பொய்மையின் கழிப்பிடமாய்
மாறிப்போன சமூகத்தில்
உன்னொருத்தனுக்கு மட்டும்
சுத்திகரிக்கும் உணர்விருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை,,,,,
பிழைகளே பிழைப்பான
குற்ற உணர்வற்ற பிரபஞ்சத்தில்
சிறு பிழைக்கே மனம் வருந்திச் சாகும்
உறுத்தல் உனக்கிருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை,,,
புன்னகையில் வஞ்சம் புதைத்து
உயிரறுக்கும் உறவுகளுக்கிடையில்
சாயம் பூசாத புன்னகை உனக்கிருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
முகமூடிகளால் நிரம்பிய
முகங்களுக்கு மத்தியில்
முகமூடி தரிக்காமல் வாழும் நிஐம்
உனக்கிருந்தால் உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை,,,
சுய தேவைகளுக்காய்
பணம் புசிக்கும் வேதாளங்களாய்
மாறிபோன மனிதர்களுக்குள்
மனிதம் காக்கும் மாண்பிருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை,,,,
பிறர் உடைமைகளை
அடித்துப் பறிக்கும்
அதிகார வர்க்கங்களைக் கண்டு
உன்னுள்ளம் துடிக்குமானால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
மக்களுடைமைகளை தன்னுடைமைகளாக்கி மகிழும்
அரசியல் அசிங்கங்களைக் கண்டு
உன் இரத்தம் கொதிக்குமானால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
முதுமைகளை கரையேற்றாத பிள்ளைகளைக் கண்டு
சண்டைபிடித்து உலுக்கும்
ஆதங்கம் உனக்கிருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
அன்பின் வேர்களுக்குள் குடியிருந்து
அன்பைச் சிதைக்கும் புழுக்களாய்
மாறும் துரோக சிநேகங்களைக் கண்டு
உன் கண்ணில்
ஒரு சொட்டு நீர் வழிந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
சாலையோர மரமொன்றில்
படுத்துறங்கும் பரதேசி யாருக்கேனும்
சிறு போர்வை போர்த்தியிடும்
கருணை உனக்கிருந்தால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
காதல், கல்வி,பக்தி,மருத்துவம்,மனிதம்
யாவும் விற்பனையானதைக் கண்டு
உன் ஆத்மாவின் ஆதங்கச் சத்தம்
சமூகக் காதை உலுக்குமானால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
ஆணவம்,அகந்தை,அதிகாரம்,ஆடம்பரம்
அனைத்தின் ஆதிக்க நெரிசல்களைக்
கண்டு உன் மன புரட்சி கனல்கள்
சமூக கண்களில் எரியுமானால்
உன்னைத் தவிர
இங்கு தவறென்று ஏதுமில்லை
மழையை ரசித்து , வானவில்லை புசித்து
பனித்துளியை தொட்டுடைத்து,
வண்ணத்துப் பூச்சிகளை விரல் ஏந்தி
மலர்களின் தலை துவட்டி
நீ வாழ்வாயானால் உன்னைத் தவிர
வன்முறையாளனென்றும்
இங்கு எவருமில்லை
ஆகையால்தான் சொல்கிறேன்
கோபம் கொள்,
தட்டிக் கேள்,
துணிந்து நில்,
உரக்க பேசு,
கம்பீரமாய் சாகு,
கடைசி வரை
உண்மைக்கு மரியாதை
மனிதர்களால் நிகழாது
மரணத்தால் நிகழும்
மறந்து விடாதே!
-சுயம்பு