ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 18

0
173

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி – 18

ஒரு தனி மனிதன் தனது கற்பனைக்கு தகுந்தவாறு எத்தனை பெரிய திட்டங்களை வேண்டுமானாலும் வகுத்து கொண்டு செயல்படலாம். அதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம், அல்லது அதுவாக நடக்கட்டும் என்று எதையுமே செய்யாமல்கூட விட்டும் விடலாம்.
அதனால் யாருக்கும் எந்த ஒரு பெரியதொரு பாதிப்பும் வந்து விடப்போவதில்லை.

தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அழகியதொரு கிரீடத்தை தலையில் வைத்து, தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து உலகையே ஆள வேண்டும் என்ற கனவினை கூட நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
அதனால் தவறேதும் இல்லை.
ஏனென்றால் அது நடக்காமல் போனாலும் அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்போ, நஷ்டமோ ஏற்பட்டு விடபோவதில்லை.

ஆனால் உங்களை நம்பி யாராவது இருந்தால்,
உங்கள் வருமானம் தான் அவர்கள் வாழ்க்கையை கட்டமைக்கப் போகிறது என்கின்ற நிலை இருந்தால்,
தயவுசெய்து எந்தவித தயக்கமும் இல்லாமல் மாற்று வருமானம் வரும் வழியை ஏற்படுத்தி வையுங்கள். அல்லது இன்சூரன்ஸ் செய்து வைத்து விடுங்கள்.

“சரவணனுக்கு என்ன ஆயிற்று?” என்ற கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். ஆமாம்! சரவணனுக்கு அப்படி என்னதான் நேர்ந்தது?
அதனை அவன் காதல் மனைவி பானுமதியின் வாய்மொழி வாக்குமூலமாகவே கேட்டுவிடலாம்.

“அவருக்கு எங்கள் மீது ரொம்பவும் பாசம்.
வீடுதான் அவருடைய உலகம்.
இதற்கு முன்பு நாங்கள் வேறு ஒரு வசதியான வீட்டில் தான் சந்தோஷமாக வசித்து வந்தோம்.
அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து விட்டால் குழந்தைகளோடு தான் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார், குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்பதையெல்லாம் ஒருபோதும் அவர் நம்பியதே இல்லை.
குழந்தைகளை அருகருகே அமர வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே தான் தானும் சாப்பிட்டு முடிப்பார்.

வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் ஆசைப்பட்டு சாப்பிடும் எதையாவது ஒன்னு வாங்காம வரமாட்டார். சொந்தமாக ஒரு வீடு வாங்கி எங்களையெல்லாம் அந்த வீட்டில் வசதியாக வாழ வைக்க வேண்டும் என்பதும்,
குழந்தைகள் ஆசைப்பட்ட படிப்பையெல்லாம் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதும் தான், அவரோட கனவு, லட்சியம் எல்லாமுமாகவே இருந்தது.

அதற்காக கடுமையாக உழைத்தார்,
ஒரு கம்பெனியில் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். அதுபோக ஒரு வருடாந்திர பண்டும் நடத்திக்கொண்டிருந்தார்,
அதில் வந்த பணத்தையெல்லாம் வார வட்டிக்கு கொடுத்து வசூல் பண்ணிக் கொண்டிருந்தார். அதுபோக ஒரு ஐந்து லட்ச ரூபாய் சீட்டும் போட்டிருந்தார்.
எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் பத்து வருடத்திற்குள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்துவிடலாம் என்று எப்போதும் தன்னம்பிக்கையோடு பேசிக்கொண்டிருப்பார்.

எப்போதுமே அவருக்கு எங்கள் வாழ்க்கையை பற்றிய சிந்தனை மட்டும்தான்.
ஒரு போதும் அவர் தனக்கென்று யோசித்து எதையுமே செய்தது கிடையாது.
அவரைப் பொருத்தவரை நாங்கள் மூன்று பேருமே அவரின் குழந்தைகள்தான், எங்களை ஒரு நாளும் அவர் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனிக்கு அழைத்துச் சென்றதே கிடையாது,

பிள்ளைங்க ஸ்கூலுக்கு போனதுக்கு பிறகு வீட்ல ஒரு வேலையும் இல்லப்பா,
பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வற்ற வரைக்கும் நானும் உங்களோட கம்பெனியில வந்து ஏதாவது ஒரு வேலைய பார்க்கிறேன்,
என்று கேட்டபோது கூட உனக்கு எதுக்குமா அந்த கஷ்டமெல்லாம்?
பனிரெண்டு, பதினாறு மணிநேர வேலையெல்லாம் என்னோடு போகட்டும், உங்களுக்கு அந்த கொடுமையெல்லாம் வேண்டவே வேண்டாம். நீ வீட்டில் சந்தோஷமாக இருன்னு சொல்லிருவாரு,

ஆயுத பூஜைக்கு பிள்ளைங்களையாவது கூட்டிட்டுபோயி நீங்க வேலை பார்க்குற கம்பெனிய காட்டுங்களேன்னு கேட்டா…
அவங்க எதுக்குமா அப்பா வேலை பார்க்குற ஒரு கம்பெனிய வந்து பார்க்கனும்?
என்னோட பிள்ளைங்க ஒன்னு கம்பெனி ஓனரா ஆகி ஒரு கம்பெனிக்குள்ள நுழையனும்,
இல்லைன்னா கவர்மெண்ட்ல ஏதாவது அதிகாரமான பதவியில போயி உட்காரனும். அதை நான் செய்து முடிப்பேன்.
என்று ஒவ்வொருமுறையும் ஆசையோடும், நம்பிக்கையோடும் பேசுவார்.

அவர் ஆசைப்பட்டு சொல்றதெல்லாம் அப்படியே எங்கள் வாழ்வில் நடந்து விடும் என்ற பெரிய நம்பிக்கையோடு தான் நாங்களும் வாழ்ந்து வந்தோம்.
ஆனால் இப்படி ஒரு பத்துக்கு, பத்து ஒற்றை அறையில் நாங்கள் வாழ வேண்டியது நிலமை வரும் என்றோ,
என் கணவர் எந்த கம்பெனியை என்னை பார்க்க வேண்டாம் என்று சொன்னாரோ, அந்த மாதிரி ஒரு கம்பெனியிலேயே நான் வேலை செய்து எங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியது வரும் என்றோ,
கனவில் கூட ஒரு போதும் நாங்கள் நினைத்ததே இல்லை.

இத்தனைக்கும் அவர் வண்டி ஓட்டக்கூட இல்ல,
பின்னாலதான் உட்கார்ந்துட்டு வந்திருக்காரு.
அந்த ஈஸ்வரன் கோவிலுக்கு எதிர்த்தாப்புல இருக்குற பாலத்துல வேகத்தை குறைக்காம திரும்பும்போது என்ன நடந்ததுன்னே தெரியல கடவுளுக்கு தான் வெளிச்சம்,
பாலத்து சுவற்றுல மோதி அந்த பள்ளத்துக்குள்ள போயி விழுந்ததுல வண்டி ஓட்டிக்கிட்டு வந்த இவரு நண்பருக்கு கல்லுல தலை மோதினதுல நல்ல அடி அங்கயே இறந்துட்டாரு,
ஆனா இவரு உடைஞ்சுகிடந்த பாட்டில் மேல போயி விழுந்ததுல பாட்டில் நல்லா வயித்துல குத்திருச்சு,
அதுவும்போக தலையில வலது கண்ணு பக்கத்துலேயும் நல்ல அடி.
உடனே ஆம்புலன்ஸ்கு சொல்லி கொஞ்ச நேரத்திலேயே வந்து தூக்கிட்டு போயிட்டாங்க,
ஆம்புலன்ஸ்ல இருந்த நர்ஸ் புள்ள சொல்லுச்சு நினைவு தப்புற வரைக்கும் பானுமதி, பானுமமதின்னு முனங்கிகிட்டே இருந்தாராம்.

தகவல் கிடைச்சு போறதுக்குள்ள இங்க பார்க்க முடியாதுன்னு கோயம்புத்தூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிட்டாங்க.
பதறி அடிச்சு ஓடினோம் உறுதியா எதையும் சொல்ல முடியாது,
ஒரு நாள் தாண்டனம்னு சொல்லிட்டாங்க.

ஒருநாள் கூட தாண்டல,
ஒத்த வார்தை கூட பேசல,
கடைசியா என்ன நினைச்சாரோ,
எங்கிட்ட எதை சொல்ல தவிச்சாரோ எதுவுமே தெரியல,
வெள்ளை துணியில சுத்தி கொடுத்தாங்க,
புள்ளைங்க பார்த்துட்டு கத்து, கத்துன்னு கத்துச்சுங்க
எனக்கு அதுவும் முடியல,
எதுலையாவது முட்டி, மோதி செத்து அவரு கூடவே போயிரனம்னே ஆசையா இருக்கு, ஆனா புள்ளைங்க ரெண்டும் அழுது, அழுது ஜீவனே இல்லாம மடியில கிடக்குதுங்க.
அடுத்து என்ன,
அடுத்து என்னன்னு நினைக்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது,
கொஞ்ச நேரம் மட்டும் புள்ளைங்க பக்கத்துல இல்லாம இருந்திருந்தாங்கன்னா , எப்படியாவது நானும் செத்து அவரு கூடவே போயிருப்பேன்.
நான் இன்னும் உயிரோட இருக்குறதுக்கு காரணமே இந்த புள்ளைங்க ரெண்டும்தான்.

எப்பவுமே அவரு பாக்கெட்டுல ஒரு டைரி இருக்கும்.
அதுல தான் எல்லா கணக்கையும் எழுதி வச்சிருப்பாரு,
யாரு யாருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துருக்காரு?
எவ்வளவு கொடுத்துருக்காரு?
எவ்வளவு வசூல் ஆயிருக்கு? இப்படி எல்லா கணக்கும் அந்த நோட்டுல தான் இருக்கும்.

இவரு கீழ விழுந்ததுல அந்த நோட்டு எங்க போச்சுன்னே தெரியல,
தேடிப்பார்த்தோம் கண்டுபிடிக்கவும் முடியல,
யாரு, யாருக்கெல்லாம் பணம் கொடுத்திருந்தாரு, எந்த விபரமும் தெரியாம போச்சு.
ஆனா பண்டுக்கு பணம் கட்டினவங்களுக்கெல்லாம் அட்டையில வார, வாரம் வரவு வச்சு கையெழுத்து போட்டு கொடுத்திருந்ததுனால அதை வச்சு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

அத்தனை பணத்தையும் அதுக்குள்ள இருக்குற ஆளுகளுக்குதான் வட்டிக்கு கொடுத்திருந்தாரு,
ஆனா அவங்க யாரு என்னன்னே தெரியாம போயிருச்சு,
ஆனா பண்டுக்கு கட்டுன சீட்ட வச்சிக்கிட்டு மட்டும் எல்லாரும் மொத்தமா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, என்ன பண்றதுன்னே தெரியல,
இருந்த நகையெல்லாம் வித்து கொஞ்சம் பேருக்கு கொடுத்து முடிச்சேன்.
மிச்சத்திற்கு அவரு கட்டிக்கிட்டு வந்த அஞ்சு லட்ச ரூபா சீட்ட பாதியிலேயே கெஞ்சி கூத்தாடி வேற ஒருத்தங்களுக்கு மாத்தி விட்டு,
அப்பவும் கொஞ்சம் பிடிச்சதுபோக கிடைச்சதை வச்சு கொடுத்து முடிச்சேன்.
அப்பவும் பத்தாததற்கு வீட்ல இருந்த டீவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின்னு நல்லா இருந்த பொருள்களையெல்லாம் ஒவ்வொருத்தருக்கு கொடுத்து சரிகட்டினேன்,
என்ன பன்றது அவரு மானத்தை காப்பாத்தனுமே?
கடைசியில துணியும், பாத்திர பண்டமும்தான் மிச்சமாச்சு, எல்லாத்துத்துக்கும் மேல எனக்குள்ள உயிரா ஓடிக்கிட்டு இருக்கிற என் ரெண்டு புள்ளைங்க அவ்வளவுதான்,

சின்ன வயசுலேயே எல்லா சந்தோசத்தையும் அனுபவிச்சு, சின்ன வயசுலேயே எல்லா சந்தோசத்தையும் இழந்துடும் நிக்கிறேன்.
இப்போ எம் புள்ளைங்களுக்கு மூனு வேளை சாப்பாடு போடுறதுக்கே ஒவ்வொரு நாளும் போராடிக்கிட்டிருக்கேன்,
அடுத்த வருஷம் புள்ளைங்கள பணம் கட்டி படிக்க வைக்க முடியுமான்னு கூட தெரியல,
ஒன்னொன்னும் டாக்டர், கலெக்டர்னு கனவை வளர்த்துக்கிட்ட புள்ளைங்க,
என்ன பன்னப்போறேன்னே தெரியல?
அருவமா
கூட நின்னு அவருதான் எல்லாத்தையும் நடத்தி வைப்பார்ன்னு நம்பிக்கிட்டிருக்கேன்.”

நண்பர்களே!
குழந்தைகள் கல்வி, அவர்களின் திருமணம், மற்றும் உங்களுக்கான ஓய்வூதிய தொகை இந்த மூன்று செலவுகளுக்கான சேமிப்பையும் இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்குள் கொண்டு வரவேண்டும்,
இன்னும் அதிகமாக லாபம் கிடைக்குமே என்பதற்காக பிற வழிகளில் சேமிப்பதினால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்ப்போம் என பகுதி பதினாறில் முடித்திருந்தோம் அல்லவா!
அதற்கான பதில்தான் இது.!
யோசியுங்கள் எது சரி,
எது தவறென்று?

தொடரும் …

-கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here