உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19. (World photograph day)

0
95

உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.

லூயிஸ் டாகுரே 

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “”ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

முதல் புகைப்படம்

1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.

புகைப்பட விருதுகள்

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு “வேர்ல்டு பிரஸ் போட்டோ’ ,”டைம்’ இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்மைல் ப்ளீஸ்… 

ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே

சிறந்த நிழல் படம்…

காலம் தின்ற

கண்ணாடிக்குள் கரையான் அரித்த

அட்டையில்

ஒட்டியிருக்கும்

என் அம்மாவின்

சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்

1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.அனைத்து புகைப்படகலைஞர் களுக்கு மகிழ்ச்சி எப்எமின் உலக புகைப்பட தின வாழ்த்துக்கள்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here