ஆடல்வல்லான் என்று போற்றப்படும் ஸ்ரீநடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் நடைபெறும். சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம்.
சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனக சபையில் மாலை வேளையிலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை நான்கு மணிக்கும், ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசியில் கனக சபையில் சாயங்கால வேளையிலும், புரட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை வேளையிலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், ராஜ சபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை நான்கு மணிக்கும், மாசி மாதம் பூர்வபட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை வேளையிலும், பூலோக கைலாசம் என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிதம்பரம், திருவாரூரைப் போல, உத்தரகோசமங்கை, கோனேரிராஜபுரம், ஆவுடையார்கோயில், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன், திருச்சி அருகில் உள்ள திருவாசி திருச்சி & சென்னை சாலையில் உள்ள ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர், நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் கோயில், நெல்லை அருகில் உள்ள ராஜவல்லிபுரம் செப்பறைக் கோயில் முதலான பல ஆலயங்களில் ஆனித் திருமஞ்சன வைபவம் விமரிசையாக நடைபெறும்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் எனும் அற்புதமான தலம் உள்ளது. இங்கே உள்ள ஸ்ரீகயிலாயநாதர் கோயிலில் ஓம் என்ற வடிவம் கல்லில் செதுக்கப்பட்ட திருவாசி, ஸ்ரீநடராஜரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் அமையவில்லை என்கிறார்கள்.
இங்கும் ஆண்டிற்கு ஆறு முறை மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மற்ற நாட்களில் நடராஜர் சந்தனக்காப்புடன் திருக்காட்சி தருவார்.
சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில், ரிஷப தாண்டவ மூர்த்தி என்னும் விசேஷமான பிரதோஷ நடன மூர்த்தி அருள்பாலிக்கிறார். பத்துக் கரங்களுடன் நந்தி மீது நடனமாடிய நிலையில் காட்சி தரும் இவர் பிரதோஷத்தன்று மட்டும் அருளாசி வழங்குவார். மற்றபடி இவரை சந்நிதியில் தரிசிக்கலாம்!
திருச்சிக்கு அருகில் உள்ளது வயலூர். முருகப்பெருமானின் முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே, சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீஅக்னீஸ்வரர். மேலும் சம்ஹாரதாண்டவரான நடராஜரின் திருஉருவம் விசேஷமானது. அதாவது சதுர தாண்டவர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள நடராஜரின் வலது காலின் உள்ளங்கால் தெரியும்படி சற்று மேலே வளைந்த நிலையில் காட்சி தருகிறார்.
ஸ்ரீநடராஜரின் திருமுகம் அக்னியை நோக்கியுள்ளது. மேலும், காலுக்கடியில் வழக்கமாக இருக்கும் முயலகன் இல்லை. இவரைச் சுற்றித் திருவாசியும் இல்லை. சடைமுடி இல்லை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து படவேடு செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது காமக்கூர். இங்கே உள்ள ஸ்ரீசந்திரசேகரர் கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானை சதுர தாண்டவமூர்த்தி என்பர். கால்கள் இரண்டையும் மடக்கி முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தப்படி ஆடும் திருக்கோலம், சிலிர்ப்பை ஏற்படுத்துவது நிச்சயம்!
ஆனித் திருமஞ்சன நாளில், ஆடல்நாயகன் ஸ்ரீநடராஜப் பெருமானை எந்த ஆலயத்தில் சென்று தரிசித்தாலும் பலன்கள் உறுதி. கலை கேள்விகளில் சிறந்து விளங்கலாம். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அந்த நாளில் ஆலயம் செல்வோம். ஆடல்வல்லானின் அருள் பெறுவோம்!
நடராஜருடைய கூத்தில்
பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்
நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன.
*பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்
*நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன.
அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.
பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்
அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக் கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான் விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும் செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும் செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம் உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச் சான்றாக இருந்து வருகிறது.
உலகில் ஒருவர் அடையத்தகுந்த பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும் யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை, மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக் கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும் அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப் பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க ஆடுகின்றார்.
அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில் விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய் உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை, அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள் காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.
தாருகா வனத்தில் வேதங்களில் சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார். முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர் சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள் புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின் மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும், மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர். தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும் தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார், அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்தார்.
பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும் இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில்…
தில்லை நடராஜர் சிலை உருவான ரகசியம்
ஆடல் அரசன் அம்பலக் கூத்தன் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஈசன் மகேசன் அம்பலக் கூத்தன் வலது திருப்பாதம் ஊன்றி, தூக்கிய மறு பாதத்தின் பெருவிரல் நுனி பூமியின் நடு மையப்புள்ளியை குறித்தும், வலக்கையில் துடியும், இடக்கையில் அனலும் ஏந்தி கருணை புன்னகையோடு உலகத்தில் ஒவ்வொரு அணுவையும் இயங்கச்செய்யும், “அழகே உருவான திருஉருவ நடராஜர் சிலை” நாம் வழிபட எப்படி கிடைத்தது ?!!!
சோழ மன்னர்கள் சைவத்திற்கு வெகுவாக தொண்டு படைத்துள்ளார்கள் என்பது நாம் அறிந்தது அல்லவா?
ஸ்தல யாத்திரையாக ஒவ்வொரு கோவிலாக சென்று ஈசனை வழிபட்டு தில்லையை வந்தடைந்தான் இரணியவர்மன். அங்குள்ள சிவகங்கை திருக்குளத்தில் புனித நீராட எண்ணி குளத்தினுள் இறங்கி மூழ்கினான். அவன் செவிகளில் இனிய ஒலியாக ‘ஓங்காரம்’ ஒலித்தை அவன் உணர்ந்தான். மிக்க ஆச்சரியத்தோடு நீருக்குள் இருந்து எழுந்தான். அந்த ஓங்காரத்தின் இனிய ஒலி நின்றுவிட்டது. அவன் மறுபடியும் நீருக்குள் மூழ்கிய போது ஓங்காரத்தின் ஒலியை இனிதே உணர்ந்தான். மிக்க ஆச்சரியத்தோடு இன்னும் நீரின் ஆழத்திற்கு சென்றான். ஓங்காரத்தின் ஒலி இன்னும் சப்தம் அதிகமாவதை உணர்ந்தான். மிக ஆர்வமாக ஆழத்திற்குச் செல்ல செல்ல ஒலியும் கூடியதை உணர்ந்ததோடு அவன் கண்கள் இன்னுமொரு திருக்காட்சியையும் கண்டது. சோழமன்னன் மெய்சிலிர்த்துப் போனான். விரித்த கண்களை இமைக்காமல் அந்த “திருக்காட்சியை” பதிய வைத்துக் கொண்டான்.
பரவசத்தோடு குளத்திலிருந்து மேலெழுந்து வெளியே வந்தவன் நேராக அரண்மனைக்குச் சென்றவுடன் தான் கண்ட அந்தக் திருக்காட்சியை தன் கைப்பட ஓவியமாக வரைந்தான்.
மிகச்சிறந்த சிலை வடிக்கும் சிற்பிகளை வரவழைத்து தான் வரைந்த ஓவியத்தையும் சிலை செய்வதற்கான தேவையான சொக்கத் தங்கத்தையும் கொடுத்து, செம்பு கலவாமல் நான் வரைந்த ஓவியம் போன்று 48 நாட்களுக்குள் சிலை செய்து முடிக்க வேண்டும் என்றும், தவறினால் கழுவில் ஏற்ற படுவீர்கள் என்றும் கட்டளையிட்டான்.
47 நாட்கள் முடிந்து அரசன் சொன்னதுபோல் சிலை செய்ய இயலாமல் சிற்பிகள் செய்வது அறியாது திகைத்து நின்றதை பெரும் சித்தரான போகர் தன் ஞானத்தால் கண்டுணர்ந்தார். தன் சிஷ்யர் கருவூரார் சித்தரை அழைத்து மன்னன் விரும்பிய சிலையை நீ முடித்துக் கொடுத்துவிட்டு வரவும் என்றும், அதற்கான உபாயத்தையும் கூறி அனுப்பினார். குருவின் திருவாக்கை தலைமேற்கொண்டு கருவூரார் சித்தர் அந்த சிற்ப்பிகளிடத்தில் வந்தடைந்தார்.
இன்னும் மன்னன் சிலை செய்ய கொடுத்த கெடுவிற்கு ஒருநாள் மட்டுமே இருப்பதாகவும் தங்களால் சிலையை செய்யமுடியவில்லை என்று சிற்பிகள் வருத்தத்துடன் கூற, ஒருநாள் தேவையில்லை ஒரு மணி நேரம் போதும் என்று கூறி அறையினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். தன் சொற்படி ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் மற்ற சிற்பிகளை உள் சென்று ‘சிலையை’ காணும் படி கூறினார். சென்ற சிற்பிகள் தங்களையே நம்பமுடியாமல் பரவசப்பட்டு நின்றார்கள்.
குருவின் திருவார்த்தையை முடித்து விட்டு கருவூர்சித்தர் அங்கிருந்து கிளம்பினார். மன்னனுக்கு சிலை செய்து முடித்துவிட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னரும் நீராடி தன் உடலெங்கும் நீறு பூசி பரவசத்தோடு அச்சிலையை காண வந்தார். கண்டவர் கண் கலங்கி நின்றார். தான் வரைந்த ஓவியத்தை விட இன்னும் செவ்வனே அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது கண்டு மனம் உருகி நின்றார்.
மனம் மகிழ்ந்து சிற்பிகளுக்கு தகுந்த சன்மானம் வழங்க முற்படுகையில் சிலையை பரிசோதித்து பின் பரிசு கொடுக்கலாம் என்று மந்திரி, மன்னன் இடத்தில் கூற, சிலை செய்த தங்கத் துகள்களை பரிசோதிக்கப் பட்டது. செம்பு கலந்திருப்பது கண்டறியப்பட மன்னன் மிகுந்த கோபம் கொண்டான்.
அரசன் சிற்பிகளுக்கு தண்டனை வழங்க முற்படுகையில், அதுவரை அமைதி காத்த சிற்பிகள் மன்னவரே மன்னிக்க வேண்டும். இந்த சிலையை செய்தது ஒரு சிவனடியார். நாங்கள் அல்ல என்று உண்மையை உடைத்தனர்.
மன்னன் உத்தரவுப்படி கருவூராரும் வரப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தண்டனையை வழங்கி நேரத்தை வீணடிப்பதை விட சிலையை ரசிக்கவே மனம் எண்ணவும் ஏங்கவும் செய்தது மன்னனுக்கு. நாளை அவருக்கு தண்டனை வழங்குவதாக சொல்லி சிலையை மாளிகைக்கு எடுத்துச் சென்றார். அங்கு சென்ற மன்னர் வடிவினனை கண்டு கண்டு மனம் மகிழ்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அவ்வேளையில் போகர் சித்தர் தன் ஐந்து சீடர்களோடு அங்கு வந்தார். “ஊன் உருக கண்ணில் நீர் பெருக நீ கண்டுகளிக்கும் இந்த சிலையை செய்து கொடுத்தவரை சிறையில் அடைப்பதுதான் உன் அரசாட்சியின் தர்மமோ?!!” என வினவினார். “நான் கூறியபடி எனது சீடன் இந்த சிலையை செய்து கொடுத்தான். அதை பாராட்டாமல் சிறை வைத்தது சரியா?” எனக் கேட்டார்.
“சொக்கத் தங்கத்தில் செய்யவே நான் கட்டளையிட்டேன் அதில் செம்பு கலந்தது தவறு இல்லையா?” என்று பதிலளித்தான் மன்னன்
“மன்னா உனக்குத் தெரியாத இரண்டு விஷயங்களை கூறுகிறேன். தெரிந்துகொள். சொக்கத் தங்கத்தில் சிலை வடிக்க இயலாது. செம்பு கலக்கப் பட்டே ஆகவேண்டும். மேலும் தங்கச் சிலைக்கு தீப ஆராதனை காட்டும் பொழுது அந்த ஒளியானது, சிலையின் மீது பட்டு அதை தரிசிப்பவர்களின் பார்வையின் ஒளியை இழக்கச் செய்யும். ஆகவே என் உத்தரவின்படி செம்பும்,சில மூலிகைச்சாறும் கலந்தே எனது சிஷ்யன் சிலை வடித்தான். அறியாமல் தவறு கண்டாய். இச்சிலையை நானே எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி தன் சீடர்களிடத்தில் தாங்கள் கொண்டு வந்த தங்கத்தை தராசில் ஒரு தட்டிலும் சிலையை மறு தட்டிலும் வைக்கச் சொல்லி உத்தரவிட்டார். சிலைக்கு ஈடான தங்கத்தை நீர் எடுத்துக் கொள்ளும். சிலையை நான் எடுத்துச் செல்கிறேன்” என்று சொல்லி சிலையுடன் புறப்பட்டார்.
மன்னன், போகர் சித்தரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரி சிலையை தன்னிடமே கொடுத்து விடும்படி கதறி அழுதான். அதற்கு என் சிஷ்யன் சிறையிலுள்ளானே என்றதும், தாங்கள் அழைத்தால் தங்களது சிஷ்யன் உடன் இங்கு வந்து விடுவாரே என்று பணிவோடு சொன்னதும், போகர், கருவூராரா வா என அழைத்தவுடன் அவரும் அங்கு தோன்றினார். மன்னன் அவரது கால்களிலும் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
அதன்பின் கருவூராருக்கு, இன்னும் சில காலங்கள் இங்கு தங்கி இருந்து மன்னனுக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தி விட்டு வா என்று உத்தரவிட்டு கிளம்பினார் போகர் சித்தர்.
அதன் பிறகு சோழ மன்னனை தில்லைக்கு அழைத்துச் சென்று தற்போதுள்ள சிதம்பரத்தில் சிற்சபையில் அந்த சிலையை எங்கு எப்படி எந்த முறையில் எந்த அளவில் சபை அமைய வேண்டும், மற்ற தெய்வங்களை எப்படி எங்கு பிரதிஷ்டை வேண்டும் என தெளிவுபட எடுத்துக்கூறி சாஸ்திர முறைப்படி அந்த சிற்சபையை அமைத்து கொடுத்தார் கருவூரார் சித்தர்.
திருச்சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானை இப்படியாகத் தான் நாம் கிடைக்கப் பெற்றோம்.