ஆழ்மனக் கனவு…

0
9

உண்மைகளை ஊமையாக மாற்றிவிட
கட்டளையிடுகிறது
ஆழ்மனக் கனவொன்று…
அடரிருளின் மணத்தை
நுகர்ந்தபடி விரைந்திருக்கும்
எனது தனிமையின் பயணத்தில்
கனவின் தொழிற்சாலையாய்
தினமொரு நினைவினை சுமந்தபடி
சுற்றித் திரிகிறது மனது…

கனவின் மழைத்துளிகள்
பட்டுச் சிதறுகையில்
ஆழ்மனதின் எண்ணவோட்டங்கள்
இரவைப் பருகும் பறவையாய்
மறக்கவியலாத நினைவொன்றை
அசைபோட்டபடி
முழுவதுமாய் பருகிச் செரிக்கிறது
ஆழ்மனக் கனவொன்று…

கனவின் இடுக்குகளில் நுழைந்து
புதைமணலின்
அடியாழம்வரை வேர்விட்டு
துளிர்க்கிறதுன் நினைவுகள்..
பின் ஏனோ தெரியவில்லை
இலையுதிர் காலமாய் உதிர்கிறது
ப்ரியங்களும் காட்சிப்பிழையாய்..

புதியதொரு உணர்வுலகத்தின் பெருவெளியில்
தொடரும் உரையாடலில்
நெருடிய சொற்களனைத்தும் ஒன்றிணைந்து அசைபோட்டபடியே
இதோ…
சலனமற்ற நதியாய்
தன் பயணமதைத் தொடர்கிறது
ஆழ்மனக் கனவொன்று…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here