உனக்கென்னப்பா

0
129

ஒரே பள்ளியில் ஒன்றாக படித்த நான்கு  மாணவர்கள் தங்கம், கனகராஜ்,  வடிவேல், முத்து மீண்டும் சந்தித்தனர்.

ஒருவரையொருவர் பார்த்து கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். நால்வரும் நான்கு விதமான  தொழில்களில் பணிபுரிந்தனர்.

“ஏண்டா நம்ம நாலு பேருல முத்து தான் பெரிய படிப்பு. வெளியூர் போயிட்டான். மாசமானா சம்பளம் கவலை இல்லாம இருக்கான்” என்றான் தங்கம்.

“படிச்சதுல மட்டுமில்ல மரியாதையையும் அவனுக்கு தான்டா நம்ம வீட்லயே நம்மள குத்தி காட்டுறாங்க” என்றான் வடிவேலு.

“டேய் நான் சம்பளம் வாங்குறவன் ஆனா நீங்க எல்லாம் முதலாளி டா உங்க அனுபவம்தான் உங்க படிப்பு. என் நிலைமை இப்பிடியே தான் போகும் ஆனா நீங்க இன்னும் நல்லா வளர்ந்து பெரிய தொழிலதிபர் ஆவிங்கடா” என்றான் முத்து.

” நீ என்ன சொன்னாலும் சரி படிப்புங்கிறத திரும்ப படிக்க முடியாதே நாங்கெல்லாம் எட்டாவது தானே” என்றான் வடிவேலு.

இதனையெல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த கனகராஜ் சட்டென எழுந்து

” என்னடா அவன ரொம்ப உசத்தி உசத்தி பேசிகிட்டு இருக்கீங்க?? அவன விட நம்மை எந்த விதத்தில் குறைஞ்சிட்டோம்.
நீ ஆட்டோமொபைல்  வெச்சிருக்கே மெக்கானிக் வேலை பார்க்குறே. நீ சரி பண்ணாத வண்டியே இல்லை. நான் எலக்ட்ரிக்கல் கடை வெச்சிருக்கேன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கிறேன். நீ நகைக்கடை வெச்சிருக்க எவ்வளவு அழகான டிசைன்ல செய்வே எல்லாருமே அவனுக்கு சமமாகத் தான் இருக்கோம்”.

“அப்படி சொல்லுடா கனகா” என்றான் முத்து.

” இங்கே பாரு… நீ பேசாத என்னைக்காவது ஒரு நாளு ஊர்ல இருந்து இங்க வந்துட்டு என் இவங்க மனசுல தாழ்வுமனப்பான்மையை விதைக்குறியா???”

” டேய் நான் என்னடா சொன்னேன் உங்க தொழில்ல நீங்க தான்டா ராஜா நீங்க என்னைவிட வசதிலயும் பெரியவங்கடா”

” அதெல்லாம் இல்லை திறமைல யார் பெரியவங்கனு ஒரு போட்டி வச்சுக்குவோம். நீ வர்றியா. ”

” இங்க பாரு நான் உங்களை எந்த குறையும் சொல்லல நண்பர்கள் கூட போட்டி போடணும்னு ஆசையும் எனக்கு இல்லை. ஒருவேளை போட்டி போட்டு நீ ஜெயிச்சேனா அது உனக்கு சந்தோஷம் தரும் அப்படின்னா எனக்கும் அதான் சந்தோஷம்…. நான் ரெடி. ” என்றான் முத்து.

” டேய் நாம எத்தனை நாள் கழிச்சு இப்போ பார்த்திருக்கோம் இப்ப எதுக்குடா போட்டி அது இதுன்னு? என்ன போட்டினாலும் நான்  வரல சாமி” என்றான் தங்கம்.

” உனக்கு ஏற்கனவே உட்கார்ந்த இடத்தில்தான் பணம் வருது” என்றான் வடிவேலு.

” சரி நீ வரலனா போ. பந்தயம் இது தான் இந்த இடத்தில இருந்தே நம்ம திறமையை வச்சு நூறு ரூபாய் இப்போ சம்பாதிச்சு காட்டணும். அதெல்லாம் கூட வேணாம் 1 ரூபாய் சம்பாதிச்சு காமிக்கணும். ரெடியா? ”

” சரி. போட்டி நீ தானே ஆரம்பிச்சே நீயே ஸ்டார்ட் பண்ணு ” என்றான் முத்து.

“இதோ வர்றேன். அங்க ஒரு வீடு இருக்கு பாரு அங்கே போறேன் வாங்க… ”

காலிங்பெல் அடித்ததும் ஒரு நாய் ஓடி வந்து குரைத்தது. பின்னர் அரைக் கதவை திறந்த மாதிரி ஒரு ஆண் வந்து

” யாருப்பா அது என்ன வேணும்”.

“சார் போன் பண்ணிருந்தீங்களே லைட் ஏதோ எரியலனு. ”

“யாருப்பா நான் பண்ணலையே…. வீடு மாறி வந்துட்டே போல… ”

” இல்ல சார் ராமநாதன் சார் தான நீங்க…”

“வாசல்ல போர்ட் பார்க்கலயா. என் பேரு ராம சுப்பிரமணியன்”

“ஓ சாரி சார். அவர்தான் கால் பண்ணிருந்தாரு.  லைட் எரியல ராஜு நைட் டைம் வெளியே போக முடியலனு சொன்னாரு. சரி சார் மன்னிச்சுக்கோங்க நான் வர்றேன்” என்று கிளம்ப போனான்.

” தம்பி ஒரு நிமிசம்…….. நம்ம வீட்ல கூட மொட்டைமாடியில் மாடில ஒரு லைட் எரியல பார்க்கிறியா” என்றார்.

” ஓ தாரளமா சார். அந்த கேட்ட திறந்திட்டு மாடிக்குப் போய் பாரு” என்றார்.

உடனே பைக் அருகில் வந்து ஒரு பெட்டியை எடுத்து கொண்டு மாடிக்கு போய் சரி செய்ய தொடங்கினான்.

வேலையை முடித்து விட்டு கீழே வந்தவன். வேறு எதுவும் வேலை இருக்குதா சார் என்று கேட்டான்.  அவனை தோட்டம்போல் இருந்த இடத்திற்கு  அழைத்துச் சென்று மேலும் இரண்டு மூன்று வேலைகளை கொடுத்தார்.

வீட்டிலிருந்து வெளியே வந்தவன் தன் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து முத்துவிடம் காட்டி “இதே இடத்தில் இருந்து நூறு ரூபாய் சம்பாதித்து விட்டேன்” என்று சொன்னான்.

“வடிவேலு அடுத்து உன்னோட முறைதான்” என்றான் கனகராஜ்.

அவன் தன் வண்டியிலிருந்த ஒரு புது ஹெல்மெட் லாக்கரை கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த வேறு ஒரு வீட்டுக்கு சென்றான்.

காலிங்பெல் அடித்தவுடன், ஒருவர் வீட்டிற்குள்ளேயே இருந்து ஒரு குரல் யார் என்று கேட்டது.

வாசலில் பெயர் பலகையை பார்த்துருந்தவன் “கணேஷ் சார் வெளியே வாங்க” என்றான்.

“என்ன சார்  இப்போ  உடம்பு எப்படி இருக்கு அடி ஒண்ணும் பலமா இல்லையே”

” என்னப்பா சொல்றே யாரு நீ. யார் வேணும் உனக்கு”

“இல்ல சார் பின்னாடி தொங்கவிட்ருந்த ஹெல்மெட் சாஞ்சு ஏதோ வண்டில மாட்டி ஆக்ஸிடெண்ட்னு சொன்னீங்க.”

“அது நான் இல்லப்பா வேற யாரோ….”

“ஓ சாரி சார். ”

” ஆமா அந்த ஆக்ஸிடெண்ட் எப்படி ஆச்சு பா”

” அதான் சார் ஹெல்மெட் பின்னாடி மாட்டிட்டு போயிருக்காரு. அது காத்துக்கு கழண்டு விழுந்து பக்கத்துல வந்த வண்டில இடிச்சு அந்த வண்டி ஓட்டுனவன் இவர் வண்டி மேலே மோதி கீழே விழுந்ததா சொன்னாரு. அதான் ஹெல்மெட் லாக் கொண்டு வந்தேன் வீடு மாறிப் போச்சு சார்”.

“அப்படியா? எங்கே காட்டுங்க…. ” என்று கேட்டார்.

” இந்தாங்க சார் பாருங்க ”

” நான் எப்போதும் ஹெல்மெட் போட்டுக்குவேன் திடீர்னு யாராவது வந்தா அவங்களுக்கு ஒரு ஹெல்மெட் பின்னாடி வச்சிருப்பேன் அதுக்கு தான் கேட்டேன்”

“ரொம்ப ந‌ல்ல விஷயம் சார். பாருங்க இப்டி வச்சு இப்டி லாக் பண்ணிட்டா ஓகே ஆயிடும் சார்”

“ஓ சரி… இது எவ்ளோ ”

” 150 சார் நீங்க 130 ருபாய் குடுங்க போதும்”

“சரி இருங்க காசு எடுத்துட்டு வரேன்”

வெளியே வந்த வடிவேலு தன் பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை எடுத்து காண்பித்து” நான் சம்பாதிச்சது” என்று சொன்னான்.

” அடுத்து முத்து நீ தான் ”

அவனும் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்தான். அந்த வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

கனகராஜ் வடிவேலுவிடம்.,” ஏண்டா இவன் எப்படி அங்கே போய் பேசுவான். உங்க வீட்ல யாருக்கும் டியூசன் எடுக்கணுமா னு கேட்பானோ. அப்படி கேட்டா வேணாம்னு தான் சொல்லுவாங்க. ”

கொஞ்ச நேரத்தில் அவன் இவர்கள் மூவரையும் அழைத்தான்.

வீட்டினருகில் செல்ல “வாங்கடா…” என்று அழைத்துக் கொண்டே

“சார் இவங்க என் நண்பர்கள்”
என்று சொன்னவுடன்

அந்த மனிதர் கைகூப்பி மரியாதையுடன் மூவருக்கும் வணக்கம் சொன்னார்.

” வெளியிலேயே நிக்கிறீங்களே. வாங்க உள்ளே வாங்க”

உள்ளே சென்று அமர்ந்தவுடன் நால்வருக்கும் காபியும் பலகாரமும் வந்து முன்னால் அமர்ந்தது.

தனது மனைவி மருமகளை அழைத்து,

” இந்தம்மா இவர்தான் உன் வீட்டுக்காரனுக்கு காலேஜ் புரொபசர். எப்படியெல்லாமோ திரிஞ்சவனுக்கு நல்ல புத்தி சொல்லி படிக்க வச்சு இப்போ அவன் நல்ல வேலையில இருக்கிறான்னா அதுக்கு சார் தான் காரணம். நம்ம ஊர்ல நிறைய பேர் அவர் காலேஜ்ல தான் படிக்கிறாங்க”

மரியாதை நிமித்தமாகவும் ஒரு நன்றி கலந்த புன்னகை அந்த குடும்பத்தின் முகத்தில் தெரிந்தது.

” சரிங்க சார். நாங்க கிளம்புறோம் இங்கே பக்கமா ஒரு வேலையா வந்தேன் அப்படியே உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன்”

” சார் என் பையனோட  முதல் மாச சம்பளத்துல உங்களுக்கு ஒரு கிப்ட் கொடுக்கலாம்னு சொல்லிட்டு அந்த பணத்தை எடுத்து வச்சவன் இன்னும் அதை செலவு பண்ணாம வச்சிருக்கான். உங்கள நேர்ல பார்க்க வரணும்னு ரொம்ப ஆசையா இருந்தான் நீங்க வீடு மாறுனதுனால உங்களை சந்திக்க முடியலை. இன்னிக்கு நீங்களே வந்துட்டீங்க. உங்களுக்கு தேவையானதை உங்களுக்கு வாங்கி கொடுத்தா எங்களுக்கும் சந்தோசமா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து வருமாறு மனைவியிடம் சைகை செய்தார்.

” அதுல எவ்வளவு பணம் சார் இருக்கு”

” 30,000 சார்”

கனகராஜ் சற்று திரும்பி வடிவேலை பார்க்க வடிவேலும் அதே வியப்புடன் கனகராஜை பார்த்துக் கொண்டிருந்தான்.

” சார் ஒரு 1 ரூபாய் கொடுங்க சார்”

” சார் என்ன சார் 1 ரூபாய் கேட்குறீங்க இது எல்லாமே உங்களுக்குதான்”

“சார் முதல் சம்பளம் கடவுளுக்கும் குடும்பத்துக்கும் தான் சார். நீங்க ஒரு ரூபாய் கொடுங்க போதும்”

அவர் தயங்கிக் கொண்டே 1 ரூபாய் எடுத்து கொடுத்தார்.

“சரிங்க சார் நாங்க கிளம்புகிறோம். ”

” அடிக்கடி வரணும் சார்,வீட்டுக்கு”

“கண்டிப்பா வரேன்”

நால்வரும் வெளியே வந்தனர்.

” என்ன நண்பாஸ். உங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒண்ணு எனக்கு கிடைச்சிச்சா. அதான் அன்பும் மரியாதையும், அது என்னால உங்களுக்கும் கிடைச்சுதா அதான் படிப்போட மரியாதை”

தலைகுனிந்தவாறு கனகமும் வடிவேலுவும் நிற்க தங்கம் மட்டும் வேகமாக கைதட்டி  “சூப்பர் நண்பா”, என்று சொன்னான்.

” ஹே உடனே தலைய தொங்க போட்டா எப்படி??? உங்க மனசு புண்படணும்னு நான் இத சொல்லல…. போட்டி ஆச்சே இது.. சொல்லித்தானே ஆகணும்…. இங்க பாருங்க உங்க வேலையும் என் வேலையும் ஒன்னு தான் அதுக்கு பேரு சேவை.  நீங்க பார்க்கிற வேலையில தான் சேவைக்கட்டணம்னு பேரே இருக்கு………. என்ன ஒரு வித்தியாசம்….. நீங்க பண்ற சேவை அப்பவே பேசப்படும்…. என்னோட சேவை பத்தி பேச கொஞ்சம் நாள் ஆகும் ஏன் வருசம் கூட ஆகலாம்…. ”

” கல்வி மூலமா காசு வரும்னு நீங்க எதிர்பார்த்தீங்க பார்த்தீங்களா அதுதான் நண்பா தப்பு  அப்படி வந்தா அது வியாபாரம் அந்த எண்ணத்தை மாத்திக்கணும். உங்களோட அனுபவம் உங்களுக்கு படிப்பாச்சு…….. என்னோட படிப்பு இப்போ எனக்கு அனுபவங்களை கொடுத்துகிட்டு இருக்கு….. இதுல தாழ்வு மனப்பான்மையும் தப்பு.. மத்தவங்கள மட்டம் தட்டுறதும் தப்பு. இதை நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும் இல்லனா………… இந்தா நீ சொன்ன சவாலுக்கு  நான் சம்பாதிச்ச ஒரு ரூபாய் ” என்று பாக்கெட்டில் இருந்து எடுத்து அவன் கையில் வைத்துவிட்டு தன் பைக்கை நோக்கி சென்று அமர்ந்து

” அப்புறம் மாப்பிள்ளை…. இன்னொன்னு….. சத்தியமா அந்த வீட்ல அவர் இருப்பாருனு நான் எதிர்பார்க்கல….. சினிமா போல தற்செயலா அமைஞ்சிடுச்சு….. ஒரு வேளை வேற யாராவது வந்து இருந்தா நான் வேற மாதிரி தான் யோசிச்சிருக்கணும்……”

“மச்சான் சாரிடா” என்றார்கள் வடிவேலும், கனகராஜூம்

” டேய் வெண்ணெய்களா சாரி கேட்குற அளவுக்கெல்லாம் நான் கருத்து சொல்லல. இது ஒரு சப்பை மேட்டர்……. சரியா… சாயங்காலம் படத்துக்கு போலாம்… தங்கம் ஏசி டிக்கெட்டா புக் பண்ணிடுடா……. ” என்று சொல்லிவிட்டு வண்டியை திருப்பி கிளம்பினான்.

கல்வியின் லாபம் நமக்கு கிடைக்கும் பெருமை

மீண்டும் சந்திப்போம்…

– ம. வினு மணிகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here