உலக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிறு.

0
21

பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் இருந்து சந்தோஷமும், பெருமையும் தருபவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை. ‘நான் பட்ட கஷ்டம்’, என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. இத்தகைய சிறப்பு மிக்க தந்தையை வாழ்த்த இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடும் சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான், தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார். பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தனது பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே தன் குழந்தைகளுக்காக ராத்தூக்கம், பகல் தூக்கம் இன்றி பல தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்களை நாம் போற்ற வேண்டும்.

இன்றைய அவசர உலகில் நாம், நம் தந்தையருக்கு தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்ற கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற்பணியாகும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல… என்றுமே தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதில் இருத்திக் கொள்வோம். இந்நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு வாழ்த்துவோம்! வணங்குவோம்!


உலக தந்தையர் தினம் ” ( ஜூன் 20-ம் தேதி )
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!
வயிறோடு விளையாடும் கருவுடன்,
மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை.
தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான்.
ஆனால் ?
தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது.
மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்… தரணியெல்லாம் பேசும்.
மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து,
வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்.
எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்.
தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? “விடு… விடு…’ என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம், இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம்.
ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட… நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட… பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்… ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.
வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.
அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார்.
பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது. குடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

‘அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக்காட்டியிருப்பார்.

ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.

இருந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையைவிட, அன்பை பொழியும் தாயைத்தான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகம் பிடிக்கிறது.

உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், ‘தந்தையர் தினம்’ என்பது 1910–ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது.

அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார்.

அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர கவர்னர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில், ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமையே  ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தங்களது தந்தையை கவுரவித்து பரிசுகளை வழங்க, தமிழகத்தில் உள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.

சென்னையில் உள்ள வாழ்த்து அட்டை கடைகளில், தந்தையர் தினத்திற்கு என்றே பிரத்யேக வாழ்த்து அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, தந்தைக்கு வாழ்த்து மடல் போன்று வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். சென்னையை போன்ற பெரு நகரங்களில் குடும்பத்துடன் இருந்தாலும், காலையில் குழந்தை கண்விழிக்கும் போது வீட்டை விட்டு வேலைக்கு புறப்படும் தந்தைமார்கள், இரவு குழந்தை தூங்கும் நேரத்தில் தான் வீடு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் உடனான உறவை வேலைப்பளு பிரிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் தனது சிறு வயது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லிவிட்டு பல தந்தைமார்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அந்த குழந்தையோ, பொம்மைக்கு பதிலாக தனது தந்தையே, அருகில் இருந்து விளையாட மாட்டாரா? என்று ஏங்குகிறார்கள். பொருளாதார தேவை அந்த அளவுக்கு குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுகிறது. இருந்தாலும், தந்தை மீதான பாசம் அந்த குழந்தைகளுக்கு குறைந்து போய்விடுவதில்லை.

சிறு வயதில், தாய்–தந்தையின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய்–தந்தைக்கு அவர்கள் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here