இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம்..!

0
76

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பாதிப்பில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்துக்கு சென்றுள்ளது.

அன்லாக் 2.0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 4 கட்டங்களாக தொடர்ந்து ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த 5-வது கட்ட ஊரடங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி “ ‘அன்லாக் 2.0’ (தளர்வுகளுடன் கூடிய 2-ம் கட்ட ஊரடங்கு) தொடங்கிவிட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மழைக்காலம் தொடங்கிவிட்டதால் முன்பை அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தநிலையில் இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் புதிதாக 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.07 சதவீதம் பேர் அதாவது, 3 லட்சத்து 34 ஆயிரத்து 822 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மீண்டும் 2-வது இடத்தில் தமிழகம்

குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 5,200 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மீண்டும் 2-வது இடத்துக்கு தமிழகம் சென்றுள்ளது.

கடந்த மே மாதம் 19-ந் தேதியில் இருந்து கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வந்தது. இதற்கிடையே தேசிய தலைநகர் டெல்லியில் திடீரென கொரோனா வேகமாக பரவ தொடங்கியது. இதனால் கடந்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி டெல்லி 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த நிலையில் தற்போது டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் தமிழகம் அதே இடத்துக்கு சென்றுள்ளது.

புதிதாக பாதிப்புக்கு உள்ளான 3,943 பேருடன் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 85 ஆயிரத்து 161 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் குறைவு

குஜராத்தில் 31 ஆயிரத்து 938 பேரும், உத்தரபிரதேசத்தில் 22 ஆயிரத்து 828 பேரும், மேற்குவங்காளத்தில் 17 ஆயிரத்து 907 பேரும், ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 660 பேரும், தெலுங்கானாவில் 15 ஆயிரத்து 394 பேரும், கர்நாடகாவில் 14 ஆயிரத்து 295 பேரும், அரியானாவில் 14 ஆயிரத்து 210 பேரும், ஆந்திராவில் 13 ஆயிரத்து 891 பேரும், மத்தியபிரதேசத்தில் 13 ஆயிரத்து 370 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள பீகார், அசாம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா பஞ்சாப், கேரளா உத்தரகாண்ட், சத்தீஸ்கார் திரிபுரா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு சுமார் 1,200 முதல் 9 ஆயிரத்து 640 வரை உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் உயிரிழப்பு

கொரோனா மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 181 பேரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்தில் 62 பேரும், டெல்லியில் 57 பேரும், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா 19 பேரும், மேற்குவங்காளத்தில் 14 பேரும், உத்தரபிரதேசத்தில் 12 பேரும், ஆந்திராவில் 11 பேரும், அரியானாவில் 9 பேரும், மத்தியபிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் தலா 6 பேரும், பஞ்சாபில் 5 பேரும், ஜார்கண்டில் 3 பேரும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 2 பேரும், அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என 24 மணி நேரத்துக்குள் 418 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

4 மாநிலங்களில்

இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனா ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை காவு வாங்கி இருக்கிறது. அதில் முதல் இடத்தில் உள்ள மராட்டிய மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 610 ஆகும்.

2-வது இடத்தில் உள்ள டெல்லியில் 2,680 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். 3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் இந்த எண்ணிக்கை 1,827 ஆக உள்ளது. தமிழகத்தில் புதிதாக உயிரிழந்தவர்களுடன் சேர்த்து கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here