உலகின் கொலைகார உயிரினம் எதுவென உங்களை கேட்டால் எதை சொல்லுவீர்கள்? சுறா பாம்பு அல்லது சிங்கம் அதி பயங்கரமானது என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை சார்ந்து பதில்கள் மாறக்கூடியது தான். ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படுவோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கையில் மேற்கூறிய எதுவும் உலகின் மிக மோசமான கொலைகார விலங்கு அல்ல.
உலகின் 15 கொலைகார உயிரினங்களின் பட்டியல் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்வுயிரினங்களால் நடைபெறும் மனித உயிரிழப்புகளின் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
15) சுறா மீன்கள்..
உலகில் மிக கொடிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் சுறாவினால் அதிக மனித உயிரிழப்புகள் ஏற்படுவது இல்லை என்பதே உண்மை. 2014ம் ஆண்டு புள்ளி விவரப்படி, உலகில் மூவர் மட்டுமே சுறா மீன்களால் கொல்லப்பட்டுள்ளனர். அதுவே, 2015ம் ஆண்டில் 6 பேராக பதிவாகியுள்ளது.
14) ஓநாய்..
மனிதனை விட சமயோசிதமும், புத்திக்கூர்மையும் உள்ள வேட்டைக்காரனாக கருதப்படக்கூடியது ஓநாய். கடந்த 50 ஆண்டுகளில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் ஓநாய்களின் தாக்குதல்கள் தொடர்பாக குறைவான அளவே பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் 100 கணக்கான ஓநாய்களின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஓநாய்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. என்றபோதிலும், ஓநாய்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு என்பது ஆண்டுக்கு 10-ஆக உள்ளது.
13) சிங்கம்..
சிங்கங்களால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்பு என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக்கூடியது. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றின்படி, 1990ம் ஆண்டு முதல் தான்சானியாவில் மட்டும் 563 பேர் சிங்களால் உயிரிழந்துள்ளனர். அதாவது ஆண்டுக்கு 22 உயிரிழப்புகள்.
தான்சானியாவிற்கு வெளியே ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கக் கூடும். என்றபோதிலும், உலகளவிலான சராசரி குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் தெளிவாக இல்லை.
12) யானை..
யானைகளாலும் ஆண்டுதோறும் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2005ம் ஆண்டு நேஷனல் ஜியோகிரபிக் கட்டுரைப்படி, ஆண்டுதோறும் சுமார் 500 பேர் யானைகளின் தாக்குதல்களால் உயிரிழக்கின்றனர். ஏராளமான யானைகளும், தந்தங்களுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன என்பது வேறுகதை.
11) நீர்யானை..
ஆப்ரிக்காவின் அதிபயங்கர உயிரினங்களாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தவை நீர்யானைகள். மனிதர்களை கண்டால் மிகவும் மூர்க்கமாக நடந்துகொள்ளும் குணம் கொண்டவையாகவும் நீர்யானைகள் உள்ளன. குறிப்பாக, படகுகளில் பயணம் மேற்கொள்ளுபவர்கள் அதிக அளவில் நீர்யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
10) நாடாபுழு..
நான்கு வகை குடல்புழுக்களில் ஒன்றான நாடாபுழுக்கள் மனித உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது. எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 700 பேர் நாடாபுழு பாதிப்பால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
9) முதலை..
முதலைகளே ஆப்ரிக்காவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான உயிரினமாக தற்போது திகழ்கின்றன. ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலி கொள்ளுவதாக முதலைகள் திகழ்கின்றன.
8) உருண்டை புழு..
மனிதர்களில் உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உருண்டை புழு திகழ்கிறது. குடலில் வாழும் இத்தகைய புழுக்கள் புரத சத்தை விரும்பி சாப்பிடுவதால் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றன. ஆண்டுதோறும் 4,500 பேர் உருண்டை புழு பாதிப்புகளால் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
7 ) Tsetse fly..
Tsetse fly எனப்படும் ‘ஈ’ போன்ற ஒருவகை பூச்சியினம் தோற்றுவிக்கும் நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 10,000க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். ஒருவகையான தூக்கநோயை உருவாக்கக் கூடிய கிருமிகளை உடலுக்குள் இந்த வகை பூச்சிகள் செலுத்திவிடுகின்றன. இதனால், தலைவலி, காய்ச்சல், மூட்டுகளில் வலி, அரிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுவதுடன் மூளை நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
6 ) Kissing Bug..
Kissing Bug எனப்படும் பூச்சியினங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் ஆண்டுக்கு 12,000 பேர் உயிரிழப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. Chagas எனப்படக்கூடிய நோயினை பரப்பும் Kissing Bug அதன் மூலம் மனித உயிரிழப்புக்கு காரணமாகின்றன. மனிதர்களை முகத்தில் கடிக்கும் பண்பின் காரணமாக Kissing Bug என இந்த பூச்சியினங்கள் பெயர் பெற்றுள்ளன.
5) நன்னீர் நத்தைகள்..
நன்னீர் நத்தைகளை சாப்பிடுவதன் மூலம் பரவக்கூடிய ஒட்டுண்ணி புழுக்கள் schistosomiasis எனும் நோய்க்கு காரணமாகின்றன. இதன் மூலம், ஆண்டுதோறும் 20,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
4) நாய்கள்..
மனிதனுக்கு தோழமையாக கருதப்படும் நாய்கள், அதிக மனித உயிர்களை பலி கொள்ளும் உயிரினங்களின் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளன. வெறிநாய் கடியின் மூலம் பரவக்கூடிய ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 35,000க்கும் அதிமானோர் உயிரிழக்கின்றனர். நாய்கள் மூலமாகவே 99 விழுக்காடு ரேபிஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.
3) பாம்புகள்..
பாம்பு கடியின் உயிரிழப்பு எண்ணிக்கை நாம் நினைக்கக் கூடியது போல மிக அதிக அளவிலானதே. ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாம்பு கடிகளால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
2) மனிதன்..
மனித உயிர்களை அதிகம் பலி கொள்ளும் உயிரினங்களில் 2ம் இடம் மனிதனுக்கே கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின் படி, கொலைக் குற்றங்களால் ஆண்டுக்கு 4 லட்சத்து 37,000 பேர் உயிரிழக்கின்றனர்.
1) கொசு..
மனித உயிர்களை பலி கொள்வதில் முதலிடத்தில் உள்ள உயிரினம், நாம் கைகளாலேயே அடித்துக் கொல்லும் கொசு என்றால் ஆச்சரியமாக இல்லையா? சிறியதான கொசுவே அதிக மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது.
ஆண்டுதோறும் கொசுக்களால் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு போன்றவைகளால் 7 லட்சத்து 50,000 பேர் உயிரிழப்பதாக கணிக்கப்படுகிறது.