ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 16

1
199

கல்விக்கான திட்டமிடல், திட்டமிடாமை, மற்றும் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றிய விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆமா!
கல்விக்கான திட்டமிடல் என்பது அத்தனை அவசியம்தானா? திட்டமிட்டு செய்வதற்கு அதில் என்ன இருக்கிறது?
அதை ஏன் அத்தனை பெரிய பூதாகரமான விசயமாக எடுத்துக் காட்ட முயலுகின்றீர்கள்?
இதற்கு போய் பெரிதாக என்ன மெனக்கிட வேண்டிகிடக்கு!
போகிற போக்கில் செய்து முடித்து விட முடியாதா? என்பதாகத்தான் நிறைய பெற்றோர்களின் எண்ண ஓட்டம் இருக்கின்றது.

அப்படியான எண்ண ஓட்டங்களில் நிரூபிக்கப்பட்ட தெளிவு என்பதாய் எதுவும் இல்லை.
அது தற்காலிகமாக தப்பிப்பதற்கான ஒரு மனோநிலை மட்டும்தான். ஏனென்றால் அவர்களுக்கு முன்னால் நிறைய வருடங்கள் இருப்பதாக தோன்றுகிறது,
இப்போது பிறந்த ஒரு குழந்தைக்கு பதினெட்டு வருடங்கள் கழித்து பெற்றுத் தரப்போகும் உயர் கல்விக்காக, இப்பொழுது திட்டமிடுதல் என்பது கொஞ்சம் அலர்ஜியான விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆனால் அந்த அலர்ச்சிதான், ஒரு கட்டத்தில் அலட்சியமாக மாறி நாட்களை கடத்தி தின்றுவிடுகிறது.

எல்லையென்று எதையுமே வகுத்துக் கொள்ளாமல் சுற்றி வருபவர்களை,
ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ்க்கையை வாழ வேண்டும், எனச்சொன்னால் உடனடியாக அதனை புரிந்து ஏற்றுக்கொள்வது என்பது,
அவர்களை பொறுத்தவரையில் இயலாத காரியம்.

இதிலிருக்கும் சூட்சமம் என்னவென்றால் எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் வாழும் வாழ்க்கையில் இருக்கும் ஆபத்துக்கள், வட்டம் போட்டு வாழும் வாழ்க்கையில் இருப்பதில்லை என்பதுதான்.
எல்லை வகுத்துக் கொண்டால் வளர முடியாது, என்ற தத்துவமெல்லாம் சரிதான்,
மொத்த வாழ்க்கைக்கும் அந்த தத்துவத்தை சரி என்று சொல்லவில்லை.

வந்தால் வருகிறது, போனால் போகிறது, என்பது மாதிரியான விஷயங்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் வந்தால் வருகிறது,
போனால் போகிறது என்பது மாதிரியான விசயங்களில் உங்கள் பிள்ளையின் கல்வியை சேர்க்காதீர்கள்,
என்பதை எடுத்து சொல்வதை எங்கள் கடமையாகவும்,
புரிந்துகொள்வதை உங்கள் கடமையாகவும்,
சொல்வதற்கு தான் விளைகிறோம்,
மற்றபடி பூதாகரமாக எடுத்து காட்டுவதற்கு எந்த முயற்சியும் இல்லை.
நடந்தே ஆக வேண்டும் என்பது மாதிரியான விஷயங்களுக்கு ரிஸ்க் எடுக்காதீர்கள் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

கல்வியின் மூலமாகத்தான் உங்கள் குழந்தையின் வாழ்க்கை மேம்படும் என்பதை நீங்கள் நம்பும் போது,
அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்போது, அதில் எங்களது கருத்தாக சொல்வது என்னவெனில்,
அதனை சரியான முறையில் திட்டமிடுங்கள் என்பதுதான்.

ஆமா! அதென்ன திட்டமிடுதல்? எப்படித்தான் திட்டமிடுவது!
எங்கே கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் பார்க்கலாம் என்கிறீர்களா?
அது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல,
ஒரு குட்டி கதை தான்!
ஒரு ஊரில் நான்கு அப்பாக்கள் இருந்தார்கள். அவர்களின் நான்கு பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு நாள் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு, நான்கு பிள்ளைகளும் ஒரேவிதமான தகுதியையும் பெற்றுக்கொண்டு, அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் உயர்கல்வியைத் தொடங்குவதற்கு தயாராகி, தங்கள் அப்பாவின் முன் வந்து நின்றார்கள்.

பணம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்ற நிலையில் இருந்த ஒரு அப்பா, தன் பிள்ளை ஆசைப்பட்ட உயர்கல்வியை உடனே வாங்கிக் கொடுதுவிட்டார்.

தன் பிள்ளையின் உயர் கல்வியை மனதில் வைத்து, அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி செயல்படுத்தி வந்த இரண்டாவது அப்பா, இந்தப் படிப்பை தான் நீ படிக்க வேண்டும் என்று, அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் எப்பொழுது செய்து வைத்துவிட்டேன், என்று சொல்லி சந்தோசமாக பிள்ளை ஆசைப்பட்ட கல்வியை வாங்கிக்கொடுத்தார்.

பிள்ளையின் உயர்கல்வியை மனதில் வைத்து, சிறிது சிறிதாக சேமித்து வைத்து, உயர் கல்விக்காக தேவைப்படும் பணத்தில் பாதி சேர்த்து வைத்திருந்த அந்த மூன்றாவது அப்பா,
அதனால் என்ன உனக்கு படிப்பதற்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதில் பாதியை நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்பிருந்தே சேர்த்து வைத்துவிட்டேன்,
என்ன இன்னும் பாதி தானே?
நிச்சயமாக ரெடி பண்ணிவிடலாம் நீ ஒன்றும் கவலைப்படாதே நீ ஆசைப் பட்ட படிப்பை படிப்பாய், என்று பிள்ளைக்கு உறுதி அளித்து விட்டார்.

ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், போகிறபோக்கில் எல்லாவற்றையும் செய்து கொடுத்து விடுவேன், என்று அலட்சியமாக இருந்த நான்காவது அப்பா,
அட கடவுளே!
இவ்வளவு பணம் கட்ட வேண்டியது இருக்கிறதா? என்று மலைத்துப் போய் நின்று,
சரி நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்பா, நீ வேற ஏதாவது படிக்க முடியுமான்னு பாரு, இல்ல அப்பா கூட வந்து ஏதாவது வேலையை பார்த்து குடும்பத்தை பாரு என்று சொல்லிவிட்டார்.

பெரும்பாலும் பிள்ளைகளின் கல்வியை, வாழ்க்கையை இந்த நான்கு அப்பாக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். என்பதை மறந்துவிட வேண்டாம்.
இதில் நீங்கள் எந்த அப்பா என்பது தான் முக்கியம்.
அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நான்கு பேரில் நீங்கள் எந்த மாதிரியான அப்பா என்பதை வைத்துதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும்,
அவர்கள் வாழ்க்கை முறையும் அமைகிறது.

அதே சமயம் கல்விக்கான திட்டமிடல் எத்தனை முக்கியமோ,
அதே அளவுக்கு
அதை சேமிக்கும் வழிமுறையும் முக்கியம்.

சேமிப்பு,
முதலீடு,
இன்சூரன்ஸ்,
மூன்றும் ஒன்றல்ல,
வெவ்வேறானவை எனும் தெளிவு முதலில் அவசியம்.
ஒரு சேமிப்பை தொடங்கும் போது அது எதற்காக எனும் காரணத்தையும் கருத்தில் கொண்டு சேமிக்கும் இடத்தை முடிவு செய்தல் வேண்டும்.

எந்த காரணமும் இல்லாமல் செலவுபோக மிச்சமாகும் பணத்தைதான் நீங்கள் சேமிக்கிறீர்கள் என்றால்,
அதை உங்களுக்கு தெரிந்த வழிகளிலேயே செய்யலாம்.
வங்கியில் போட்டு வைக்கலாம்,
சீட்டு போட்டு மொத்தமாக எடுக்கலாம்.
திறன் இருந்தால் வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம்.

ஒருவேளை உங்கள் சேமிப்பை நீங்கள் ஒரு முதலீடு போல செய்ய நினைக்கிறீர்கள் என்றால்,
வியாபார முதலீடுகளில் இருக்கும் லாப, நஷ்டங்களை புரிந்துகொள்ளும், ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் முதலீடு சார்ந்த சேமிப்புகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பார்கலாம்.

ஆனால்!
குழந்தைகள் கல்வி,
அவர்கள் திருமணம், மற்றும் உங்கள் ஓய்வுகாலத்திற்கான சேமிப்பு என்று தொடங்கும்போது, கண்டிப்பாக அதில் இன்சூரன்ஸ் இருக்கவேண்டும்.
ஏனென்றால்.. இந்த மூன்று செலவுகளும் கட்டாயம்.
எந்தவித சமரசமும் இல்லாமல் அந்தந்த காலகட்டங்களில் நடந்தே தீரவேண்டியது.
நீங்கள் இருந்தாலும் நடக்கவேண்டும்,
நீங்கள் இல்லையென்றாலும் நடந்துதான் ஆகவேண்டும்.

ஏன் இந்த செலவுகளுக்கான சேமிப்பில் மட்டும்
இன்சூரன்ஸ் தேவை என்று சொல்கிறீர்கள்?
இந்த மூன்று செலவுகளுக்கான சேமிப்பை எங்களுக்கு தெரிந்த மற்ற வழிகளில் செய்து வைத்தால் இன்னும் கூட அதிகமாக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்று கேட்கலாம்.
ஆம்!
உண்மைதான்,
உங்களுக்கு தெரிந்த சேமிப்புகளில் கொஞ்சம் அதிகமாகவே கூட லாபம் கிடைக்கலாம்.

ஆனால்
சேமிப்பை தொடங்கியவர் ஒருவேளை மரணமடைய நேர்ந்தால்,
அப்போது இந்த சேமிப்புகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
அல்லது தீர்வை கொடுக்கும்?
பார்க்கலாம் வரும் வாரத்தில்! தொடரும்…

-கூ, சுரேஷ்வரன்
 இன்சூரன்ஸ் ஆலோசகர்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here