சென்னை கடற்கரையில் இருக்கும் இந்தக் கலைப் படைப்பைக் கண்டு வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடல் உரமும் உழைத்து இறுகிய மேனியும் கொண்ட நான்கு தொழிலாளர்கள் பெருங்கல் ஒன்றைப் புரட்டி நகர்த்தும் காட்சியைக் கல்லில் வடித்த சிற்பி வங்கத்தைச் சேர்ந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரி 1889-1975) உழைப்பாளர்கள் நாளாகக் கொண்டாடப்படும் மே தினத்தை நினைவுகூரும் வகையில் கர்ம வீரர் காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க ஓவியரும் சிற்பியுமான ராய் சௌத்ரி இதை வடிவமைத்தார். இந்தச் சிலையை உருவாக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். இதைப் போலவே டெல்லியிலும் கல்கத்தாவிலும் சிலைகள் நிறுவப்பட்டன. தனது கலை மேதைமைக்காக பத்மபூஷன் விருதும் பெற்றார் ராய் சௌத்ரி
நான்கு பேருடைய உடல் வலிமையையும் ஒரே கணத்தில் தசைநார்கள் புடைக்க வெளிப்படுத்தும் இந்தச் சிலையின் முன்னால் நின்று பார்ப்பவர்கள் மனதில் உழைப்பாளிகளின் மேல் அதுவரையிலும் இல்லாத ஒரு மரியாதையை ஏற்படுத்திவிடும் இந்த மகத்தான கலைப்படைப்பில் இயற்பியல் விதிகளின்படி தவறு இருக்கிறது என்று இன்னொரு மேதை சொன்ன போது வியப்பு ஏற்பட்டது.
அவரே படம் வரைந்து அதை விளக்கவும் செய்தார்(காணொலி).
நெம்புகோல் விதியின்படி கீழே ஒரு சிறிய கல்லை அடை கொடுத்து கடப்பாரைக் கம்பியால் பெரும் பாரத்தைத் தூக்க முயலும் போது, கம்பியை கீழ்நோக்கி அழுத்த வேண்டும். ஆனால் இந்தச் சிற்பத்தில் கம்பியைப் பிடித்திருப்பவர் மேலே உயர்த்த முயல்கிறார்!
இன்னுமொரு தவறையும் சுட்டிக் காட்டினார் அந்தப் பெரியவர்..
ஆனால் அழகியல் உணர்வோடு உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பில் இதையெல்லாம் பார்க்கக்கூடாது என்ற கருத்தும் உள்ளது.
எதுவாயினும் ராய் சௌத்ரியின் பெயரைச் சொல்லி இந்த அற்புதமான சிலை காலங்காலமாக பார்ப்பவர் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தி கடற்கரையில் கம்பீரமாக நிற்கிறது இந்தக் கலைப்படைப்பு!
இந்தத் தவறைச் சுட்டிக் காட்டிய தெரியவரும் ஒரு மேதைதான்! அவர் யாரென்று பார்ப்போம்.
-மா. பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்