உழவர் தின வாழ்த்துக்கள்

0
53

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ …

அது சரி…. மற்றவரெல்லாம் யாராம்?

‘அவர்(உழவர்) பின்னே தொழுதுண்டு பின் செல்பவர்!’

இந்த உலகத்தில் உழுது விதைத்து அறுவடை செய்து அவற்றைத் தனக்கான உணவாக்கி உண்டு வாழ்பவரையே வாழ்வார்’ என்கிறார் வள்ளுவர்!

அப்படியானால் மற்றவர்கள் நிலையென்ன?

அவர்கள் அனைவரும் உழவர்களைப் பின் தொடர்ந்து வணங்கி நிற்பவர்!
எதற்காம்?

தங்களுக்கான உணவுக்காகத்தான்!

உழவன் ஒருவனே தனக்கான உணவையும் மற்றவர்களுக்கான உணவையும் உருவாக்குகிறான்! ஆதலால் மற்றவர் எவராயினும் உணவுக்காக அவன் பின்னேதான் செல்ல வேண்டும்!

‘ஆயகலைகள் அறுபத்து நான்கோ அல்லது அதற்கும் மேலோ,
அரசனோ, ஆண்டியோ, ஆசானோ எவராயினும் உழவனுக்கும் அவன் செய்யும் உழவுத் தொழிலுக்கும் பின்னால்தானப்பா ‘
என்று அடித்துச் சொல்லிவிட்டார் வள்ளுவப் பேராசான்!

மகாகவி பாரதியார், உழவை முதலில் வைத்து உலகில் உள்ள அனைத்துத் தொழில்களையும் அடுத்து வைத்து, உழவு ஓன்றிற்கே அனைத்தும் சமம் என்ற கருத்தில்,

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’
என்று
அறைகூவினார்!

‘உழு’ என்ற வேர்ச்சொல் தந்ததே உழைப்பு என்ற சொல்!

‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்!’

‘நாஞ்சில்’ என்றால் கலப்பை. இன்று கலப்பை என்பது காண இயலாததாகிவிட்டது!

‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை’
என்று திரையிசையும் இசைபட இசைக்கும்!

இப்படியாப்பட்ட உழவனுக்கு உற்றதுணையாக இருந்ததய்யா மாடு..

கறவைகளைத் தவிர காளைகளைக் காணோம்!

‘மாடு’ என்றால் ‘செல்வம்’ என்றே பொருள்!

‘மாடல்ல மற்றயவை!’

இன்று மாடென்பது ஒரு வசவுச் சொல்லாம்!_

இழந்ததைப் பெற முடியாத தொலைவுக்குப் பயணப்பட்டு விட்டது நமது வாழ்க்கை!

நினைத்து வணங்கவாவது செய்வோம்!

மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here