ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி -17

0
217

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி -17

பானுமதியின் கணவன் சரவணன் இறந்துபோனபோது, பானுமதிக்கு வயது இருபத்தி ஏழு.
மூத்த பிள்ளை கார்திகேயனுக்கு வயது பத்து.
ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து படித்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவது பெண் குழந்தை ரம்யாவிற்கு வயது ஏழு.
அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள்.

எப்போதுமே அப்பா பிள்ளைகளுக்கு இடையிலான உரையாடல்கள் என்பது, சுவாரஸ்யமானதாக மட்டுமல்ல,
பிள்ளைகளின் சிறகுகளையும், கனவுகளையும் வளர்க்க கூடிய அழகான நிகழ்வாகவும் அது அமையும்!

“டாக்டரெல்லாம் வேண்டாம்பா, நான் கலெக்டரா ஆகிக்குறேன்.”

“அப்படின்னா விடு.
தங்கச்சியே டாக்ட்டரா ஆகட்டும்.”

“ஆமப்பா!
அவளே டாக்ட்டரா ஆகட்டும்,
நான் கலெக்ட்டரா ஆகிருறேன்.”

” நேத்திக்கு வரைக்கும் டாக்டர் தாண்டா சொல்லிக்கிட்டிருந்த?
இப்போ ஏன் கலெக்டர்னு சொல்ற!”

“அப்பா அவனுக்கு ஊசின்னா
பயம்ப்பா.
ஆனா நான் பயப்படமாட்டேன் தெரியுமா” தங்கையும் பேச்சுக்கிடையில் வந்துவிடுவாள்.

“அட ஊசிக்கு பயந்த பயலாடா நீ ? ”

“ஆமப்பா ஊசி வலிக்கும்பா,
நான் டாக்டர திட்டுற மாதிரி தானே,
நான் டாக்டராகி ஊசி போட்டா என்னையும் திட்டுவாங்க,
அதான் வேண்டாங்குறேன்.”

“காய்ச்சல் வந்தா என்னடா பண்ணுவ?”

“அப்பா…
தங்கச்சி தாம்பா
டாக்டர்!
மாத்திரை மட்டும் வாங்கிக்கலாம்.,”

“ஒரு ஊசிக்கு பயந்தாடா டாக்டர் வேண்டாம்ங்குற!”

“ஆமப்பா!
ஊசி எனக்கு பிடிக்காது.
ஆமா நீ ஏம்பா டாக்டர் ஆகல”

“எங்க அப்பா என்னை படிக்க வைக்கலடா”

“யாரு தாத்தாவா?”

“ம்..”

“நீ படிச்சுக்கிறேன்னு தான் சொன்னியா?”

“ஆமா”

“ஓகோ அப்படியா விசயம்!
தாத்தா தான் வேண்டாம்னுட்டாரா..
ஒரு வேளை தாத்தாவுக்கும் ஊசின்னா பயமா இருந்திருக்குமோ?”

“அவருக்கு பயமெல்லாம் கிடையாதுடா.
அவரும் என்னைய மாதிரியே பெரிய வீரர்தான்.
ஆனா நிறைய பணம் வேணும்ல,
அது தாத்தாகிட்ட இல்ல,
அதனால வேணாம்னுட்டாரு.”

“எவ்வளோவ்பா பணம் வேணும்?”

“அது!
உன்னோட ஸ்கூல் பேக் இருக்குல,
அது நிறைய வேணும்”

“அம்மாடியோவ்!
அவ்வளோ வேணுமா?
அப்படின்னா உங்கிட்ட அவ்வளோ பணம் இருக்காப்பா?”

“அப்பா ரெடி பண்ணிருவேண்டா செல்லம்.
இன்னும் எவ்வளோ வருஷம் இருக்கு!
அதுக்குள்ள அப்பா எல்லாம் ரெடி பண்ணிற மாட்டேனா.
நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சாலே போதும்”

இங்கே இது தான் பிரச்சனை.
இது மட்டும் தான் பிரச்சனை.
அதுவும் தீர்வுகள் தெரியாத பெரும் பிரச்சனை.!
குழந்தைகளுக்கான உலகத்தில் கனவுகளுக்கும், நிஜங்களுக்குக்கும் வித்தியாசம் கிடையாது,
இரண்டுமே ஒன்றுதான்.
நீங்கள் உங்கள் குழந்தையிடம் ஒரு கனவை கொடுத்தால் அதனை நிஜமாக மாற்றி உங்களிடம் திருப்பி தரும் ஆற்றல் உங்கள் குழந்தைக்கு உண்டு.

உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்துதான் கனவுகளை பெறுகிறார்கள்,
ஆதனால் உங்கள் கனவுகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
காரணம்! அவர்கள் தங்கள் எண்ணங்களொடு இந்த பூமிக்கு வந்திருக்கிறார்கள்.

இங்கே வெகு சுலபமாக ஒரு விதை போடப்பட்டுவிடுகிறது.ஆனால் வேலி போட்டு அனுதினமும் பராமரிக்கும் வேலைகள் தான் நடைபெறாமல் போய்விடுகிறது.
அதனால் கடைசியில் அந்த விதை ஒரு உயிரற்ற விதையாகி போய்விடுகிறது.

“பீமா ஸ்கூல்” திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி அதற்காக பெற்றோர்களை சந்த்தித்துகொண்டிருந்த போது,
நாங்கள் சந்தித்த பெண்தான்
இரு வளர்ந்த பிள்ளைகளின் தாயான இருபத்தி ஏழு வயதில் கனவனை பறிகொடுத்த பானுமதி.

குறுகிய காலத்தில் நிறைய பெற்றோர்களை சந்திக்கவேண்டிய நிர்பந்தத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது.
ஒரு பெற்றோரிடம் அவர்கள் குழந்தைகள் உயர் கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து சொல்வதற்கு அதிகபட்சம் அரைமணி நேரம், என திட்டம் வகுத்து செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பானுமதியிடம் அவர் குழந்தைகள் கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டங்களை விளக்கி சொல்வதற்கு வழியே தெரியாமல்,
அவர்கள் வாழ்க்கை கதையை கேட்டுவிட்டு, ஆறுதல் சொல்லுவதை தவிர,
தீர்வு எதுவும் சொல்ல தெரியாமல் கனத்த நெஞ்சத்தோடு விடை பெறத்தான் முடிந்தது.

சிமெண்ட் கூரை போட்ட பத்துக்கு, பத்து அளவு கொண்ட அந்த ஒற்றை அறைதான் அவர்கள் வாழும் வீடு.
அன்றாட வாழ்க்கையை ரோட்டோரங்களிலேயே வாழ்ந்து பழகிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைக்கு,
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தள்ளப்பட்டு அந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில் இருக்கும் சிரமங்கள் தான், இங்கே நிறைய பேருக்கு தாங்கள் நம்பிக்கொண்டிருந்தவர்களால் கிடைக்கப்பெற்ற பரிசு.

ஒவ்வொரு முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் ஓரிரு மாதங்கள் வருவது போல,
பள்ளி இறுதி ஆண்டு, இறுதி தேர்வு விடுமுறை நாட்களிலும், தோழிகளோடு பின்னலாடை நிறுவன வேலைக்கு வந்த போது, சந்தித்த சரவணனை, மற்ற ஆண்களை போல அத்தனை சாதாரணமாக பானுமதியால் கடந்து போய்விடமுடியவில்லை.

அன்றாடம் சர்வ சாதாரணமாக சந்திக்கும் ஆயிரக்கணக்கான கண்களில்..
ஒரு சிறு பிள்ளையாய் மிதந்து, கடந்த போன மனசு,
ஒரு வளர்ந்த பெண்ணுக்குறிய நானத்தோடு ஏதோ ஒரு ஜோடி கண்களில் கரைந்துபோய்விடுவதும்,
எவர்பாலும் ஈர்க்கப்படாத மனசு,
என்றாவது ஒருநாள் யாரிடமாவது பசை இல்லாமலேயே ஒட்டிக்கொள்வதுதான், காதலின் முதலாம் விதி!
அந்த விதியும், நாளும் பானுமதியின் பதினைந்தாவது வயதிலேயே அவளுக்கு வந்தது.

ஆனால்!
அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்ற அழகான வரிகளால் மட்டுமே எழுதப்பட்டதல்ல ராமாயணம் என்பதும்,
அதில் ஆரண்ய காண்டமும் உண்டு என்பதும்,
அந்த சீதை கூட அறிந்திடாத சூழ்நிலை ரகசியம்.

அந்த ஒரு மாதத்தில் பானுமதிக்கு திடீரென்று எங்கிருந்துதான் அத்தனை காதலும்,
அத்தனை கனவுகளும்,
அத்தனை அவஸ்தையும்,
அத்தனை தைரியமும்,
அத்தனை தெளிவும்,
அத்தனை நம்பிக்கையும், எதிர்காலத்தை பற்றிய அத்தனை தீர்மானமும் வந்ததோ.. ?
அவளுக்கே அது விடை தெரியாத புதிர்தான்!

சில காலம் காத்திருக்க கூட நேரமே இல்லை!
திருமணம் தான் ஒரே தீர்வு.
என்று உள்ளுக்குள்ளிருந்து மட்டுமல்ல,
அத்தனை திசைகளில் இருந்தும் தீர்மானமாய் குரல்கள் கேட்டன!
இந்த மாதிரியான உணர்வுகளால் உருகிபோகிறவர்களின் திருமணத்தை, இரு வீட்டார் தீர்மானித்து உறவுகளை கூட்டி நடத்துவதற்கான வாய்ப்பே இருக்காது.
அது எதாவது ஒரு மலை கோவிலில்,
நண்பர்கள் சுற்றி நின்று கைதட்டி வாழ்த்துகள் சொல்ல, இனிதே நடந்து முடிந்துவிடும்.

அப்படித்தான் சரவணன், பானுமதி திருமணமும் நடந்தது.
வழக்கம் போல பெற்றோர்களின் எதிர்ப்புகளை சந்தித்து,
புத்திமதிகளுக்கு காதுகளை செவிடாக்கிகொண்டு,
தாலியை மட்டும் பத்திரமாக இறுக பற்றிகொண்டு காப்பாற்றி,
பிடிவாதம் ஒன்றையே ஆயுதமாக்கி நின்று ஜெயித்தாலும், பிரச்சனை போலிஸ் நிலையம் வரை போகாததால்,
அவர்கள் அன்று முதல் கணவன், மனைவியானார்கள்,
பதினேழு வயதில் பானுமதி ஒரு பிள்ளைக்கு தாயாகிப்போனாள்.

எல்லோர் வாழ்க்கையிலேயும் வரவேண்டிய அந்த ஒருநாள்!
சரியான வயதுக்கு பிறகு,
வாழ்க்கையை பற்றிய தெளிவான தீர்மானத்திற்கு பிறகு, நீண்ட காலத்திற்கான திட்டமிடலுக்கு பிறகு வரவேண்டும்.
ஆனால் சிலபேர்களுக்கு அதற்கான பொறுமை இருப்பதில்லை.

அப்படி சுய விருப்பத்திலான,
அல்லது சுய நலத்திலான முடிவுகளை எடுக்கும்போது, அதற்கான விலைகளையும் கொடுத்துதான் ஆகவேண்டும்.

பிறந்து வளர்ந்த வீடுகளின் ஆதரவு இருக்காது,
சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஆள் இருக்காது,
கவலையென்றால் யாரிடமும் சொல்லவும் முடியாது,
கஷ்டமென்றால் யாரிடமும் கேட்கவும் முடியாது.
இவர்களின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே ஒரு ஒற்றை பதில் தான் வரும்..
“நீ பார்த்து பண்ணிக்கிட்டதுதாம்மா அனுபவி”
அவ்வளவுதான்.

ஆனால் உறவுகள். அவர்கள் தரும் ஆறுதல், அரவணைப்புகள், இதையெல்லாம் சமரசம் செய்துகொண்டு வாழவேண்டுமென்றால்,
இவர்கள் எல்லோரையும் தாண்டி வருமளவிற்க்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவன் நல்லவனாக இருத்தல் வேண்டும்.
காதலனானாக இருத்தல் வேண்டும்.

ஆம்!
சரவணன் அத்தனை நல்லவன் தான்.
அப்படிபட்ட காதலன் தான்.
துளி கூட வேஷமில்லா அத்தனை அன்பிற்கும் சொந்தக்காரன் தான்.
அவர்களுக்குள் தாம்பத்யம் என்ற ஒற்றை விசயத்தை தவிர்து பார்த்தால், அவன் பானுமதிக்கு அவள் அப்பாவின் இடத்தைதான் நிறைவு செய்தான்.
ஆதலால்..
பானுமதியும் சரவணனுக்கு அவன் அம்மாவின் இடத்தை நிறைவு செய்வது கட்டாயமாகி போனது.
அன்பு என்பதே அவர்களின் உறவாகி போனது.
இரு பிள்ளைகள் வந்து அதற்கு சாட்சியாகி நின்றது.

பானுமதிக்கு அப்பா இல்லை!
அம்மாவும், அக்காவும் மட்டும் தான் வேலைக்கு போய் குடும்பத்தை கவனித்துகொண்டு, பானுமதியையும் படிக்கவைத்துக்கொண்டிருந்தார்கள்.
எப்படியாவது அவளை கல்லூரியில் சேர்த்துவிடவேண்டும் என்பதே அவர்கள் இருவரின் ஆசையாக இருந்தது.
அவர்களின் ஆசையை சரவணன் தனது பொறுப்பாக நினைத்துக்கொண்டு, அவளை கல்லூரியில் படிக்கவைத்தான்.
பி.எட் முடித்து விட்டு வீட்டு பக்கத்திலிருந்த ஒரு சிறிய பள்ளியில் சிறிய சம்பளத்திற்கு போய்கொண்டிருந்தாள்.

சரவணன் குடும்பத்தில் அவனுக்கு அம்மா கிடையாது.
வாடகை வீடுதான்.
அப்பாவிற்கும் பனியன் நிறுவனத்தில் கூலி வேலை என்பதை தவிர, சொல்லிக்கொள்ளும்படியான வேலை எதுவும் கிடையாது.
அண்ணனுக்கு மட்டும் திருமணம் முடிந்திருந்த ஒரு வருடத்திலேயே சரவணனும் சுயமாக திருமணத்தை முடித்துக்கொள்ள,
சிறிது காலம் வீட்டோடு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தாலும் ,
தங்கையின் திருமணத்தை நடத்தும் பொறுப்பு சரவணனுக்கும் இருந்ததால், அதன் சாக்காக தந்தை வீட்டுக்கு தன் மனைவி பிள்ளைகளோடு போய் வரும் நிலையில் இருந்தது உறவு.

தங்கையின் திருமணம் முடிந்த பிறகு,
அப்பா அண்ணனின் வீட்டோடு தங்கிவிட, அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவது தொடர்ந்தது.

சரவணனுக்கு பிள்ளைகளிடத்தில் பாசம் மடுமல்ல,
குழந்தைகளைப் பற்றிய மிகப்பெரிய கனவும் இருந்தது.
டாக்டர்,
கலெக்டர்,
இப்படியான ஆசைகளும், கனவுகளும் தான் அந்த வீடெங்கும் சிதறிக் கிடந்தன.
அப்படியான மனநிலைகளில் தான் பிள்ளைகளும் வலம் வந்தன.
அந்த வீட்டில் சரவணன் என்கின்ற அந்த வீட்டின் தலைவன் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாக இருந்தான்.

சரி சரவணனுக்கு என்ன நேர்ந்தது?
அடுத்த வாரம் பார்க்கலாம் காத்திருங்கள்.

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here