அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி

0
71

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில், புதுச்சேரி

விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஆலயம், பல கட்டங்களில் பல சிற்றரசர்களால் புதுப்பிக்கப்பட்ட ஆலயம்.

மூலவர்: மணக்குள விநாயகர்
தீர்த்தம்: மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.
பழமை: 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: மணக்குளத்து விநாயகர்
ஊர்: புதுச்சேரி

தலவரலாறு

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.

இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

தலப்பெருமை

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி இரு குணங்களை பெண் வடிவில் வைத்து மக்களுக்கும் இந்த குணங்கள் துணை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார். இந்த சித்தர் விநாயகரிடம் வேண்டி திடீர் என்று பக்தர்களில் ஒரு சிலருக்கு ஆகாயத்திலிருந்து தங்க காசு, வெள்ளி காசு போன்றவற்றை வரவழைத்து தருவாராம்.
பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் புதுச்சேரியில் இருந்த போது தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபடுவார். இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

பிரெஞ்சுகாரர்களை திணற வைத்த நமது “மணக்குளவிநாயகர் “!
புதுச்சேரி யூனியனில் இருக்கும் மணக்குல விநாயகர் கோவிலானது 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில். பிரெஞ்சுகாரர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் அன்றைய பாண்டிச்சேரி பகுதிகள் வந்தது, அப்போது மணக்குள விநாயகர் கோவில் அருகே இருந்த இடங்களை வர்த்தக மையமாக மாற்றி கிறிஸ்தவ தேவாலயம் கட்ட நினைத்தனர். இதனால் அப்பகுதியில் இருந்த “புவனேஷ்வர விநாயகர் ” (மணக்குள விநாயகர்) சிலையை சிதைக்கும் நோக்கத்தில் மதவெறி கொண்ட ஈன மடையர்கள் பிரெஞ்சு கூட்டம் 1666 ஆம் ஆண்டு விநாயகர் சிலையை அருகில் இருக்கும் கடலில் வீசி எறிந்து மகிழ்ந்தது.
மறுநாள் காலையிலேயே விநாயகர் சிலையானது மீண்டும் அதே இடத்தில் வந்திருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூடர்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் என மூன்று முறை கடலில் வீசவே அடுத்த நாளே அதே இடத்தில் தரிசனம் அளித்தார் “மணக்குள விநாயகர் “.
பயந்து பதறியோடிய பிரெஞ்சு கூட்டம் விநாயகர் கோவிலை சீண்டாமல் ஓடி ஒழிந்து போனது. விநாயகரின் பெருமையையும் சக்தியையும் கண்டு அகம் மகிழ்ந்த மக்கள் கூட்டம் கோவிலை புதியதாக கட்டி விநாயகரை வணங்கினார்கள். இதற்கு பிரெஞ்சுகாரர்களும் தங்களது ஆதரவை அளித்தனர்.
வங்க கடலோரம் வாசஸ்தலம் புரியும் நம் மணக்குல விநாயகரின் பெயர் புவனேஷ்வரர் கணபதி . இங்கே விநாயகர் நர்த்தன விநாயகராக காட்சியளிக்கிறார். மணக்குள விநாயகர் என்ற பெயரானது மணல் + குளம், அதாவது கடற்கரை மணல் அருகில் நல்ல நீர் குளம் இருப்பது அரிது, அது வற்றாத ஊற்றாக இருப்பது மிக அரிது, கடற்கரையருகே, மணல் குளம், மணக்கும் குளம் இருப்பதால் “மணக்குள ” விநாயகர் என மக்களால் அழைக்கப்படுகின்றார்.

சிறப்பு

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ மூர்த்தி கொண்டு செல்லப்படுகிறது.

கிணற்றின் மீதுதான் மூலவர் :

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

திருவிழா

விநாயகர் சதுர்த்தி – இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள்.

பிரம்மோத்சவம் – ஆவணி – 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் – 10 நாட்கள் திருவிழா

இது தவிர மாதந்தோறும் சங்கடகர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிடேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கோரிக்கைகள்:

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் இசுலாம், கிறித்தவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். பாண்டிச் சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்துவிநாயகர்.

நேர்த்திக்கடன்

உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 5.45 – 12.30 மணியளவிலும் மாலை 4.00 முதல் 9.30 மணிவரை மணக்குள விநாயகரை தரிசிக்கலாம். பண்டிகை தினங்களில் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல் வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று ஒரு சிறப்பான பழமைவாய்ந்த விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபடுவோம்.

ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here