அன்பரசிக்கு ஆழ்ந்த இரங்கல்…

0
50

நேற்று தம்பி சாமித்துரையிடம் இருந்து அழைப்பு வந்தது. திருவுடையான் மகள் அன்பரசி சாலை விபத்தில் இறந்து போனதாக. ஒரு வினாடி ஒன்றுமே ஓடவில்லை! தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் முதல் முறையாக திருவுடையான் தன்னுடைய பிள்ளைகளின் பெயர் சொல்லி ( அன்பரசி, பாரதி) அறிமுகம் செய்து வைத்தது நினைவுக்கு வந்தது.

2016 ல் அவருக்காக வருந்திய நெஞ்சம் அமைதியடைவதற்குள் இப்படி ஒரு சோகம்.

அவர் எனக்காகப் பாடிய தருணங்களும் பல வகைகளிலும் அவரைக் கேள்வி கேட்டுக் குடைந்துகொண்டேயிருந்ததும் அதற்கு அவர் பொறுமையாகப் பதிலளித்த இனிய பொழுதுகளும் என் நினைவில் என்றும் நீங்காதவை.

அன்பரசிக்கு ஐ. ஏ. எஸ். படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அஞ்சல் துறையில் பணியேற்று இரண்டு வாரங்களில் இந்த இளங்குருத்தை விபத்து அள்ளிக் கொண்டது.

ஆறுதலோ தேறுதலோ சொல்ல முடியாத பேரிழப்பு அந்தக் குடும்பத்தாருக்கு.

சொரிமுத்தையன் கோயிலுக்கு திருவுடையான் தாய்மாமன் மகன் மகாலிங்கம் குடும்பத்தாருடன் வந்திருந்த போது அன்றைய நாள் முழுவதும் அவர்களுடன் இருந்தேன். திருவுடையான் வரவில்லை. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை.

தபேலா வாசித்துக் கொண்டே தனது கணீர்க்குரலால் வசீகரித்த கலைஞன் திருவுடையான் நம்மிடையே இல்லை. குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று மட்டும் அறிந்திருந்தேன்.

வயலின் வாசிக்கும் அந்தச் சிறுமி இப்போது இல்லாமலாகி விட்டாள்!

வழக்கமான எந்த வார்த்தைகளும் இங்கு பலனற்றுப் போய்விட்டன.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மா. பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here