உலக சினிமா…! – ஒரு சின்ன வரலாறு!

0
75

மனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது சினிமா எனலாம். நல்ல திரைப்படங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியலை காட்டியது. அன்பைப் போதித்தது.

ஒவ்வொரு காட்சியும் முழுமையடைந்து அது பிறவற்றுடன் இணையும்போது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. பொழுதுபோக்கிற்காக பார்த்தாலும் அதில் கூறும் கருத்தை யோசிக்கிறான்.

அவ்வாறான சினிமாக்களின் வரலாறும் உலகளவில் கவனம் பெற்ற திரைப்படங்களும் சில..

#முதல் திரைப்படம்

பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.

அதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது

தாதா சாகேப் ஃபால்கே 1913-ல் தயாரித்த ராஜா அரிச்சந்திராவை கிராமம் கிராமமாக மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றாராம். அதற்கு அவர் கொடுத்த விளம்பரமாக..

`57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி.. ஒரு திரைப்படத்தின் நீளம் 2000 மைல்கள்.. எல்லாம் 3 அணாவுக்கு மட்டுமே’ என விளம்பரப்படுத்தினாராம்.

அக்காலத்தில் இது அதிசயமாய் பார்க்கப்பட்டது.

#ஆவணப்படம்

சினிமா குறித்து பேசும்போது நினைவுகூர வேண்டியவர் ஏ.கருப்பன் செட்டியார் எனும் ஏ.கே செட்டியார். புகைப்படக்கலையை ஜப்பானிலும் திரைப்பட தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பயின்றவர்.1937-ல் காந்தி குறித்து படம் இயக்க ஆரம்பித்து 1940-ல் முடித்துள்ளார். 50,000 அடி பிலிம் வாங்கி அதை 12,000 அடியில் சுருக்கி இரண்டரை மணி நேரப்படமாக கொண்டு வந்தார்.

முதல் ஆண்டு முழுவதும் தேடிச் சேகரித்ததில் திருப்தி இல்லாமல் ஐரோப்பாவுக்குப் பயணமானார்.

4 கண்டங்களில் லட்சம் மைல் பிரயாணம் செய்துள்ளார். உலகம் முழுமையிலும் 30 வருடங்களாக ஏறக்குறைய 100 கேமராக்கள் எடுத்த சேகரிப்பாக காந்தி குறித்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#ரஷ்யா

இன்றும் உலகத்திரைப்பட விழாவில் ஒரு பாடமாய் இருப்பவை ரஷ்ய படங்கள். ரஷ்ய புரட்சியை இன்றளவும் மக்கள் பார்க்கும் வகையில் இருக்கும் அக்டோபர் படமாக இருக்கிறது. லூமியர் சகோதர்கள் இந்தியா போலவே ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் திரையிட்டதுதான் ரஷ்ய திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி. புரட்சிக்குப்பின் திரைப்படப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 1930-ல் அலெக்சாண்டர் டெவ்ஷேங்கோ எடுத்த நிலம் எனும் படத்தில் ஒரு டிராக்டர் வயலில் நின்றுவிடும். ரேடியேட்டரில் ஒவ்வொரு விவசாயியும் சிறுநீர் பெய்து நிரப்புவார்கள். இதுபோன்ற காட்சிகள் அமைந்த மெளனப்படம் அக்காலத்தில் பல அதிர்வுகளை உருவாக்கியது. கார்க்கியின் நாவலான மதர் எனும் படம் 1926-ல் வெளியானது. திறம்பட புரட்சி கருத்துகளுடன் இயக்கியிருப்பார் ஐ வி புடோவ்கின்.

மாண்டேஜ் உத்தியின் தந்தை என புகழப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் Battleship potemkin போன்ற ஜாம்பவான்கள் ரஷ்ய திரைக்கலைக்கு வலு சேர்த்தனர். மேலும் தி ரிடர்ன், குட் பை லெனின் எனும் ஜெர்மானிய படமும் குறிப்பிடத்தக்கது.

#இரானிய சினிமா

இன்றளவும் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சக்தியாக இரானிய படங்கள் விளங்குகின்றன. பொழுதுபோக்கிற்காக படம் எடுக்காமல் வாழ்வியலையும் படைக்கலாம் என படம் எடுத்தார்கள். மஜித் மஜிதி இயக்கிய children of heaven படம்தான் இரானிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம். கடைசி காட்சியில் கைதட்டாத ரசிகர்களே இருக்க முடியாது.

mohsen makhmalbaf இயக்கிய தி சைக்கிளிஸ்ட் படம் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம். குடும்ப சூழ்நிலையால் ஏழுநாள் சைக்கிள் ஓட்டும் நஸிம்.. இறுதிநாளில் ஒவ்வொரு சுற்றாக முடியும்போது வறுமை இன்னும் எனக்கு முடியவில்லை என நஸிம் சுற்றிக்கொண்டே இருக்கிறான். ஒரு எளியோனின் வாழ்வை திரையில் காட்டிய கண்ணாடி. இதுதவிர சிறுவர்களை மையப்படுத்தி Homework, One problem two solutions, where is my friend home, colour of paradise, The runner, white baloon,The day i became a woman போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

#ஜப்பானிய சினிமா

கதாநாயகனை காலிருந்து காட்டுவது, ஒரு வில்லன் வரும்போது அனைத்து வீடுகளின் ஜன்னல்களை மூடுவது என பல இயக்குநர்களின் வழிகாட்டியாக இருந்தவர் அகிரா குரோசவா. ரஷோமான் எனும் படம் ஒரு கொலை நடப்பதை பல்வேறு தரப்பிலிருந்து கதை சொல்லப்படும் புதிய யுத்தியைக் கையாண்டார். பல இயக்குநர்களுக்கு திரைக்கதைக்கு பாலபாடமாய் இருப்பதாகச் சொல்லலாம். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படம் ஏழு சாமுராய்.

ஏழு சாமுராய் வீரர்களுடன் கிராமத்தின் அறுவடையை திருட வரும் 40 திருடர்களிடமிருந்து காப்பாற்றப் போராடுவதாய் அமைந்திருக்கும்.

யசுஜிரோ ஒசு இயக்கி 1953-ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையின் வலியை கூறும் படமாக அமைந்தது.

#கொரிய திரைப்படங்கள்

1949-ல் தி வுமன்ஸ் டைரி எனும் வண்ணத்திரைப்படம் உருவானது. பின்பு பாட்டிக்கும் பேரனுக்குமான அன்பை போதிக்கும் படம் The way home. விடுமுறையில் கிராமத்தில் வந்து தங்கும் பேரன் பாட்டியின் அன்பில் உருக இறுதியில் இரு வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறான்.

உடல் நலமில்லையெனில் முதல் வார்த்தையும், பார்க்க விரும்பினால் இரண்டாவதையும் எழுதி அனுப்புமாறு கூறி பிரியும்போது நம் கண்களும் குளமாகும். தற்போதைய காலகட்டத்தில் கிம் டு கிக், கிம் ஜி வுன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

#சாப்ளின்

இன்னும் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் புதிதாய் இருக்கும் இவரின் படங்கள். 1953-ல் Tramp படத்தில்தான் தற்போது இருப்பதுபோல தோற்றம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.1931-ல் வந்த city lights படம் நடித்து இசையமைத்து தயாரித்த படம். கண் தெரியாத பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையிலான உணர்வை விளக்கியிருப்பார். இவரின் நடிப்பில் மற்றுமொரு காவியம் The great dictator. ஹிட்லரின் குணாதிசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார். மற்றுமொரு முடிதிருத்தும் யூதனாக எளிய மக்கள் எவ்வாறு துயரப்படுவதாக இரு கதாபாத்திரங்களிலும் உடல் மொழி அத்தனையிலும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார். இதுதவிர இவரின் modern times, the circus, the gold rush, the adventurer, The bank உள்ளிட்ட பல படங்கள் பார்க்க வேண்டியவை.

#தமிழ் சினிமா

இந்திய அளவில் மிருணாள் சென், சத்யஜித் ரே எனும் ஜாம்பவான்கள் இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்திச் சென்றனர். தமிழில் சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கிய பங்களிப்பு கொடுத்தன திரைப்படங்கள்.

1931-ல் பேசும்படமான காளிதாஸ் வந்தது.

இப்படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ராட்டினம் குறித்தும் பாடல் இடம் பெற்றது. `ராட்டினமாம் காந்தி கை பானமாம்’ எனும் பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி டி.பி. ராஜலட்சுமி பாடினார். இதுபோல் 1933-ல் வெளியான வள்ளி திருமணம் படத்தில் `வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளாக விரட்டி அடித்தாலும் வாரீகளா’ என வெள்ளையர்களை குறித்த பாடல் பிரசித்தி பெற்றது. சென்சார் துறைகளை ஏமாற்றி புத்திசாலித்தனமாக விடுதலை உணர்வை திரையில் காட்டினர்.

வக்கீலாக இருந்து பின் திரை உலகில் நுழைந்த கே.சுப்பிரமணியம் தியாக பூமி எனும் கல்கியின் நாவலை இயக்கினார். தேச சேவை குறித்து துணிவுடன் வந்த திரைப்படம்.

ஹீரோக்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு கழுதையை ஹீரோவாக போட்டு ஜான் ஆப்ரஹாம் `அக்ரஹாரத்தில் கழுதை’ எனும் படத்தை இயக்கியது வியப்பாய் பேசப்பட்டது. 70-களின் சாதியத்தை திரையில் காட்டியிருப்பார். 70-களில் பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான் போன்றவை யதார்த்த சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தின.

ஸ்ரீதரின் முக்கோணக் காதல் கதைகள், பாலசந்தரின் புதுமை, பாரதிராஜாவின் கிராமத்து மனிதர்கள், மகேந்திரனின் மனிதர்கள், ஒளியால் உயிர்ப்பூட்டிய பாலுமகேந்திரா, நவீன முகமாய் மணிரத்னம் போன்றவர்கள் வகுத்த ராஜபாட்டையில் இன்று இயக்குநர்கள் பவனி வருகிறார்கள்.

`சினிமா என்பது ஒரு கூர்வாள். அதை சவரக்கத்தி போல் பயன்படுத்தக் கூடாது’ என்பார் சத்யஜித்ரே.

இதை ஒவ்வொரு திரைக்கலைஞனும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வாசகங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here