ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? – பகுதி – 15

0
195

பொறுப்புக்களை சுமப்பவர்கள்,
கடவுளின் செயலாற்றுகிறார்கள் எனச்சொல்லலாம்.

ஓரறிவு கொண்ட உயிரினங்கள் முதல், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது.
அவை, அவைகளுக்கான தேவைகளை,
அவை, அவைகளே பூர்த்தி செய்து கொள்வதென்பதோ,
அல்லது
அத்தனைகான தேவைகளையும் யாரோ ஒருவர் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதெல்லாம் முடியாத காரியம்.

அதனால்தான் இங்கே இயற்க்கையின் நியதி என்பதை போலவும்,
விதியின் பெயராலும், பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப் பட்டிருக்கின்றன.

கடவுள் தன் பொறுப்பின் செயலாற்றும் போது, இந்த உலகமும், உயிர்களும், உயிர்ப்புடன் இருக்கின்றது.

ஒரு ஆசிரியர் தன் பொறுப்பின் செயலாற்றும் போது, ஒரு மாணவனின் அறிவுத் திறன் மேம்பட்டு,
அதன் மூலமாக அவன் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

ஒரு பேருந்து ஓட்டுநர் தன் பொறுப்பின் செயலாற்றும் போது, அவரை நம்பி அமர்ந்திருக்கும் பயணிகள் அத்தனை பேரும்,
பத்திரமாக அவரவர் இடங்கள் போய்ச் சேர முடிகிறது.

ஒரு மருத்துவர் தன் பொறுப்பின் செயலாற்றும் போது, ஒரு நோயாளி உயிருடன் மீண்டு வரமுடிகிறது.

விமானத்தை இயக்கும் ஒரு பைலட் தன் பொறுப்பின் செயலாற்றும் போது, அதனுள் அமர்ந்திருக்கும் அத்தனை பயணிகளும், ஆகாயத்தின் வழியாக கண்டங்கள் கடந்து தத்தம் இடங்களுக்கு பத்திரமாக போய் சேர முடிகிறது.

இவர்களில் யாரேனும் தங்கள் பொறுப்புகளை ஒரு கனம் மறந்தாலும், அதனால் ஏற்படும் மிகப்பெரிய இழப்புகளும்,
உயிர் பலிகளும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு நிகழலாம்.

இவற்றையெல்லாம் சுட்டிகாட்டுவதற்கு காரணமே,
இதற்கெல்லாம் சற்றும் குறைவில்லாததுதான், பெற்றோர்களானவர்களின் பொறுப்பும் என்பதால் தான்.

குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது ஒரு சாதனையும் அல்ல.
உங்கள் குழந்தைகள், நீங்கள் கொஞ்சி, விளையாடி, மகிழ்ந்து, பூரித்துபோய், கர்வம் கொள்வதற்காக மட்டும்,
கடவுள் கொடுத்த பரிசும் அல்ல.
அது இந்த பூமியில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும்.

இந்த உலகத்திற்கு உங்கள் பங்காக நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்,
குறைதபட்சம் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதுகூட உங்கள் பொறுப்பு என நீங்கள் நினைத்தால்,
ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்து வளர்த்தாலே போதும்,
அது கொடுக்கும் ஆக்ஸிஜன் இந்த உலகம் உறைந்து போய்விடாமல் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும்.

ஆனால் இந்த உலகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு உங்களுடையது என நீங்கள் நினைத்தால், அதை உங்கள் குழந்தைகள் மூலமாகத்தான் செய்து முடிக்க முடியும். ஏனென்றால் ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியிலும் தான் உலகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது, என்பதுதான் வளர்ச்சியின் சூட்சமம்.

என் பெற்றோரின் வாழ்க்கையைவிட, எனது வாழ்க்கை ஒரு படி மேம்பட்டு இருந்தால்,
என் பெற்றோர் அவர்கள் பொறுப்பை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள் என்பது நிரூபனம்.

எனது வாழ்க்கையைவிட எனது குழந்தையின் வாழ்க்கை ஒரு படி மேம்பட்டு இருந்தால் நான் எனது பொறுப்பை சரியாக செய்து முடித்திருக்கிறேன் என்பது நிரூபனம்.

இந்த உலகத்திற்காக தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் செய்து முடிக்க தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் சரியாக செய்து முடித்தாலே போதும், ஒவ்வொருவரும் அவரவரின் பொறுப்பை மட்டும் உணர்ந்து சிறப்பாகவும், தெளிவாகவும் செய்து முடிக்கும்போது, ஒட்டுமொத்த உலகமும் ஒரே சீராக சமநிலை வளர்ச்சியை பெறும் என்பதே சூட்சமம்.

ஆமா!
இன்சூரன்ஸ் பற்றிய கட்டுரையில் எதற்காக இதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?
என நினைக்கலாம்!.

பொறுப்பு என்று வரும்போது இன்சூரன்ஸ் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு விசயமாக முன்னிருத்தப்படுகிறது, என்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான விளக்கங்கள் தான் இத்தனையும்.

நீங்கள் கடனில் ஒரு மொபைல் வாங்குகிறீர்கள்,
அந்த கடனுக்கான தொகையை மாத, மாதம் நீங்கள் தான் கட்டி முடிக்கப்போகிறீர்கள்,
ஏனென்றால் நீங்கள் வாங்கிய பொருளுக்கான தொகையை கட்டி முடிப்பது உங்கள் பொறுப்பு தான்.
ஆனாலும் உங்களுக்கு கடன் கொடுத்தவனுக்கு ஒரு உத்திரவாதம் தேவைப்படுகிறது,

எதற்காக அந்த உத்திரவாதம்?
நீங்கள் கடனை திருப்பி செழுத்தும் திறனில் அவனுக்கு சந்தேகமில்லை,
அதை உங்கள் “கிரிடிட் ஸ்கோர்” சொல்லிவிடும்.
ஆனால் சந்தேகம் என்னவென்றால், ஒருவேளை கடனை கட்டி முடிப்பதற்குள் உங்களுக்கு மரணம் சம்பவித்தால் நீங்கள் வாங்கிய கடனை உங்களுக்கு பதில் யார் செழுத்துவார்கள் என்பதற்கான உத்திரவாதம் தான் அவனுக்கு தேவைப்படுகிறது.

அங்கே உங்கள் சார்பாக கடன் கொடுத்தவனுக்கு ஒருவர் உத்திரவாதம் கொடுக்கிறார்.
அதாவது கடன் செலுத்தும் காலத்திற்குள் இவர் மரணமடைந்தால் அந்த கடன் தொகை மொத்தத்தையும் நான் உங்களுக்கு செலுத்தி விடுகிறேன் என உத்திரவாதம் கொடுத்துவிட்டு, அதற்கு கட்டணமாக ஒரு சிறிய தொகையை உங்களிடம் பெற்றுக்கொள்கிறார்.
அவர் பெயர் இன்சூரன்ஸ்.

இப்போது கடன் கொடுத்தவனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை வந்துவிட்டது.
இந்த கடன் எப்படியும் வசூலாகிவிடும் என்று.

கடன் பெற்ற உங்களுக்கும் மிகப்பெரிய நிம்மதி, ஒருவேளை நமக்கு ஏதாவது நிகழ்ந்தாலும் கடன் சுமை வீட்டார் மேல் விழாது என்று.

பத்து மாதத்திற்குள் கட்டி முடிக்கப்போகும் வெறும் பத்தாயிரம் கடனுக்கே இன்னொருவரை பொறுப்பாளராக நியமித்து,
ஒரு மாற்று ஏற்பாடு செய்து வைப்பது கட்டாயம் எனும்போது,
ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே கட்டமைக்கும் பொறுப்பினை நீங்கள் செய்து கொண்டிருக்கும்போது,
அதற்கு ஓர் மாற்று ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ளாமல், போகிற போக்கில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவேன்,
என்ற எண்ணத்தை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு நிற்பது என்னவிதமான நம்பிக்கை?

சரியான திட்டமிடல் இல்லாமல் போகிறபோக்கில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவேன் என்கின்ற மனோபாவம்தான், அவர்களை நம்பியிருப்பவர்களின் வாழ்க்கையில் விதியாய் விளையாடிவிடுகிறது.

நண்பர்களே!
உங்களை நம்பியிருப்பவர்களுக்காக நீங்கள் எதையும் செய்து வைக்காவிட்டாலும் கூட அவர்கள் உங்களை எதுவும் கேட்கப்போவதில்லை.
ஆனால் வேறு யாரிடமாவது கேட்கும் நிலமைக்கு அவர்கள் உள்ளாகி விடக்கூடாது.

உங்கள் குடும்பத்தில் ரத்தமும், சதையுமாக கலந்திருக்கும் உங்களுக்கு, மாற்று என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது.
ஆனால் உங்கள் வருமானத்திற்கு மாற்று ஏற்பாடு செய்துவிடலாம்.
அதனால் அதை செய்துவைப்பது உங்களுக்கும், உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

குழந்தைகளின் உயர்கல்விக்கான திட்டமிடல், திட்டமிடாமை சாதக, பாதகங்கள்,
அதன் விளைவுகள் என்ன?
வரும் வாரங்களில் பார்க்கலாம்.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினையும் உண்டு, எல்லா விசயத்திலேயும், என்பதை எல்லா நேரத்திலேயும் மனதில் கொண்டு நடந்தால் வாழ்க்கையில் பெரியதொரு தோல்வியையும், இழப்புக்களையும் தவிர்க்கலாம்.

-கூ. சுரேஷ்வரன்
 இன்சூரன்ஸ் ஆலோசகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here