இறைவன்
முன் நின்று
இளமை திரும்பிட
இன்னொரு வாய்ப்பைக்
கொடு ஒரு
திங்களேனும் போதுமென்கிறேன்.
ஏனென்று
இறைவன் கேட்கிறான்
முப்பாட்டன்
கடனோடு மூத்தவனாய்ப் பிறந்தேன்
கால் வயிறு உணவில்
ஆறு பிள்ளைகள் நாங்கள்
கடலை விதைத்தால்
காலணா
பந்தியில் தண்ணீர் வைத்தால்
பத்துப் பைசா யென
பள்ளி வாழ்க்கை பாழானது
கல்வி களவு போனது
கடல் கடந்தால்
கடனடைக்கலாமென
அன்னிய தேசம் போனேன்.
காணி மீட்டேன்
கடைசித் தங்கை மணம் செய்து
என் திருமணம் ஆனது
பிள்ளைகள் மூன்றானது
இந்த முறை மட்டும்
என்று
பெற்றோர் நோய் தீர்க்க
திருமணம் செய்ய
வீடு கட்ட
பிள்ளைகள் படிக்க
பிறகு அவர்கள் திருமணம் என
அடுக்கடுக்காகக் கடமைகள்
எல்லாம் முடிந்து
இல்லம் வந்தேன்
எப்படி வாழ்வதெனத்
தெரியவில்லை.
அழும் என்
பிள்ளைகளை நெஞ்சில்
அணைத்தபடி
உறங்க வேண்டும்
பள்ளி அழைத்து வந்து
பாசத்தோடு கதைகள் பேசி
திருவிழா, பண்டிகை
திருமணம், துக்கம்
என
உறவுகள் வீடுகளில்
உடனிருந்து
அம்மாவை அழைத்து போய்
வைத்தியம் செய்து
ஆசையாய்ப் போய்
அடுக்களையில் அவளிடம்
காதல் பேசி
நிற்க! என இறைவன்
கையமர்த்தி
யாரும் வரவில்லை என்று
உன் கதை கேட்டேன்.
உறக்கம் வருகிறது
ஒன்றும் இனி
வழியில்லை போய் வா!”
என்கிறார்.
பையில் இருந்த
பனம் நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறது
-சிவபுரி.சு.சுசிலா.