ஊர் பய காசுல முத்து குளித்தவன்

0
163

“ஊர் பய காசுல முத்து குளித்தவன்”

மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான சுந்தர், மும்பை பக்கம் ஒரு பெருநகரில் கைநிறைய காசு கிடைத்த வேலையில் சில ஆண்டுகளைக்கடத்திவிட்டு, சொந்த ஊருக்கு நிர்பந்தம் காரணமாக தற்போது தெற்கே வந்து ரொம்ப நாளாச்சு! – இப்போது இங்குள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தற்காலிக வேலை! –
இரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், உள்ள தன் வீட்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு, மீண்டும் ஒர்க்ஷாப் நோக்கி, தன் சைக்கிளில் வேகமாகச் சென்ற சுந்தர், வெயில் கொடுமைதாளாமல் திருவள்ளுவர் பூங்கா நிழலில் சிறிதுநேரம் இளைப்பாற நின்றான்.
இடைப்பட்ட காலத்தில் சுந்தருக்கு நேர்ந்த ஒரு மோசடித் துயரம் ஆறாத வடுப்போல அவனது நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துகிடந்தது. இதோ..,சாலை வெளியெங்கும் கானல்நீர் தகித்துக் கொண்டிருப்பது போல் சுந்தரின் நெஞ்சிலும் அந்தத் துயர நினைவுகள் தகிக்கத் தொடங்கியது.
அது ஒரு சிற்றூர். ஊரை ஒட்டியவாறு ஒரு காட்டாறு ஓடுகிறது. செண்பகவல்லி அணைப் பகுதியிலிருந்து ஒரு கிளை நதியாகப் பிரிந்து வருவதாகக் கூறுவர். ‘நிச்சேசப நதி’ என்று அதற்குப் பெயர். ஊயிர்நீத்தாரின் உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கரைக்கப்படும் ஊர்களில் ஒன்றாக இவ்வூரும் இலக்காகியுள்ளது. அகிம்சாவாதி, எனப் போற்றப்படும் தலைவரின் ‘அஸ்தி’ கரைக்கப்பட்ட இடங்களில் இவ்வூரும் ஒன்று.
இங்கு – ஊரக்கு சற்று வெளியே புதிதாக ஒரு கல்வி நிலையம் திடுதிப்பென முளைத்தது. கல்வி நிலையம், மாணவர் விடுதி ஆகியன வாடகைக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது. சுற்றுவட்டாரத்தில் சூறாவளியாய்ப் பரவிய விளம்பரத்தின் மூலம் மாணவர் சேர்க்கை மளமளனெ வந்துசேர்ந்திருப்பது தெரிந்தது, ஆசிரியர்கள், அலுவலர்கள் சேர்க்கை போன்ற முன்னேறபாட்டுப் பணிகளெல்லாம் ஒரு மாதத்துக்குமுன்பே கனகச்சிதமாக நிறைவேறியிருந்தது. இதையறிந்த சுந்;தர், தனக்குமொரு வேலைகேட்டு விண்ணப்பம் போட்டு வைத்தான். விண்ணப்பித்த ஒருவாரத்துக்குள் சுந்தருக்கும் அங்கு ஒரு வேலை கிடைத்தது.
வெகுவேகமாக வளர்ச்சிகண்டுவரும் தனது கல்விநிலையத்தின் முன்னேற்றத்தில் அதன் தாளாளவிருக்கு இருப்புக்கொள்ளமுடியாத அளவுக்கு உற்சாகம்,சுறுசுறுப்பு ..! “சர்…சர்…-“ என அவ்வப்போது பறந்துகொண்டிருக்கும் அவரது ‘சான்ட்ரோ’ காரின் வேகமே, ஊருக்கு அந்த உண்மையை உணர்த்திக்கொண்டிருந்தது,
தன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் போன்ற முன்னோர்கள் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்த ‘டாம்பீக’ வாழ்க்கையின்மீது அதீத பெருமிதம் கொண்டவராகவும், காலப்போக்கில் அவர்கள் அவ்வாழ்க்கையை இழந்தது பெருந்துயரம் என்று புலம்பியவாறும் தாளாளர் தன் இயல்பை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்,
ஒரு கல்லூரித்தாளாளர் என்ற பேராசைபிடித்த வளர்ச்சிக்கு இவ்வியல்பே பெரும் உந்துதலாக இருந்துள்ளது.
இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாங்கித்தரும் தனது அடுத்த ஈடுபாட்டையும் தாளாளர் மும்முரமாக அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
சில ஆண்டுகள் உருண்டோடின.
சுந்தர் தன்வீட்டில் ஓய்வாக இருந்த ஒருநாள், ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருப்பதைக் கண்டான். ஆர்வம் மேலிட அதை எடுத்து பிரித்துப் பார்த்தான்.”உவமையுடன”; எந்த வித மத அடையாளமும் இல்லாமல் உவமையுடன் ‘’அட நம்ம பயலுக்கு கல்யாணம்’’… என அச்சிடப்பட்டு இருந்தது. சுந்தரின் உள்ளத்தில் ஏற்பட்ட சிறு புன்னகை உதடுகளின் வழியாக நகைப்பை வெளிப்படுத்தி வெளியேறியது!
திருமணத்தேதி, இடம், வரவேற்புநிகழ்வு போன்ற அனைத்து விவரங்களையும் அதில் கவனித்தான். “ மாலையில் நடைபெறவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளலாம்” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டான்.
அந்த நாளும் வந்தது. ——பனைமரங்களும் புங்கைமரங்களும் தேக்கு மரங்களும் செழித்தோங்கியிருக்கும் பின்னணியைக் கொண்டிருக்கும் வசீகரமான ஒரு வெண்ணிறக் கட்டட வளாகம் அது.
சுந்தர் அவ்விடத்தை நெருங்குகையில், சூரியன் தன் மாலை மயக்கத்தில் திளைத்திருந்தான். செங்குத்;தாக கதிர்களைச் செலுத்தியவாறு மறையும் வேளையில் அடிவானத்தில் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்த மாயாஜாலக்கோலம், உலகின் எந்த ஒரு படைப்பாளியின் கற்பனை அறிவுக்கும் எட்டாத அழகைக்கொண்டிருந்தது. மரங்களை ஊடாடிய மாலைத் தென்றல், அங்குள்ள எலுமிச்சை, மாமரத் தளிர்களின் நறுமணத்தையும் பரப்பி விழாச்சூழலின் மாமரத்தளிர் மகிழ்ச்சிக்கு பெரும்பங்காற்றியது.
விழாவின் செயற்கை அலங்காரங்களும் தடபுடலாக அமர்க்களப்பட்டன. திறந்தவெளி மேடையில் மணமக்களின் வண்ண உருவப்படங்களுக்கு பதிலாக, கணவனுக்கு மனைவி நிழல் போல் இருப்பதாய் வடிவமைக்கப்பட்ட 20ஒ30 அளவு பிளக்ஸ் போர்ட்டில் மின்னொளி அலங்கரிப்பில் வசீகரமாய் காட்சி தந்தன பச்சைக்கம்பள விரிப்பில் மேடையும் சிவப்புக்கம்பளவிரிப்பில் நடைபாதையும் மேடையின் பக்க வாட்டுகளில் பூந்தொட்டிகளும் வண்ணக்காகிதப் பூச்சரடுகளுமாகவும், தென்னை மர குருத்துகள் தொங்கியது பார்ப்போரை மதிமயங்கச் செய்து கொண்டிருந்தது.
மேடைக்கு வெகு அருகாமையில் நாதசுரம் – தவில் கலைஞர்கள் மங்கல இசையை முழங்கிக் கொண்டிருந்தனர். மதுரையிலிருந்து விஷேஷமாக வரவழைக்கப்பெற்றிருந்த மேடைக் கலைஞர்களின் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மற்றொரு பக்கம் ஆர்ப்பாட்டமாய் நிகழ,சிலம்பாட்ட வீரர்களின் அணிவகுப்பு சுழன்று சுழன்றாடி சாகசம் காட்டிக்கொண்டிருந்தது. திடிரென முழங்கிவந்த பறையிசைக் குழுவின் ஆர்ப்பாட்டமான பேரிசை முழக்கம் வானத்தையும் வையகத்தையும் இணைத்ததோவென வியப்புறும் வண்ணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பேரொலி மிகுந்த இசையாட்டம், ஒலிபெருக்கியின் வாயிலாக வெளியே பரவ, அனுமதிக்கப்பட்டிருந்த வரம்பை மீறிய மக்கள் கூட்டம் வெளியிலிருந்து நிகழ்ச்சி நிகழும் இடம் நோக்கித் திரண்டது. வானிலிருந்து பூமழைபொழிந்தாற்போல் மற்றொரு பக்கம் வானவெடியின் முழக்கம் அதிர்ந்துகொண்டிருந்தது.
இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நிறைந்த மகிழ்வான சூழலில்,மணமக்கள் மேடைக்கு அழைத்து வரப்பெற்று,ஒரு மூத்த கவிஞரின் வாழ்த்துரையோடு மேலும் பல மைக் பசியர்களின் வழ..,வழ.., வாழ்த்துரைகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி காலத்தில் கரைந்து, விருந்தை நோக்கி நகர்ந்தது.
நெய்யும் பருப்பும் கலந்த சோறும்,நாட்டுக்கோழி,காடை கௌதாரி,கறிக்குழம்பும்,பொரித்த கறித்துண்டுகளுடன் நண்டுரசமும் கருவாட்டுக்குழம்புமாக விருந்தினர்களின் நாவும் வயிரும் ருசியில் திளைத்தன.
சுந்தரும் தன் நண்பர்களும் பந்தியில் அமர்ந்து கறித்துண்டுகளை சுவைத்தபோது ஒருவரையொருவர் பார்த்து லேசாக புன்னகைத்துக் கொண்டார்கள். “ஊர்ப்பய காசுல முத்துக் குளிக்கும்” மணவிழா என்பது இந்த சிரிப்பின் அர்த்தமாக இருப்பது பக்கத்தில் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த விருந்தாளிகளில் எத்தனை பேருக்குத் தெரியும் ? யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
திருமணம் முடிந்து சிறிது காலம் கடந்திருந்தது. கல்லூரித் தாளாளரின் அசுரகதி முன்னேற்றமும் அவரது தடாலடி நடவடிக்கைகளும் பலருக்கும் உள்ளுர பல சந்தேகங்களையும் பயத்தையும் அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டுதானிருந்தது. எனினும்,கல்வித்தாகம் தணித்துக்கொண்டிருந்த மாணவர்களின் மகிழ்ச்சியும் அவர்களுக்காக தங்கள் உழைப்பைப் பணமாகச் செலுத்திய வெள்ளந்தி பெற்றோர்களின் மனசும் எவ்வித சந்தேகமுமின்றி மண்ணின் இயல்பான நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி நின்றது.
ஒரு நாள் அதிகாலைப் பொழுது !- கல்லூரி வளாகத்தில் ஏக களோபரமாக இருந்தது. அக்கம் பக்கத்தினரின் கூட்டம் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது. கட்டட உரிமையாளரின் கோபம் அங்கு பல அடியாட்களின் வடிவத்தில் கல்வி நிலையத்தை சூறையாடிக்கொண்டிருந்தது. தாளாளரின் உடமைகள், கல்லூரி சார்ந்த விலையுயர்ந்த அனைத்துப் பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு, வீதியைநோக்கி குப்பைபோல் குவிந்தது.
தாளாளரின் அத்தனை அயோக்கியத்தனங்களும் அங்கு பகிரங்கப்படுத்தப்பட்டது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அலைபேசிகளில் தங்கள் பெற்றோர்களுக்கு பெரும் பதற்றத்துடன் நிலைமையை விவரித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த தாளாளர் வழக்கம்போல் தன் சாண்ட்ரோ காரில் வேகமாகவந்து இறங்கி, நிலைமையின் வீரியம் புரிந்து தலையிலடித்துக் கொண்டு புலம்பலானார்.
பலபேருடைய பணத்தையும் உழைப்பையும் கொள்ளையடித்து, ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, திவாலாகிப் போன உண்மையை அண்மைக்காலமாக மறைத்த உண்மையும் அங்கு பட்டவர்த்தனமாக புலப்பட்டது. பகாசுர பகல் கொள்ளையனிடம் ஏமாந்திருந்ததை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டது அக்கூட்டம்.
பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட பணியாளர்கள், வெளிநாட்டு வேலைக்காகப் பணம் செலுத்தியிருந்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் என பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு காறி உமிழ்ந்தது. அவமானத்தில் கூனிக்குறுகி, அங்கிருந்து தப்பித்தால் போதுமென, தன் சாண்ட்ரோ கார் பக்கம் தாவி ஓட கதறிக் கொண்டிருந்தார்.
அங்கு சிதறிக்கிடந்த விலையுயர்ந்த பொருள்களில் அவரவர் கைக்கு கிடைத்தவற்றை வாரிச் சுருட்டிக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். பல பேருடைய வாயிலிருந்து வெடித்துக் கிளம்பிய வார்த்தைகள் நெருப்புத்துண்டுகள் போல் தாளாளரின் காதுகளைக்கொளுத்தி அவரது நெஞ்சை எரித்தது. தங்களது எதிர்காலமே தீய்ந்துபோனதாய் வெந்து புலம்பிய பலரது வேதனைத் தீ அங்கு பெரும் அனல் வெக்கையை மூட்டியிருந்தது. இதோ-இப்போது இந்த சாலை வெளியில் தகதகவென தகித்துக்கொண்டிருக்கும் இந்தக் கானல்நீர் போலவே அன்று அந்தக் கல்லூரி வளாகத்தில் கடைசியாகக் கண்ட கனல்காட்சிகள் பல உள்ளங்களின் வேதனை நெருப்பாய் கொதித்தது.

பாண்டி சசிக்குமார்,
சங்கரன்கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here