அண்ணாமலைப் புதூர் தென்திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வரலாறு .

0
293

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்ற ஆன்மீக அன்பர்கள் கூடஅதிகம் அறிந்திருக்காத ஒரு திருக்கோயில் இது.

வடக்கே காசி போல தெற்கே தென்காசி என்று தென்காசி திருக்கோயிலுக்கு
ஒரு சிறப்பு உண்டு.வடக்கே திருப்பதி போல தெற்கே தென்திருப்பதி என்ற புகழ் மேலத் திருவேங்கட நாதபுரம் பெருமாள் கோயிலுக்கு உண்டு.
அது போல வடக்கே திருவண்ணாமலை போல் தெற்கே…ஏதேனும் கோயில் இருக்கிறதா…?
ஆம் அப்படி ஒரு கோயில் இருக்கின்றது. அந்த திருக்கோயில்
நமது தென்காசி மாவட்டத்தின் ஊத்துமலை அருகில் அண்ணாமலைப் புதூர்
எனும் ஊரில் இருக்கிறது. இந்த திருக்கோயில் தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது

அண்ணாமலைப் புதூர் எங்கே இருக்கிறது ? அதன் விஷேசம் என்ன?… பார்க்கலாமா…

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில்
மருக்காலங்குளம் விலக்கு என்ற இடம் உண்டு இந்த விலக்கிலிருந்து
10 கி.மீ பயணித்தால் அண்ணாமலைப்புதூர் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் தென்திருவண்ணாமலையை காணலாம்

இந்த ஆலயத்தை தென்திருவண்ணாமலை என்று அழைப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. இந்த கோயில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து ஒரு சித்தர் இந்த வட்டாரத்திற்கு வெள்ளையர்கள் காலத்தில் வந்திருக்கிறார். அவர் பெயர் பெரியசாமி. அவரின் சிறப்பு என்னவென்றால் ஓவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் தனது தலையில் துளசி மாலையை சும்மாடு போல் மடக்கி கட்டிக் கொள்வார். அதற்குள் எண்ணெய் விட்டு தீபம் எரியவிடுவாா் இதை ஊரே ஒரு அதியசமாக பார்த்தது வெறும் தலையில் ஒரு சாமியார் தீபம் எாிய விடுகிறார் என்பது அந்நாளில் அனைவரையும் அதிசயம் கொள்ள செய்தது.

அவர் சுற்றி திரிந்த பண வடலி சத்திரம் பகுதியில் அப்போது கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருந்ததால் அவர்களால் இந்த சித்தர் விரட்டப்பட்டு அண்ணாமலைப்புதூர் பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது அது ஒரு ஊராக இருக்கவில்லை. மனித நடமாட்டமே இல்லாத காடாக இருந்திருக்கிறது.

சித்தர் பெரியசாமி இந்த இடத்திற்கு வந்தவுடன் இந்த பகுதி திருவண்ணாமலையைப் போல இருக்கிறதே என்று ஆச்சரியம் கொண்டு
அங்கேயே அண்ணாமலையாருக்கு சிறிய கோயில் ஒன்றை கட்டினாா்.
அங்கே அவர் வழிபட்ட ஐம்பொன்னாலான அண்ணாமலையார் சிலை
இன்னமும் கர்ப்பகிரஹத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது.
மூலவராக கல்லால் ஆன சிவலிங்கம் உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ளது போலவே இங்கும் ஒரு பெரிய மலை உள்ளது.
மலையானது அங்கே சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் உள்ளது.
இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் உள்ளது.

இங்குள்ள மலைமீது சப்தகன்னிமார் கோவிலும் உள்ளது. அங்கே இருப்பதை போலவே இங்கேயும் தெப்பக்குளம் இருக்கிறது. இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அண்ணாமலையாருக்கு திருக்கோயிலை உருவாக்கிய
சித்தர் பெரியசாமி ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும்
மலை மீது தீபம் எரிய விடுவாா் திருவண்ணாமலையில் தீபம் எரிவதை போலவே நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே என்று ஆச்சரியப்பட்டனா் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த மலையை மறுநாள் பகல் பொழுதில் வந்து பார்த்தால் சித்தர் பெரியசாமியும் தன் தலையில் தீபத்தை எரியவிட்டு தவக்கோலத்தில் இருப்பாா்.

இந்த அதிசயத்தை கண்ட கிராம மக்கள் அவரை வழிபடத் துவங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக கோயிலை சுற்றி குடியேறவும் துவங்கினர்.
திருக்கார்த்திகை நாளன்று தன் தலையில் தீபமேந்திய சித்தர் அந்த தீபத்துடன் வீடு வீடாக சென்று அருளாசியும் வழங்குவாா் தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடும் ஆனாலும் அவருக்கு ஒன்றும் செய்யது ஒருமுறை தீபத்திருநாளன்று பெரியசாமி சித்தா் தலையில் விளக்கு எரியும் போது கல்லூரி மாணவர்கள் 4, 5 பேர் சோ்ந்து கொண்டு கேலியாக பொய் விளக்கு என சொல்ல செல்லமாக ஈசன் சிரிப்போடு தன் வலது கையால் முகத்தில் வழிந்தோடும் எண்ணையை அவர்கள் பக்கம் ஒருவர் முகத்தில் தெளிக்க அவர்க்கு அடுத்த நொடியே பொக்களமாக வந்துவிட்டது.

அவரை வழிபட வந்த மக்கள் அவருக்கு காணிக்கையாக நவதானியங்களை வழங்குவார்கள். அவற்றை சித்தர் பெரிய குலுக்கைகளில் சேமித்து வைத்திருப்பாா் அதை ஒரு குடும்பத்தினர் திருட முயன்ற போது சாமியார்
நான் சுமக்கிற நெருப்பை நீயும் உன் தலைமுறையினரும்சுமக்க வேண்டும்
என்று சாபம் கொடுத்து விட்டார். அந்த குடும்பத்தினர் வழி வழியாக இன்றும்
தங்கள் தலையில் தீபம் ஏந்தி கார்த்திகை தினத்தின் மறுநாள்
வீதி உலா வருகின்றனர்.

பின்னாட்களில் ஜீவசமாதி அடைந்த பெரியசாமி சித்தரின் சமாதி கோயிலை ஒட்டியவாறே அமைந்திருக்கும் மிகுந்த அருளாட்சி நிறைந்த கோயிலாக இது நம்பப்படுகின்றது. ஊர் மக்கள் ஒற்றுமையாக கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம் பல கீ.மீ. அப்பால் இருந்து பார்த்தாலும் சுடர் விட்டு பிரகாசிப்பதைநாம் காண முடியும்.

அதே போல் தலையில் தீபம் சுமக்கும் வைபவமும்ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. இந்த திருக்கோயிலுக்கென்று ஒரு சிறிய தேரும் இருக்கின்றது. இந்த தேர் ஓடுவது கூட திருக்கார்த்திகை அன்று நள்ளிரவில் தான்.

இவ்வளவு பழமையும் ஆன்மீக செழுமையும் கொண்டஇவ்வூரின் புகழ் இதுவரை வெளியுலகம் அறியாதது. இத்தனைக்கும் இந்த ஊரில் படித்தவர்களும் அரசுத் துறையில் பெரிய அதிகாரிகளாகவும் பலர் இருந்து வருகின்றனர். ஆனாலும் இந்த கோயிலின் சிறப்பு இன்னும் பல பேருக்கு தெரியாது. இந்த ஊரின் பெருமைகளை,வரலாறுகளை சொல்லும் சிறிய புத்தகம் கூட கிடையாது. திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலை எப்படி ஜொலிக்கிறதோ அது போல் தென்திருவண்ணாமலையாகிய அண்ணாமலைப்புதூரும் வருங்காலங்களில் ஜொலிக்க வேண்டுமென்றால் இந்த செய்தி நிறைய ஆன்மீக மெய்யன்பர்களிடம் போய் சேர வேண்டும்.

-இந்த பதிவை படிக்கும் நீங்கள் இந்த ஊரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவோ அல்லது கோயிலுக்கு செல்ல ஆர்வமுடையவர்களாக இருப்பின்,
தொடா்புக்கு…
மகேந்திரன்
88708-68880
செளந்தராஜன்
95859-40166
மதன் முருகன்
73732-30964

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here