்து முடித்தாலே போதும்.

தெளிவான திட்டமிடலின் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வியை ஏற்படுத்தி கொடுத்து, அதன் மூலம் அவர்களுக்கு வளமானதொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து, உங்கள் அடுத்த தலைமுறையான அவர்களை, உங்களினும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பணியினை நீங்கள் சரியாக செய்துவிட்டாலே போதும்.
ஒவ்வொருவரும் இதனை செய்து முடிக்கும்போது இந்த உலகம் தானாகவே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்ந்துவிடும்.
இதுவே பிரபஞ்ச சூத்திரம்.

நண்பர்களே!
இந்த உலகில் உங்களையே நம்பி யாராவது இருந்தார்கள் என்றால்,
நீங்கள் இல்லையென்ற நிலையில் அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்பதை ஒரு கனமாவது யோசித்துதான் பாருங்களேன்.
அதில் யாதொரு தவறும் இல்லையே?
அண்ணன், தம்பி பார்த்துக்கொள்வார்கள்,
மாமன், மச்சான் பார்த்துக்கொள்வார்கள், என்பது மாதிரியான வீண் பேச்சுக்களை விட்டொழியுங்கள்.
அவரவருக்கு அவரவர் கடமைகள் தலை மேல் இருக்கிறது.
ஒரு சாக்லேட்டாக இருந்தாலும், அது உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாங்கி கொடுப்பது போல இருக்காது.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு வாழ்க்கை அமைத்து கொடுப்பதை போல இன்னொருவரால் கொடுத்து விடவே முடியாது.

என் பிள்ளை டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும், என்று கனவு கான்கிறோம். அதையே அவர்களிடத்திலும் விதைத்து விடுகிறோம்.
ஆனால் நாம் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் அடுத்த வரும் ஐந்து வருடங்களாவது அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் கவுரவமாக வாழ்வதற்கான ஏதாவது ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறோமா? என்று,
எப்போதாவது யோசித்தாவது பார்த்திருக்கிறோமா?

நன்பர்களே!
நமக்கு நிகர் எதுவுமே இல்லை.
நம் குழந்தைகள் படித்து முடித்து வாழ்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, அவர்கள் வாழ்க்கையை அவர்களே சுய சம்பாத்தித்தில் வாழும் நிலையை எட்டும் வரையில், அவர்கள் விரல்களை பிடித்துக்கொண்டு நடக்கும் பாக்கியம் கிடைத்துவிட்டால் அது எல்லா அப்பாக்களுக்குக்கும் ஒரு வரம் தான்.

ஆனால் நாம் இல்லாவிட்டாலும், இதெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் நடக்கவேண்டுமே என்ற ரீதியில் என்றாவது யோசித்திருக்கிறோமா? என்பதும்,
அல்லது இப்படியான குழந்தைகளை பார்த்த பிறகாவது அப்படியான ஒரு ஏற்பாட்டை செய்துவைக்க முயச்சித்தோமா என்பது தான் கேள்வி.

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு செய்து கொடுக்கும் சத்தியம்! “நான் உன் வாழ்க்கையில் இல்லாமல் போனாலும் கூட, அப்பா இல்லை என்கின்ற ஒரு குறையை தவிர, உன் வாழ்க்கை எந்தவிதத்திலும் குறைந்து போய்விடாது, அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டேன்.” என்பதாக தவிர வேறென்ன இருந்துவிடமுடியும்.

நண்பர்களே!
நான் மீண்டும் சொல்கிறேன்,
ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி உங்களை பணக்காரர்கள் வரிசையில் கொண்டுபோய் சேர்த்துவிடாது,
ஆனால் உங்கள் குழந்தைகளின் கனவுகளை மீட்டெடுக்கவும்,
உங்களுக்கு ஏதாவது அசாம்பாவிதம் நேர்ந்தால் உங்களையே நம்பியிருப்பவர்கள் யாரிடமும் கையேந்தாமல் கவுரவமாக வாழ்வதற்கும், அது உதவும்.

தொடரும்….

                              – கூ, சுரேஷ்வரன்,
                              .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here