உலக யோகா தினம் ஜூன் 21.

0
14

உலக யோகா தினம்  ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை ‘பன்னாட்டு யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா சபை அறிவித்துள்ளது.

முதல்முறையாக 2015, ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.

யோகாவின் நன்மைகள்….

யோகா கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் கடைபிடித்த யோகா கலையை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்….

யோகா ஆசனம் பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். அதேபோல நோய்கள் வராமல் தடுக்கவும் யோகா கலை அவசியம். யோகா கலையை முறையாக பின்பற்றுவதால் நமக்கு தொல்லை கொடுக்கும் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும்.

யோகா செய்வதனால் கிடைக்கும் பலன்களை முழுமையாக பெற தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். முறையாக செய்தால் மட்டுமே நமக்கு பலன்கள் கிடைக்கும்.

இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வராமல் தவிர்க்கலாம். தினமும் யோகா செய்வனால் ரத்தஓட்டத்தை சீராகும், எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும்
யோகப் பயிற்சி உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

யோகா செய்வதனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.

மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

நாமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேண யோகா செய்து உடலை திடமாக்குவோம்.

பிராணாயாமமும் மூச்சுப்பயிற்சியும்

கொரோனா வைரஸ் பாதிப்பு, குறிப்பாக சுவாசப் பிரச்னைகளில்தான் பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு பிராணாயாமமும் மூச்சுப்பயிற்சியும் சிறப்பான தீர்வளிப்பதுடன் பெரிய அளவில் உடலுக்கும் மனதுக்கும் சக்தி தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உடல் மனம் இரண்டையும் ஒன்று சேர்ப்பது யோகா.

கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமே அச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமா என்றே எல்லோரும் யோசிப்போம்.

யோகா செய்வதன்மூலம் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூழலில் எத்தகைய நோயிலிருந்தும் நாம் மீண்டுவர முடியும். குறிப்பாக கொரோனா பாதிப்பிலிருந்து வெளியே வர முடியும். நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.

வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழலில் உடல் ஆரோக்கியத்தை எப்படி மேன்மைப்படுத்தலாம் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்தக் கொரோனா. அதன்படி கொரோனா மட்டுமல்ல வேறு எத்தகைய நோய்களும் நம்மை பாதிக்காமலிருக்க யோகா உதவும்.

மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம்

மூச்சுப்பயிற்சி, தியானம் உள்ளிட்ட சில பயிற்சிகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பிராமரி பிராணாயாமம் நல்ல பலன் தரும். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்னை உள்ளவர்கள் சுவாச பிரச்னை இல்லாதவர்கள் என அனைவரும் இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

பிராமரி பிராணாயாமம் மூக்குத்துவாரங்களின் வழியாக காற்றை உள்ளிழுத்து மூச்சை வெளியே விடும்போது ஆள்காட்டி விரலால் காதுகளை மூடிக்கொண்டு `ம்… ம்ம்ம்…’ என்று குளவியின் ரீங்காரம் போன்று சத்தம் எழுப்ப வேண்டும்.

இந்த பிராமரி பிராணாயாமம் செய்வதால் என்ன பலன் என்று American journal of respiratory and critical care medicine ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மூக்குத்துவாரத்தில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை அதிகரிப்பதாக கூறியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த நைட்ரிக் ஆக்ஸைடின் பங்கு அதிகம். மேலும், பொதுவாக இந்த நைட்ரிக் ஆக்ஸைடு என்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

அதேநேரத்தில் வைரஸ், பாக்டீரியா என எந்தவொரு கிருமிகள் நம் உடலின் உள்ளே புகுந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை நைட்ரிக்
ஆக்ஸைடுக்கு உண்டு.

மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுப்பதன்மூலமே இந்த நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும். ஆனால், நம்மில் பலர் வாய் வழியாக மூச்சை உள்ளே இழுக்கும் பழக்கமுடையவர்களாக இருக்கிறோம்.

அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் வாய் வழியாக மூச்சை உள்ளே இழுப்பார்கள். எனது நேரடி அனுபவத்தில் கொரோனா நோயாளிகளை வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடும்படி சொன்னேன். அப்படி செய்ததில் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு அதிகரித்து இயல்புநிலைக்குத் திரும்பினார்கள்.

பொதுவாக ரத்த நாளங்களில் ஆக்சிஜன் அளவு 98 முதல் 99 வரை இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதித்த பல நோயாளிகளுக்கு 90-க்கும் குறைவாகவே ஆக்சிஜன் அளவு இருக்கிறது. அதனால் அவர்களை வென்டிலேட்டரில் வைக்க வேண்டிய சூழல்.

வாய் வழியாக சுவாசிப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவாகும். இத்தகைய சூழலில் வாய் வழியாக சுவாசிக்கும் பலரை மூக்கு வழியாக சுவாசிக்கச் சொன்னதில் ஆக்சிஜனின் அளவு அதிகரித்தது. அப்போது அவர்களுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரை எடுத்துவிட்டு என்னுடன் பேசுமளவுக்கு நலம்பெற்றார்கள்.

வாய் வழியாக மூச்சு விடுவதால் ரத்த அழுத்தம் அதிகமாவதுடன் தூக்கம் கெடும். இதய நோய், ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படும். எனவே, கொரோனா நோயாளிகள் மூக்கு வழியாக சுவாசித்தால் நிச்சயம் பல்வேறு பிரச்னைகளிலிருந்து மீளலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது வயிறு வெளியே தள்ள வேண்டும்.

அதுபோல் மூச்சை வெளியே விடும்போது வயிற்றை உள்ளே இழுக்க வேண்டும் என்ற சரியாக மூச்சுவிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்தேன். இப்படிச் செய்ததில் ஐந்தே நாட்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பும் நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தேன். யோக நித்ரா என்ற மூச்சுப்பயிற்சியையும் செய்து கொடுத்தேன். அப்படிச் செய்ததில் நல்ல பலன் கிடைத்தது.

மிக சாதாரணமாக மூச்சுப்பயிற்சி செய்தால் செல் அணுக்களில் உள்ள ஸ்ட்ரெஸ் நச்சுக்கள் வெளியேறும். மன அழுத்தத்துக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேகஸ் என்ற பெரிய நரம்பு இதயத்துடிப்பு, செரிமான சக்தி நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பிராணாயாமம், தியானம் போன்றவை வேகஸ்(Vagus) நரம்பின் அதிகப்படியான செயல்பாட்டை கட்டுக்குள் வைத்து இயல்பாக செயல்படத் தூண்டுகிறது. இதன்மூலம் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க மிக எளிதான சில மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை நன்றாக உள்ளிழுக்கும்போது கைகளை நன்றாக விரிக்க வேண்டும். அதன்பிறகு மூச்சை வெளிவிடும்போது கைகளை நெஞ்சுக்கு அருகே கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை இயற்கை மருத்துவ முறையில் உப்பு நீரால் வாய் கொப்பளிக்கச் சொல்வதுடன் முகத்துக்கு ஆவி பிடிக்க வலியுறுத்துகிறோம். அரோமா ஆயில் எனப்படும் யூகலிப்டஸ் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில், லெமன்கிராஸ் ஆயில் போன்றவற்றில் சில துளிகளை ஒரு துணியில் நனைத்து நாள் முழுவதும் அவர்கள் முகர்ந்து பார்ப்பதால் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருக்கும் சளி இளகியது. இறுக்கமான சூழல் விலகி இயல்பானார்கள். இதனுடன் சூரியக்குளியல் செய்யவும் வலியுறுத்துகிறோம்.

திருத்தணி, அரியலூர், வேலூர்(வாலாஜா) போன்ற தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சூரிய குளியல்களுடன், கூடிய யோகா பயிற்சியும், அக்குபங்சர் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சை ெகாடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்க உதவுகிறது இப்படிப்பட்ட பயிற்சிளை ெகாேரானா
நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

எந்த யோகா… என்ன பலன்?!

மூச்சுப்பயிற்சி, தியானம், பிராமரி பிராணாயாமம் தவிர மற்ற யோகா பயிற்சிகள் எடுத்துக்கொள்வதால் என்ன பயன் என்று பார்ப்போம்…

* தாடாசனம் – உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

* த்ரியக்க தாடாசனம், கட்டி சக்ராசனம் – இ்ந்த இரண்டும் நம் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும்.

* உட்கட்டாசனம் – நாற்காலி போன்ற இந்த ஆசனம் நம் தசைகளை வலிமைப்படுத்தி நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (அ) நாடி சுத்தி பிராணாயாமம் – நம் நாடிகளை சுத்திகரித்து செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும்

உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் யோகவை தங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே பயிற்சி செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களும் கூட மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாவை பின்பற்ற சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஏதேனும் சம்பவங்கள் உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கினால் அதை யோகா பயிற்சி செய்வதின் மூலமாக நாம் குணப்படுத்தலாம்.

மன பதட்டத்தை கட்டுப்படுத்தும்

எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை நினைத்து அல்லது உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுவதால் ஏற்படுவதே மனப்பதட்டம். இதைப் போக்குவதற்கு நாம் யோகாவை சரியாக பயன்படுத்த வேண்டும். யோகா உங்கள் மனதில் உள்ள அனைத்து பிரச்சினையையும் தீர்க்க உதவியாக இருக்கிறது என்று ஏராளமான ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் உஷ்ணத்தை குறைக்கும்

கோடைக் காலங்களில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கும் மற்றும் அதீத உழைப்பினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் நாம் யோகாவை தினமும் காலையில் பயிற்சி செய்ய வேண்டும். நாம் எப்படி நம் உடல் உஷ்ணத்தை சமமாக வைத்துக் கொள்கிறோமோ அப்பொழுது தான் நம்முடைய ஆரோக்கியமும் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் உடலையும் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள யோகா பயிற்சி மிகவும் அவசியம்.

இதயத்திற்கு உதவும்

உங்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சரியாக செலுத்த யோகா பயிற்சி உதவுகிறது. அதை தவிர்த்து இதயத்தில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும், அதன் உறுதித் தன்மையை அதிகரிக்க யோகா பயன்படுகிறது. இதயத்தில் உண்டாகும் எல்லா பிரச்சினையும் தீர்க்க யோகா அதிகமாக உதவுகிறது என பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக அதன் வீரியம் குறைந்து அதன் தாக்கம் தரத்தை குறைக்கின்றது.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரமாகவும் மற்றும் கௌரவமாகவும் வாழ வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் ஆரோக்யமாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் அதில் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மன பிரச்சனை அனைத்தும் தீர்ந்து எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள், இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உங்கள் அடுத்த தலைமுறைகள் உங்களை முன்னோடியாக பார்ப்பார்கள்.

கவலையை குறைக்கும்

எதிலும் நோக்கமில்லாமல் எந்நேரமும் கவலையாக இருப்பவர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா இயற்கையாகவே உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை வலுவாக்குகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செயல்பட்டு உங்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் எந்த கவலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ உதவுகிறது.

தூக்கப் பிரச்சனையை தீர்க்கும்

இரவில் தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது நள்ளிரவில் முழிப்பு வருபவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தாலே இரவில் உண்டாகும் தூக்கப் பிரச்சினை முழுமையாகத் தீரும். அது மட்டுமல்லாமல் உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனையையும் வலுப்படுத்தும்.

சுவாசப் பிரச்சினை மற்றும் மயக்கத்தை தடுக்கும்

ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்வதன் மூலமாக அந்த பிரச்சனையை தாக்கத்தை குறைக்க முடியும். அதை தவிர்த்து தொடர்ந்து யோகா செய்து வந்தால் ஆஸ்துமா போன்ற பிரச்சினை முழுமையாக தீரும். அதேபோல் எதற்கெடுத்தாலும் தலைசுற்றல், மயக்கம் போன்றவைகள் உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை சமநிலையில் வைத்து உங்கள் எண்ணங்களை ஒழுங்காக பார்த்துக் கொள்ளும்.

இதை தவிர்த்து ஏராளமான அறிவியல்பூர்வ நன்மைகள் யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக நிகழ்கிறது. எனவே உங்கள் உடல் மற்றும் உள்ளத்தை எப்போதும் வலுவாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினமும் சிறிது நேரம் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் உடல்வாகு மற்றும் வயதிற்கு ஏற்ற யோகா பயிற்சியை பற்றி சிறந்த வல்லுநர்களுடன் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here