உலக மக்கள் தொகை நாள் ஜூலை 11 . World Population Day July 11.

0
69

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

2009 தொனிப்பொருள்

“பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு” என்பது 2009 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA) அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகுமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது.” என்று குறிப்பிட்டார்.

உலக மக்கள் தொகை அதிகரிப்பு


உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான டி. ஆர். மால்தஸ், தனது ‘மால்தஸ்சின் மக்கள் தொகைக் கோட்பாட்டில்’ அதிகரிக்கின்ற மக்கள் பெருக்கத்தினால் மக்கள் உணவின்றி அவதிப்படுவர் என்றார். அன்று அவரால் வெளியிடப்பட்ட கருத்து, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழ்நிலையில் உலக நாடுகள் பலவற்றால் நினைவுகூரப்படுகின்றது.

மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம்.

மக்கள்தொகை செறிவைத் தவிர்த்தல்
எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here