உயிர்த்தீ….

0
6

என் உணர்வின் ஆழம்வரை சென்று
கூப்பாடிட்டுச் செல்லும்
நின் காதல் சார்ந்த அகப்பரிமாணங்கள்
யாருமறியா ஒரு கணமதில்
சுயத்தையும் மீறி
மனதில் மலரென விரிகிறது…

நின் நியாபகங்களின்
செங்கம்பள விரிப்பினில்
விரும்பியே உருள்கிறேன் நான்…
உள்ளிருந்து நின் நினைவதை குரலுயர்த்தி பாடும்
பறவையின் குரலினை
அமுத ஊற்றென எண்ணி
இரசிக்கிறேன்…

தொட்டதும் பட்டென சுருங்கிடும்
தொட்டாற்சிணுங்கியென
மெய்யை தன் கூட்டுக்குள்
இழுத்துக்கொள்ளும்
ஓர் நத்தையென …
உயிரின் அந்தம் வரை பாயும்
உன் நினைவுகளில் சுருள்கிறேன்…

இதோ…
உன்னில் என்னை ஊற்றி
உன்னை வெல்லவே எத்தனிக்கையில்
உயிர்த்தீயொன்று
கொழுந்துவிட்டு எரிகிறதடா
உயிரின் ஆழம் வரை சென்று…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here